Monday, February 28, 2022

புலன்களின் ❤️ ஃபெர்ஃபோர்மன்ஸ்.


.

அனுபவத்தின் அடிப்படையில் 

சொல்லக் கூடிய ஒன்று: 

.

.

புதிய விடயம் ஒன்றினுள் 

நுழைவதற்கு முன்னர் ...


ஏற்கனவே அதிலே இருக்கின்ற 

நம்பகமான சிலரிடம் இருந்து 

அதன் நன்மை தீமைகள் பற்றிய அபிப்பிராயங்களை

நடுநிலையாகக் கலந்துரையாடிக் 

கேட்டறிவது நல்லது.


உதாரணம்:

சமூக வலைத்தளங்கள்.


நன்மையை விட 

தீமைகள் அதிகமாக இருக்கின்ற எதிலும்

நுழையாமல் இருப்பதே நல்லது.

நுழைந்து, பாடங் கற்று 

வெளியே வருவதென்பது

இங்கே பலபேருக்கு

வெகு சிரமமான ஒரு காரியம்.


மிக முக்கியமாக அதிலே

நேரம் எவ்வாறு களவாடப்படுகிறது?

இழக்கின்ற நேரத்திற்குப் பலனாக 

என்ன கிடைக்கிறது?

என்பது பற்றிக் கேட்டறிதல் நல்லது.


மற்றவர் சொல்வதில் உள்ள

உண்மையை, யதார்த்தத்தைப் 

புரிந்துகொள்வது மிகச் சுலபமானது.

ஆனால்,

பெரும்பாலான சந்தர்ப்பங்களில்

ஒருவரின் ஈகோ தான் 

இடையிலே தடையாக இருந்து 

உண்மை இதயத்தைத் தொடுவதை விட்டும் 

தடுத்து விடுகிறது.

ஈகோ இன் எல்லை சுருங்கும்போது தான்

ஞானத்தின் எல்லை விரிந்து செல்கிறது.

.

.

எழுந்து நிற்கின்ற மரம்

விழுந்து கிடக்கின்ற இலை

கொழுந்து விடுகின்ற நெருப்பு

உழுந்தில் ஒழிந்திருக்கும் ஊட்டம் 


பறந்து திரிகின்ற பறவை

மறந்து போகின்ற மரணம்

இறந்து போன ஓர் இளைஞன்

திறந்து மூடுகின்ற மனசு ❤️


பரந்து விரிந்த வானம்

இரவில் வராத காகம்

சுரந்து வருகின்ற கண்ணீர்

இரத்தம் தணிக்கின்ற தண்ணீர்


கயிறில் தொங்காத மேகம்

வயிறில் வளரும் சிசு

மயிரிழையில் தப்பும் உயிர்

பயிரில் சுரக்கும் ஒக்சிசன்


எதிர் பாராமல் கிடைக்கின்ற உதவி

எதிர் பார்த்துங் கிட்டாத வெற்றி

புதிர் போன்ற புது நிமிஷம்

கதிர்மேல் எழுதப்பட்ட பெயர்கள் 


என்றெல்லாம் உலகில்,

பெற்றுக்கொள்ளும் ஒவ்வொன்றிலும் 

கற்றுக் கொள்ளவென்று

எவ்வளவோ இருக்கின்றது.


நாம் இருக்கின்ற இடங்களில்

இதயத்திற்கு அமைதி தரவென்று

ஏதோவோன்று 

இருந்துகொண்டுதான் இருக்கிறது.

கண்டுகொள்வது தான் பாக்கி.


புலன்களின் ஃபெர்ஃபோர்மன்ஸை

புத்தியின் புனிதம்

பன்மடங்காக்குகிறது.

எதற்கும்

அதற்கென்று போதுமான நேரமும் அவசியம்.

.

.

மனசு ❤️

20.02.2K22, ஞாயிறு. 

இயற்கையோடு ❤️ இணைந்த இல்லறம்.


ஒரு பாரம்பரிய துருக்கிய கூடாரத்தில் 

மூன்று பிரதான பகுதிகள் இருக்கும்.


1. கூரை

2. தரை

3. சுவர்


கூரை.

அரைக்கோள (Dome) வடிவத்தில் இருக்கும்.

அந்த அறைக்கோளக் கூரை

விரிந்து பரந்த 

வானத்தைக் குறித்து நிற்கும்.


