அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரக்காதுஹூ.
.
இறைவனால் வழங்கப்படும் அமானிதங்கள்.
அதேவேளை அவர்கள் "அருளும் சோதனை"யும் என்றும்
அவனே அவனது அல்குர்ஆனிலே சொல்கிறான் (08:28).
குழந்தை வளர்ப்பில் மிக முக்கிய வயதெல்லை 21 ஆண்டுகளாகும்.
அதனை மூன்றாகப் பிரித்துப் பின்வரும் ஆலோசனைகளை
அறிஞர்கள் வழங்குகிறார்கள்.
முதல் 7 வயது.
*****************
இது பிரதானமாக பிள்ளைகள் விளையாடுகின்ற வயது.
சொற்கள், சிறிய சிறிய வசனங்கள் போன்ற
தாய்மொழியின் அடிப்படைக் கட்டமைப்புக்களை
வீட்டுச் சூழலில் தினசரி செவிமடுப்பதன் மூலம்
கற்றுக்கொள்கின்ற பருவம்.
அவர்களின் மூளை உச்சகட்ட விருத்தி அடையும் காலப்பகுதி.
ஆதலால், பெற்றோரின் அன்பும், அரவணைப்பும், கரிசனையும்
அதிகம் அவசியமான பருவம்.
அரவணைப்பு மற்றும் அள்ளிக்குலாவுதல் மூலம்
மூளைக் கலங்களினிடையே அதிக இணைப்புக்கள் உருவாகின்றன என்றும்
இந்தப் பிணைப்பின் அளவில் தான்
ஆரோக்கியம், ஞாபகசக்தி, நிர்பீடனம் போன்றனவும் தங்கியிருப்பதாகவும்
ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தின்
ஓர் ஆய்வில் படித்ததும் நினைவில் இருக்கிறது.
இந்தக் காலப்பகுதியில் பிள்ளை எதிர்கொள்ளும்
யுத்தம், வீட்டு வன்முறைகள், வீட்டுச் சண்டைகள்,
குண்டு வெடிப்புக்கள், திடீர் அச்சுறுத்தல்கள் போன்ற
அதீத (Extreame) உளத்தாக்க நிலைமைகள்
அவர்களின் விருத்தியைப் பெரிதும் பாதிக்கும் என்றும் அந்த ஆய்விலே இருந்தது.
சுமார் ஆறு விதமான அதீத (Extreame) உளத்தாக்க நிலைமைகளை
இந்தக் காலப்பகுதியில் அடிக்கடி எதிர்கொள்ளும் ஒரு பிள்ளை
அதன் 18 வயதின்போது
அதே வயதையொத்த பிள்ளையின்
வளர்ச்சியையும் விருத்தியையும் கொண்டிருக்காது.
உதாரணமாக,
ஒரே காலத்தில் நடப்பட்ட இரு தென்னங் கன்றுகளில்
ஒன்றினுடைய குருத்துப் பகுதியில் கருவண்டின் தாக்கம் ஏற்படும்போது
சுமார் 10 ஆண்டுகளின் பின்
அவ்விரு தென்னங் கன்றுகளும்
ஒரே வளர்ச்சி, விருத்தி, விளைச்சலைத் தருவதில்லை.
08 -14 வயதுக் காலம்.
*************************
இக்காலப்பகுதி
குழந்தைகளுக்கு ஒழுக்கத்தைக் கற்றுக்கொடுக்க வேண்டிய காலமாகும்.
07 வயதானதும் தொழுகையைப் பழக்குமாறும்,
10 வயதாகியும் தொழவில்லையாயின்
கண்டிப்புடன் அதனை ஏற்படுத்துமாறும் இஸ்லாம் வலியுறுத்துகிறது.
அடிப்படை ஒழுக்கங்கள் இந்த வயதில் ஏற்படுத்தப்படவில்லையாயின்
பிற்காலத்தில் அதனை ஏற்படுத்துவது மிக மிகச் சிரமானதாக இருக்கும்.
எப்போதும் கடைப்பிடிக்க வேண்டிய
உண்மையே பேசுதல், நேரத்தை வீண்விரயம் செய்யாதிருத்தல்,
இறைவனை நன்றியுடன் நினைவுகூறுதல் போன்ற அடிப்படைப் பண்புகள்,
எந்தச் சூழலில் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும்,
பெரியவர்களை மதித்து நடக்கின்ற பண்பு போன்றன
இப்பருவ காலத்தில் நிலைநிறுத்தப்பட வேண்டும்.
"உங்கள் பிள்ளைகளுக்கு நீங்கள் கொடுக்கக்கூடிய
மிகச்சிறந்த சொத்து அழகிய ஒழுக்கம் ஆகும்." என்று
முஹம்மத் நபி (ஸல்) அவர்கள் சொன்னார்கள்.
பருவமடைவதற்கு முன்னர்
இரண்டாவது மொழியொன்றைக் கற்றுக்கொள்வது
பிள்ளைகளுக்கு மிக இலகுவானது என்பதும்
விஞ்ஞான ரீதியான ஒரு பரிந்துரையாகும் (பட்டபின் டிப்ளமோ PgDBE).
15 - 21 வயது காலம்.
************************
மிகக் Critical ஆன வயது இது.
தவறான சகவாசங்கள், கொள்கைகள், பழக்க வழக்கங்கள் என்று
பிள்ளைகள் திசைமாறிவிடும் அபாயம் நிறைந்த பருவம் இது.
