Thursday, January 27, 2022

மரங்கள் 🌳🌳🌳


மரங்கள் 🌳🌳🌳  

மனசுக்கு எப்போதுமே

உட்சாகமும், மகிழ்ச்சியும், 

மருத்துவமும் ஊட்டுபவை.


எழுநூறு ஆண்டுகள் நடந்தாலும்

தாண்டி முடியாத 

நிழல் கொண்ட மரமொன்று

சுவனத்தில் இருக்கிறது.


ஒரு மரம் 🌳

வேறு எந்த மரத்துடனும் 

போட்டி போட்டு வளர்வதில்லை.

தனக்குக் கிடைப்பதைக் கொண்டு 

தனது இறைவனைத் துதி செய்து 

தனது வாழ்க்கையைத் 

தனித்துவமாக வாழ்ந்து முடிக்கிறது.


மரங்களின் கிளைகளில்  

இளம் இலைகளுக்கு 

முன்னால் முன்னேறிச் செல்ல இடமளித்து 

பக்க பலமாக 

பின்னால் இருந்து கொள்கின்றன 

முதிர்ந்த இலைகள்🌳🌳🌳.


கிளை விட்டு 

இலை பிரியும் தருணம் உணர்ந்து 

தன்னிடமுள்ள கனிப்பொருட்களையெல்லாம் 

அருகிலுள்ள இளம் இலைகளுக்கு 

அனுப்பிவிட்டே விடைபெறுகின்றன

முதிர்ந்த இலைகள்.


கீழே விழுந்து கிடந்த 

இலைகளையெல்லாம் 

குப்பையென்று 

பொறுக்கிக்கொண்டிருந்த என் மாணவிகள்

அவர்களைக் கடந்து போன என்னிடம் 

"சேர் இந்த இலைகளையெல்லாம் என்ன செய்வது?" 

என்று சிரித்துக் கொண்டே

சற்றுக் கிண்டலாகக் கேட்டாங்க.


"உங்க கையில் இருக்கும் 

ஒவ்வொரு இலையும் 

உங்களைப் போன்றது தான். 

கொடுக்கப்பட்ட கடமைகளைக் 

குறையேயில்லாமல் முடித்துவிட்டு  

விடைபெற்ற கண்ணியமானவர்கள். 

கண்ணியத்தோடு அடக்கஞ் செய்யுங்கள். 

இறந்தும் பலன் தருவாங்க.

காட்டுமிராண்டிகள் போல 

கொளுத்தி விடாதீர்கள்."

என்று கூறிவிட்டுச் சென்று விட்டேன்.


மரங்கள் 🌳🌳🌳, 

பூமியின் நுரையீரல்கள்.

மரத்திற்கு மாற்றீடு 

இன்னொரு மரம் 🌳 தான்.


நான் படித்த காலத்திலும் 

நான் படிப்பிக்கும் காலத்திலும் 

ஒக்சிஜனின் அளவு

ஒரேயளவில் தான் இருக்கு.

யாரால?

மரங்களாலும் 🌳🌳🌳 தான்.


மரங்களின் 🌳🌳🌳 வேர்கள் 

"பெற்றோராயும்",

கிளைகள், இலைகள் 

"பிள்ளைகளாயும்" இருக்கு.

கிளைகள், இலைகள் இல்லையென்றால் 

வேர்கள் இல்லையென்று ஆகிடாது. 

ஆனால், 

வேர்கள் இல்லையென்றால்  

கிளையும் இல்லை. 

இலையும் இல்லை.


புனிதப் போருக்கு 

பிள்ளைகளை அனுப்புவது போன்றது

#விதைகள், 

விருட்சங்களில் இருந்து பிரிவது.

எல்லாப் பெத்த மரங்களும் 🌳🌳🌳 

பிரிந்துசென்ற பிள்ளை "விதைகளை" 

மீண்டுஞ் சந்திப்பதேயில்லை.

காற்றினாலும்,

நீரினாலும், 

விலங்குகளாலுங் காவிச் செல்லப்பட்டு 

பூமியின் எங்கோ ஒரு இடத்தில்

தமது பெற்றோரின் சேவையைத் 

தொடருகின்றன விதைகள்.  


ஒரு மரம் 🌳 பற்றிய 

சுவாரயமான விஷயம் சொல்கிறன் 

பாருங்க.


துருக்கியின் காடுகளில் 

"கெம்" என்றொரு மரம் 🌳 இருக்குமாம்.

தரை மட்டமாய் வெட்டி அழித்தாலும்,

தீயிட்டு எரித்தழித்தாலுங் கூட 

திரும்பவும் முளைக்குமாம்.

ஒன்றில், 

வேரோடு பிடுங்க வேண்டும்.

இல்லையேல் 

அதன் வேர்களுக்கு அருகில் 

அதைவிடப் பெரிய்ய🌳 மரமொன்றை 

நட வேண்டும்.