28 உறுதியான, வளைந்த பலகைகள்

உச்சியில் ஒரு வலையத்துடன் இணைக்கப்பட்டு

கூரை ஆக்கப்பட்டிருக்கும்.

இந்த 28 வளைந்த பலகைகளும்

ஒரு மாதத்தின் 

28 சந்திர நாட்களைக் குறித்து நிற்கும்.


கோளத்தின் உச்சியில் 

வானம் தெரியக்கூடிய

வட்ட வடிவிலான 

ஒளிபுகக் கூடிய (Transparent) பொருளால் ஆன 

ஒரு பகுதி இருக்கும்.

(சிலவேளை மறைக்கப்பட்டிருக்கலாம்).

அதனூடாக மழை, வெயில், 

நிலவு, நட்சத்திரம் என்று 

அனைத்தையும் உள்ளிருந்து காண முடியும்.


தரை.

தடித்த கம்பளங்களால் ஆக்கப்பட்டிருக்கும்.

அது பூமியைக் குறித்து நிற்கும்.


சுவர்.

கூரைக்கும் தரைக்கும் 

இடையில் இருக்கும் சுவர்

மழை, மரம்,

ஆறு, அருவி

ஒளி, காற்று, வெயில், பனி போன்ற 

ஒன்றோடன்று பின்னிப் பிணைந்த

இயற்கை அம்சங்களையும்,

இரண்டறக் கலந்த 

இன்பம் துன்பம் என்ற 

வாழ்கையின் ஏற்ற இறக்கங்களையும்

பிரதிபலிக்கும் வகையில் 

பின்னப்பட்ட சிலாகைகளால் ஆக்கப்பட்டு

வானத்தையும் பூமியையும், 

இணைப்பது போல

ஒன்றோடொன்று பிணைக்கப்பட்டிருக்கும்.

அதுதான் வாழ்க்கை.


குளிர் மற்றும் விலங்குகள் போன்றன

உள்ளே வராத வகையில்

வெளிப்பக்கமாக சுவர் 

தடித்த, கம்பளங்களால் மூடப்பட்டிருக்கும்.

அதிலே ஒரு கதவும் இருக்கும்.

.

.

இன்டர்ஸ்டிங்காக இல்லையா?


உள்ளே இருக்கும்போதெல்லாம்

இயற்கையின், 

இறைவனின் நினைவு

இருந்துகொண்டே இருக்குமல்லவா?

தமது கூடாரத்தைக் கூட 

இறைவனை நினைவூட்டும் வகையில் 

இவ்வாறு அமைத்துக்கொள்வது

எவ்வளவு சிறப்பானது அல்லவா?


நமது வீடுகளில்

இவ்வாறான என்ன இருக்கிறது?

மேலே அஸ்பெஸ்டஸ் ஷீட் 

இல்லையேல் காங்கிரீட் ஸ்லப்.

திரைச் சீலைகளால் 

திரையிடப்பட்ட ஜன்னல்கள்.


எமது பெரியம்மாவின் களிமண் வீடும்

மண்முட்டித் தண்ணீரும்,

ஓலைக் கிடுகினால் பின்னப்பட்ட கூரையும்

அவற்றுக்குள் குடியிருந்த குளிர்ச்சியும் 

இன்னும் என் நினைவில் இருக்கிறது.


இன்று நமது வீடுகளில்,

ஷைத்தான் குடியிருக்கும் 

கிருமிகளைப் பரப்பக்கூடிய கழிவறைகள்

குடியிருக்கும் (Bedroom) அறைகளுக்கு 

மிக அருகிலேயே வந்துவிட்டதில்

பெருமை கொள்கிறது மனசு.

அடிக்கடி ஏற்படும் 

ஆரோக்கிய சீர்கேடுகளுக்கு 

அதுவும் ஒரு பிரதான காரணம்.


தேவைக்கு அதிகமாகக்

கட்டப்படும் அறைகளெல்லாம்

ஷைத்தானுக்குரியவை என்ற ஹதீஸை

சென்றவார ஜூம்ஆ குத்பாவில் 

சொல்லக் கேட்கிறேன்.

எதற்குமே உபயோகிக்காமல்

எத்தனை மாடிகள், எத்தனை அறைகள்.

யார் வாழ்கிறார் அதில்?