ஒரு குற்றவாளியை உளவாளிகள் உளவு பார்ப்பது போல
பிள்ளைகளின் நலனுக்காகப்
பெற்றோர்கள் அவர்களைக் கண்காணிக்க வேண்டிய காலம்
இதுவென்றுங் கூறப்படுகிறது.
இரண்டாம் பகுதியில் ஒழுக்கம் கற்பிக்கப்படவில்லையாயின்
இப்பருவத்தில் அதன் அறுவடை மிகக் கவலைக்குரியதாகவும் இருக்கலாம்.
முஹம்மத் நபி (ஸல்) அவர்கள் சொன்னார்கள்
"ஒரு மனிதன் அவனது நண்பனுடைய மார்க்கத்தில் இருக்கிறான்".
(ஜாமி அத்திர்மிதி 2378).
சிறந்த நல்லொழுக்கமுள்ள நண்பர்கள்
சிறந்த வழிகாட்டிகளாக இருப்பார்கள்.
இது எல்லாவற்றுக்கும் அடிப்படையாக
அழகிய குடும்ப சூழ்நிலை இருக்க வேண்டும்.
அழகிய குடும்பத்திற்கு
அல்குர்ஆன் கூறும் உதாரணம் ஒரு நல்ல மரம் 🌳
ஒரு நல்ல மரத்தில் இருந்து தான்
நல்ல கனிகள் கிடைக்கும்.
ஒரு நல்ல குடும்பத்தில் இருந்து தான்
நல்ல பிள்ளைகள் வருவார்கள்.
மிகப்பெரிய மார்க்க அறிஞர்களான
இமாம் ஷாபிஈ (ரஹ்), இமாம் புஹாரி (ரஹ்),
இமாம் அஹ்மத் இப்னு ஹம்பல் (ரஹ்) அவர்களின்
வாழ்க்கையைப் படிக்கும்போது ...
இமாம் ஷாபிஈ (ரஹ்) அவர்கள்
தனது 06 வது வயதில் முழுக் குர்ஆனையும் மனனம் செய்தார்கள்.
அப்போதிருந்த "முஅத்தா மாலிக்" என்ற ஒரேயொரு ஹதீத் நூலை
முழுமையாக மனனம் செய்தார்கள். சுபஹானல்லாஹ்.
"எனது தாயே எனக்கு இந்த மனன சக்தி எப்படி வந்தது?" என்று
ஒருநாள் தனது தாயிடம் இமாமவர்கள் கேட்டபோது
"நீங்கள் தாய்ப்பாலருந்திய ஈராண்டுகளும்
என் தலையை மூடாமலும், பிஸ்மி சொல்லாமலும்
நான் உங்களுக்குப் பாலூட்டியதேயில்லை" என்று தாய் கூறினார்கள்.
இமாம் அஹ்மத் இப்னு ஹம்பல் (ரஹ்) அவர்கள்
சிறுவராக இருந்தபோது
அவர்களின் தாய்
ஒவ்வொரு வக்திற்கும்
பள்ளிவாசலுக்குத் தானே கூட்டிச் சென்று
தொழுது முடிக்குவரை வெளியிலே காத்திருந்து
மீண்டும் வீட்டுக்கு அழைத்துச் செல்வார்கள்.
அல்குர்ஆனுக்கு அடுத்த அந்தஸ்தில் கண்ணியம் செய்யப்படும்
ஸஹீஹுல் புஹாரி தொகுப்பின் ஆசிரியர்
இமாம் புஹாரி (ரஹ்)அவர்கள்.
தனது இரண்டு வயதிலேயே பார்வையை இழந்தார்கள்.
தாயின் சுமார் மூன்று வருட கால
இடைவிடாத தஹஜ்ஜுத் தொழுகை மற்றும் பிரார்த்தனைக்குப் பகரமாக
இறைவனின் கருணையால்
மீண்டும் பார்வையைப் பெற்றாங்க.
அந்தத் தகவலை நபி இப்ராஹிம் (அலை) அவர்கள்
தாயின் கனவில் வந்து சொன்னார்கள்.
மிகப் பெரிய மார்க்க அறிஞராக அல்லாஹ் அவர்களை ஆக்கினான்.
எனவே தான்,
நல்ல பிள்ளைகளை வளர்த்தெடுப்பதில்
நல்ல பெற்றோரின் பங்கு அளப்பெரியது.
பெற்றோரின் பணி பனியாகிறபோது
ஆசிரியப் பணி மலையாகிறது.
அல்ஹம்துலில்லாஹ் ❤️
.
.
முஹம்மத்❤️ஸன்ஸீர்
01.11.2K21, திங்கள்.
.
.
மாஷா அல்லாஹ்.
கடந்த 29.10.2K21 வெள்ளிக்கிழமை
மௌலவி பாஸில் முஃப்தி அவர்களால் நிகழ்த்தப்பட்ட
நெகிழ்ச்சியான ஜும்ஆ குத்பா மற்றும்
ஹார்வேர்ட் பல்கலைக்கழகத்த்தின்
"முன்பள்ளிப்பருவம்" பற்றிய ஓர் ஆய்வறிக்கை போன்றவற்றில் இருந்தும்
இவ்வாக்கத்திற்காக தகவல்கள் திரட்டப்பட்டன.
No comments:
Post a Comment