அப்பதான் அது சாகுமாம்.


தான் இருக்குமிடத்தில் 

தன்னை விடச் சிறந்த ஒருவர் 

வருவதை உறுதிசெய்த பின்னரே 

அங்கிருந்து இறந்து விலக விரும்புது 

"கெம்" மரங்களின் 🌳🌳🌳 மனசுகள்.


ஒவ்வொரு நல்ல மனிதரும் 

ஒவ்வொரு நல்ல ஆசிரியரும்

"கெம்" போன்ற மரம் 🌳 தான். 

தன்னைப் போன்ற 

தரமான ஆளுமைகளை  

தான் இருக்கும் இடத்தில் உருவாக்கிவிட்டே 

அங்கிருந்து வேறிடஞ் செல்ல வேண்டும்.


இதுபோல 

இன்னுமின்னுஞ் சொல்லலாம்.


மரணித்த பின்னர் 

மஞ்சிப் பெட்டியென்று 

ஒரு துண்டு மரமாவது 🌳

கல்லறை வரை கூடவே வருவதும் 

மகிழ்ச்சிதான் இல்லையா?


அல்ஹம்துலில்லாஹ் ❤

இன் ஷா அழ்ழாஹ் 

அதுவுங் கிடைக்கும்.

.

.

முஹம்மத்❤ஸன்ஸீர்.

🌳🌳🌳🌳🌳🌳

28.01.2K22, வெள்ளி. 

Wednesday, January 26, 2022

நபிகளாரின் ❤️

மூன்று பொன்னான அறிவுரைகள்.


அபூ அய்யூப் அல் அன்சாரி (ரழி) அவர்கள் 

அறிவிக்கும் ஒரு ஹதீஸ் உள்ளது.

அதில் ஒரு மனிதர் நபி (ஸல்) அவர்களிடம் வந்து 

தமக்கு அறிவுரை கூறுமாறும்,

அதனை சுருக்கமாகக் கூறுமாறும் கூறினார். 

அதற்கு நபி (ஸல்) அவர்கள் 

மூன்று கூற்றுகளுடன் பதிலளித்தார்கள்:


"நீங்கள் உங்கள் தொழுகைக்காக நிற்கும்போது, ​​

நீங்கள் விடைபெறும் (கடைசித்) தொழுகைபோல தொழுங்கள். 


நீங்களே மன்னிப்பு கேட்க வேண்டியது

என்ற அளவிற்கு எதையும் பேசாதீர்கள். 


பிற மக்களிடம் இருப்பதைப் பெற வேண்டும் 

என்ற ஆசையை முற்றாக விட்டு விடுங்கள்."


(சுனன் இப்னு மாஜா : 4169)

.

.

1. இதுவே உங்கள் கடைசித் தொழுகை 

என்று எண்ணி ஒவ்வொரு வக்தையும் தொழுங்கள்.


தொழுகைக்கு அப்பால் சிந்திக்காதீர்கள். 

இதுவே வாழ்க்கையில் நாம் 

அல்லாஹ்வின் முன் நிற்கும், பிரார்த்தனை செய்யும் 

கடைசி நேரமாகக் கூட இருந்துவிடலாம் 

என்பதை கவனத்தில் கொண்டு தொழுங்கள். 


பொதுவாக, நம்மில் பெரும்பாலோர் 

தொழுகைக்குப் பிறகு நாம் என்ன செய்ய வேண்டும் என்று

ஏற்கனவே சிந்தித்த நிலையிலேயே 

தொழுகைக்குள் நுழைவதுண்டு. 

இந்த சிந்தனை 

தொழுகையைத் திசை திருப்பி விடுகிறது.

இதன் விளைவாக, 

தொழுகை - உயிரோட்டம் இல்லாததாகவும் ஆகிவிடுகிறது. 


"அல்லாஹு அக்பர்" (அல்லாஹ் மிகப் பெரியவன்.) 

என்று கூறித் தொழுகைகளைத் திறப்பதன் மூலம்

மற்ற எல்லாவற்றுடனும் உள்ள எனது உறவை விடவும்

அல்லாஹ்வுடனான எனது உறவை நாம்

முதன்மைப்படுத்துகிறோம்.

.

.

2. நீங்களே பின்னர் மன்னிப்பு கேட்க வேண்டிய விதத்தில் 

எதையும் பேசாதீர்கள்.


இந்தக் கொள்கையின்படி வாழும்போது

திருமணங்களை, நட்புகளை, நல்லுறவுகளை

வலியிலிருந்தும், பிரிவிலிருந்தும் 

பல தருணங்களில் காப்பாற்ற முடியும். 


ஒரு கஷ்டமான உண்மை என்னவென்றால், 

பல அன்பானவர்கள் 

ஒரு முரண்பாட்டின் பின்னர்

நல்லுறவிற்கான வாய்ப்பை

மீளப் பெறுவதற்கு முன்பே மரணித்து விட்டனர்.