எவ்வளவோ பெரிய 

எடுப்பான வீட்டைத்தான் கட்டினாலும்,

தொழுவதற்கென்று, வாசிப்பதற்கென்று

தனியறை கூட கிடையாது.


இயற்கையான சூழலில் 

இருந்து செய்யப்படும் திக்ர்களுக்கு

இறைவன் பால் 

ஈர்க்கும் சக்தி அதிகம்.

.

.

முஹம்மத்❤️ஸன்ஸீர்.

25.02.2K22, வெள்ளி.

 முதல் விசிட்டிங் கார்ட்.

.


அம்பாறை, பாலமுனையைச் சேர்ந்த

ஒருவரின் பணப்பை (Purse) 

அக்கரைப்பற்றில் ஒருநாள் 

காணாமல் போகிறது. 


அதேநாள் வீடுவரும் வழியில் 

மோட்டார் டிராஃபிக் பொலிஸிடமும் 

மாட்டிக் கொள்கிறார். 

ஆவணங்கள் எதுவும் இல்லாததால்,

மோட்டார் சைக்கிள் பறிமுதலாகி 

பொலிஸ் பாதுகாப்போடு 

ஸ்டேஷனுக்குப் போக, 

பதபதைக்கும் மனசொடு

பஸ்ஸில் வீடு வந்து சேர்கிறார்.


வீடு வந்தவர்,

வேலைக்குஞ் செல்லாமல்.

வெளியேயும் செல்லாமல் முடங்கிக் கிடக்கிறார்.

.

.

ஒரு நாள் எனக்கு

ஒரு தொலைபேசி அழைப்பு வருகிறது.


"அஸ்ஸலாமு அலைக்கும்."


வ'அலைக்குமுஸ்ஸலாம்.


"தம்பி நீ...ங்க ஸன்ஸீர் ஆ ...?"


ஆமா, சொல்லுங்க.


"நான் நிந்தவூர்ல இருந்து சம்சுதீன் பேசுறன் தம்பி.

அக்கரப்பத்துக்கு ஹயர் ஒண்ணு போயிட்டு வரக்குள்ள

ரோட்ல ஒரு பெர்ஸ கண்டன்.

அதுல உரிய ஆள்ற டெலிபோன் நம்பர் இல்லம்பி.

அவர்ட்ட எண்ட நம்பர குடுத்து 

எனக்கு கோல் பண்ணச் சொல்லுங்களன்."


அவர்ட பெயர் என்ன மாமா?


"இர்ஷாத் ன்னு ஐடெண்டி கார்ட் ல இருக்கு."


அவர்ட பெயர்ல வேற ஏதாச்சும் இருக்குதா?


"இன்னொரு ஐடெண்டி கார்ட்டும் இருக்கு.

அதுல என்.ஓ.ஆர்.ஏ.டீ எண்டு மேல போட்டிருக்கு."


ஆஹ் ... அது "NORAD" NGO மாமா.

எனக்கும் ஆள சரியா தெரியல.

எதுக்கும் "நொராட்" ல விசாரிச்சு சொல்றன்.

அது சரி எண்ட நம்பர் உங்களுக்கு எப்படிக் கிடைச்சது?


"இவரு நிறைய கார்ட்ஸ் வெச்சிருக்காரு.

அதுகள்ல இருக்குற ஒரு நம்பரும் வேலை செய்யுதில்ல.

கடைசியா இருந்த ஒரு கார்ட்ல தா

உங்கட நம்பர் இருந்திச்சு."

என்று சொல்லிட்டு வெச்சிட்டார்.


என்னோட கார்ட் .... அவர்கிட்ட எப்படி?

என்ற கேள்வியை ஒருபுறம் வெச்சிட்டு


"நொராட்" ல தெரிஞ்ச ஒரு நண்பரிடம் 

தொலைபேசியில் விசாரித்தபோது

சில ஆண்டுகளுக்கு முதல் அந்த இர்ஷாத்

அங்கே வொலண்டியராக வேலை செய்ததாகவும்,

தற்போது அவர்

ஒலுவில் துறைமுகத்தில்

வேலை செய்வதாக ஒரு ஞாபகம் என்றும் துப்புக் கொடுத்தார்.

ஒலுவில் துறைமுகத்தில் 

தெரிந்த ஒருவரைத் தொடர்புகொண்டு வினவியபோது ...


ஆம் அவர் இங்கேதான் வேலை செய்கிறார். 

