Friday, January 14, 2022

ஹஸரத் உமர் (ரழி) அவர்களின் 
பிள்ளை ❤️ வளர்ப்பு.
.

.
கலீபா அபூபக்கர் சித்தீக் (ரழி) அவர்களின் 
பரிந்துரையின் அடிப்படையில், 
அபூபக்கர் சித்தீக் (ரழி) அவர்களின் வஃபாத்தின் பின்னர், 
ஹஸரத் உமர்(ரழி) அவர்களை 
முஸ்லிம்கள் தமது அடுத்த கலீபாவாகத் தேர்ந்தெடுக்கிறார்கள். 
கலீபாவிற்கு "அமீருல் முஃமினீன்" 
என்ற பெயரையும் சூட்டுகின்றனர்.

கலீபாவாகத் தேர்தெடுக்கப்பட்டவுடன் ஒருநாள்  
தமது பிள்ளைகளை அழைத்துப் பேசுகிறார்கள்
ஹஸரத் உமர் (ரழி) அவர்கள்.

இப்போது எதற்காக உங்களையெல்லாம் 
இங்கே அழைத்திருக்கிறேன் என்று தெரியுமா?

.....................................................

எங்கள் தந்தை, 
இப்போது அமீருல் முஃமினீன்.
நாம் அவருடைய பிள்ளைகள்.
எனவே, நம்மில் எவரேனும் தனது கருமங்களை மேற்கொள்ளும்போது, ​​
மக்கள் அவருக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும் என்று 
உங்களில் சிலர் நினைத்துக் கொண்டிருக்கலாம்.

உங்கள் தந்தை,
அவரது தந்தையின் ஒட்டகங்களை 
மேய்த்து வந்தார் என்பதையும், 
அவரது தந்தை அவரைக் கடுமையாக நடத்தியதையும், 
தனது தந்தையிடம் அவர் அடிவாங்கியிருப்பதையும் 
நீங்கள் அறிய வேண்டும் 
என்று நான் விரும்புகிறேன்.

உங்கள் தந்தை, 
அவரது அத்தைமார்களுக்கு 
விறகு சேகரித்துச் சென்று கொடுப்பார். 
அவர்கள் அதற்குப் பகரமாக 
கைநிறைய பேரீச்சம்பழம் அல்லது திராட்சையைக் கொடுப்பார்கள்.
எங்கள் குலமான "அதியி"யைச் சேர்ந்தவர்கள், 
குறைஷிக் குலங்களில் 
உயர் அந்தஸ்த்துக் கொண்டவர்கள் அல்லர்.
அவர்கள் அப்து மனாஃப், மக்ஸூம், சஹ்ம் மற்றும் ஜுமா போன்ற 
பிற குலங்களிலும் பார்க்க 
குறைவான அந்தஸ்த்துக் கொண்டவர்களாகவே இருந்தனர்.
(இஸ்லாத்தை ஏற்பதற்கு முன்னர் இருந்த நிலை.)

இஸ்லாத்தின் மூலமாகவும், 
அல்லாஹ்வுக்கு மட்டும் அடிபணிவதன் மூலமாகவும் 
இறைவன் நம்மை உயர்த்தியுள்ளான்.
பறவை, இறைச்சியைப் பார்ப்பது போல 
மக்கள் உங்களைப் பார்க்கிறார்கள்.
நீங்கள் அதை எடுக்க வந்தால், 
அவர்கள் உங்களைப் பிடித்துக் கொள்வார்கள்.
நீங்கள் தவிர்ந்து கொண்டால், 
அவர்களும் தவிர்ந்து கொள்வார்கள்.

நான் எதையாவது தடை செய்து உத்தரவு பிறப்பித்தால், 
முதலில் நீங்கள் தான் 
அதனைத் தவிர்ந்துகொள்ள வேண்டும்.
அல்லாஹ்வின் மீது ஆணையாக, 
நான் செய்யக்கூடாது என்று கட்டளையிட்ட ஒன்றைச் 
செய்துவிட்ட நிலையில் 
உங்களில் யாரேனும் ஒருவர் 
என்னிடங் கொண்டு வரப்பட்டால், 
என்னுடன் அவருக்கு உள்ள உறவின் காரணமாக 
அவருக்கு நான் தண்டனையை இரட்டிப்பாக்குவேன். 

முஸ்லிம் சமூகத்தின் நிருவாகத்தை 
எமது தந்தை பொறுப்பேற்றிருக்கக் கூடாதே. 
அதனால் நாமும் மற்றவர்களைப் போல 
சாதாரணமாக இருந்திருக்கலாமே என்று 
நீங்கள் கூறவேண்டுமென்று நான் விரும்புகிறேன்.

நான் சொன்னது புரிகிறதா?

ஆம்.
ஆம்..
.
.
(ஹஸரத் உமர் (ரழி) அவர்களின் 
வாழ்க்கை வரலாற்றுத் தொடரில் இருந்து.
நீங்கள் வாசித்துப் பயன்பெற்றால்,
எனக்கும் நன்மை கிட்டும்).
.
.
தமிழாக்கம்.
முஹம்மத்❤️ஸன்ஸீர்.
03.01.2K22, திங்கள்.

No comments:

Post a Comment