Saturday, January 15, 2022

விதி ❤️ 

.

முன்கூட்டியே,

விதியாக்கப்பட்டவைகள் தான்

வாழ்க்கை என்ற வடிவில்

வந்துகொண்டிருக்கின்றன.

நான், நீங்கள், அவர்கள் செய்வதென்று 

எதுவுமே புதிதாக இங்கில்லை.


கெடுதி என்று நினைக்கும் ஒன்றில் 

பின்னாளில், 

நலவை வைத்திருப்பான் இறைவன். 

நலவேதான் என்று பேராசை கொள்ளுமொன்றில்,

கெடுதியொன்றும் மறைக்கப்பட்டிருக்கலாம்.

இரண்டையுமே நாம் அறியோம்.

அவனே அறிவான்.


ஆதலால், 

நீதியுங், கருணையும் கலந்த முறையில் 

நிமிடங்களின் வழியே

நகர்ந்து செல்வது மட்டும்தான்

நமக்கிருக்கின்ற புத்திசாலித்தனம்.


தீராப் பிரயத்தனம் செய்து 

தயாரான முயற்சி ஒன்றில்

தவறிய விதியும் உண்டு.

தவறப்போகும் முயற்சியொன்றுக்கான

முன்னாள் அனுபவத்தில் இருந்து

முன்னிலை அடைவொன்று 

பின்னாளிலும் இருந்திருக்கிறது.

அது அப்படித்தான்.


இருளான பின்னர்தான்

நட்சத்திரங்கள் தெரிவது போல

இதயம் கிழிக்கப்பட்ட கணங்களால் தான்

களிப்பின் கணதியைக் 

கண்டுகொள்ள முடிகிறது.

இல்லையா?


கோபமூட்டிய யாருக்கும் 

சட்டென்று சாபமிட்டு விடாதீர்கள்.

இறைவன் நாடாத ஒன்றை - அவர்கள்

எப்போதுமே செய்ய இயலாதவர்கள்.

பொறுமையின் விளைச்சல் 

பலன் மட்டும் தான்.

பொறுமையாக இருங்கள்.


எனக்கென்று விதிக்கப்பட்டது

உங்கள் தட்டுக்கு வராது.

உங்களுக்கென்று விதிக்கப்பட்டது

எனக்கும் வந்து சேராது.

விதியில் இல்லாத 

மதியில் முளைத்த இலக்கிற்காக

விடிய விடிய உழைப்பதுவும் 

விதிதான்.

வேறு பலன் கொண்ட விதி.


தடுத்தவன் என்று நினைத்து 

தவறாக ஒருவரை விரல் நீட்டாதீர்கள்.

அந்த விதிக்கு - அந்த ஆன்மா ஒரு கருவி.

அவ்வளவுதான்.

தடுத்தவனைக் கண்டறிவீர்களாயின்

கோபம் வராது.

கண்ணீர்தான் வரும்.


ஆதம் (அலை)

தடுக்கப்பட்ட மரத்தை நெருங்கியதும் விதிதான்.

அஸாசில்

சிரம் பணிய மறுத்ததுவும் விதிதான்.

ஆதம் (அலை) 

பிழையைத் தனதென்று ஏற்றுணர்ந்தார்.

உயர் நிலையடைந்தார்.

அஸாசிலோ - இறைவன் மீதே பழி கூறினான்.

எடுத்தெறியப்பட்டான்.


பிரித்தறிகின்ற பகுத்தறிவை

பயன்படுத்துகிறோமா ... இல்லையா ...?

என்பதுதான் நமக்கான பரீட்சை.

.

படிப்பினை ❤️ இருக்கிறது.

.

முஹம்மத்❤️ஸன்ஸீர்.

16.12.2K21, வியாழன்.

No comments:

Post a Comment