ஆனால் கடந்த மூன்று நாட்களாக 

ஆள் வேலைக்கு வரவில்லை என்றுங் கூறப்பட்டது.


அவரிடம் இருந்து

இர்ஷாத்தின் தொலைபேசி இலக்கம் பெற்று 

அவருக்கு அழைத்தபோது

மனுஷன் மகா சோகத்தில் உடைந்துபோயிருந்தார்.


காரணம்,

ஒரு தொகைப் பணமும்

வாகனம் சார்ந்த எல்லா ஆவணங்களும்,

தே.அ.அட்டையும்

பணம் இருந்த மூன்று வங்கி அட்டைகளும் 

அதிலேதான் இருந்திருக்கிறது.

அதனை விட 

அவரோட பெரிய கவலை என்னன்னா ...

ஒவ்வொரு வங்கி (Debit) அட்டைக்குமான 

ரகசிய PIN இலக்கத்தையும்

மறந்து போகாம இருக்கட்டும் ன்னு

அந்தந்த அட்டைப் பக்கட்டுக்குள்ளேயே

எழுதி வேறு வைத்திருக்கிறார்.


சரி 

உங்க பர்ஸ் பத்திரமா இருக்கு பிரதர்.

இந்த நம்பருக்கு கோல் பண்ணி 

பேசி வாங்கிக்கங்க என்றதும்

ரொம்ப சந்தோஷப்பட்டார்.


உங்க பெயர் என்ன ன்னு கேட்டார்


நான் "ஸன்ஸீர்" ன்னு சொன்னதும்.


சேர் நீங்களா?

நீங்க TDH (Terre des hommes) ல வெல செஞ்சீங்க தானே?

(எனது பெயர் புழக்கத்தில் மிகக் குறைவு

அதனால், கண்டுபிடிப்பது மிக இலகு).


ஆமா.


அப்றம் சம்சுதீன் நானவின் நம்பர் கொடுத்து

அவர் நிந்தவூர் போயி பர்ஸ வாங்கிட்டு வந்து

மறுபடியும் கோல் பண்ணி விபரம் சொன்னார்.

மகிழ்ச்சி ❤️

.

.

இந்த சம்பவத்தில் இருந்து

நான் ஆனந்தப்பட்டவைகள் இவைகள்தான்.


1. பர்ஸைக் கண்டெடுத்த சம்சுதீன் நாநா

தினசரி கொபெட்டா ஓட்டும் ஒரு கூலித் தொழிலாளி.

அரிதான நேர்மை 

அவரிடம் மிக மிக அதிகமாகவே இருந்தது.


2. ஆரோக்கியமான 

மனித - மனித இடைத் தொடர்புகள்

ஏதோவோரு வகையில் வாழ்வில்

எப்போதாவது உதவுகிறது.


3. யாரையும், எதையும் நாம்

நம்ம வாழ்க்கையில

காரணமே இல்லாமல் கடந்து வருவதில்லை.

தேவையில்லாதவர் என்று இங்கு யாருமேயில்லை.

.

.

ஒரு கேள்விய சொல்ல மறந்துட்டன்.


"ஆமா ....!

என்னோட விசிட்டிங் கார்ட் உங்ககிட்ட எப்படி வந்தது? 

என்று இர்ஷாத்திடங் கேட்டபோது ...


"நாலஞ்சு வருஷத்துக்கு முதல் 

நீங்க பாலமுனையில 

ஒரு பெற்றார் கூட்டத்துக்கு வந்து 

அருமையா பேசினீங்க சேர்.

அப்போ உங்ககிட்ட வாங்கினதுதான் சேர் அது.

பர்ஸ அப்பப்ப மாத்தும்போதெல்லாம்

மறக்காம அதையும் எடுத்து வெச்சிக்குவன்" என்றார். 


அல்ஹம்துலில்லாஹ்.

எனக்கது சத்தியமாக ஞாபகத்தில் இல்லை.

ஆனாலும், 

முதலாவது விசிட்டிங் கார்ட்

ஒருவரின் பர்ஸை மீட்டுக் கொடுத்து

மகிழ்ச்சி அளித்திருக்குது என்பது

மனசுக்கு ❤️ மகிழ்ச்சியாக இருந்தது.


சுக்றன் யா அல்லாஹ்.

.

.

முஹம்மத்❤️ஸன்ஸீர்.

26.02.2K22, சனிக்கிழமை.