குடும்ப உறுப்பினர்களோ 

தங்களை மன்னிக்க முடியாமல் 

தமது வாழ்நாள் முழுவதும் வருந்துகிறார்கள். 


அல்லாஹ், 

உயிர்களை அவை மரணிக்கும் போதும், 

மரணிக்காதவற்றை அவற்றின் நித்திரையிலும் கைப்பற்றி, 

பின்பு எதன் மீது மரணத்தை விதித்துவிட்டானோ 

அதை(த் தன்னிடத்தில்) நிறுத்திக் கொள்கிறான்; 

மீதியுள்ளவற்றை ஒரு குறிப்பிட்ட தவணை வரை (வாழ்வதற்காக) 

அனுப்பி விடுகிறான்.

சிந்தித்துப் பார்க்கும் மக்களுக்கு, 

நிச்சயமாக அதில் அத்தாட்சிகள் இருக்கின்றன.

(அல்குர்ஆன் : 39:42)


நாளை முதல் வேலையாகச் சென்று

மன்னிப்புக் கேட்க வேண்டும் என்று 

எதையும் ஒத்திப் போடாதீர்கள் இன்று. 


அப்துல்லா இப்னு உமர் (ரழி) அவர்கள் அடிக்கடி கூறுவார்:

“மாலையில், காலை வரை (வாழ்வதை) எதிர் பார்க்காதீர்கள்.

காலையில், மாலை வரை (வாழ்வதை) எதிர் பார்க்காதீர்கள்” 

(புகாரி).


விடியற் காலையில் எழுந்திருக்கப் போகிறோம் என்று

அலாரம் கூட வைத்துக்கொள்வது தான் நமது இயல்பு. 

உண்மை என்னவென்றால், 

காரணமே இல்லாமல் 

காலையில் எழுந்திருக்காத பலரும் 

நம்மில் அத்தாட்சிகளாக இருக்கின்றனர். 

.

.

3. பிற மக்களிடம் இருப்பதைப் 

பெறுவதற்கான எந்த ஆசையையும் விட்டுவிடுங்கள்.


மற்றவர்கள் வைத்திருப்பதில் 

எதிர்பார்ப்பை இல்லாமல் செய்யுங்கள். 

விரக்தி என்பது பொதுவாக எதிர்மறையான ஒரு விடயமாகும். 

இறைவன் வழங்கியிருக்கும் நிஃமத்துக்களில் விரக்தி இருப்பது 

அல்லாஹ்வின் கருணையில் 

நாம் விரக்தி கொள்வதாக ஆகிவிடும்.

அல்லாஹ்வின் கருணையில் விரக்தியடைவது 

மனித உயர்ச்சிக்கு  ஆரோக்கியமானதல்ல.

அது அவனைப் பலவீனப்படுத்துகிறது. 


நாம் இந்த உலகத்தை 

சாதாரணமாகவே அணுக வேண்டும் என்பது 

இதன் அர்த்தமில்லை.

ஏனென்றால், 

எல்லா விஷயங்களிலும் 

சிறப்புமிக்கவர்களாக இருக்க வேண்டும் என்றே 

முஸ்லிம்களை ஊக்குவிக்கிறது இஸ்லாம். 

ஆனால் அதற்காக

மற்றவர்களிடம் இருப்பவற்றின் மீது 

ஆசையுங், கவலையுங் கொள்வதை நிறுத்தவும் 

இஸ்லாம் கண்டிப்பாக வலியுறுத்துகிறது. 


நம்மிடம் இருப்பவை 

நமது உலக வாழ்வில் போதுமானதாக இல்லை 

என்ற மன அழுத்த உணர்வால் 

நமது உள்ளங்கள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன. 

உலகில் நம்மிடம் உள்ளவற்றைப் பற்றி 

அதிருப்தி அடையச் செய்வதற்கு 

ஷைத்தான் 

இதனையே சிறந்த வழியாகவுங் கொண்டுள்ளான். 


நமது துன்யாவை (இவ்வுலகை)

நிரந்தரமாக கட்டியெழுப்புவதில் 

நாம் தொடர்ந்தும் மும்முரமாக இருப்பதால், 

மறுமைக்காக வேலை செய்வதிலிருந்து 

நம்மையது திசை திருப்புகிறது. 

இம்மையில் உள்ளதைக் கொண்டு திருப்தியடையாத வரை 

மறுமைக்கு நாம் ஒருபோதும் தயாராக முடியாது. 

.

.

உமர் இபின் கத்தாப் (ரழி) அவர்கள் ஒருமுறை கூறினார்கள்,

"உங்கள் தொழுகையைப் பாதுகாத்துக் கொள்ளுங்கள், 

ஏனென்றால் நீங்கள் அதை இழந்தால், 

மற்ற அனைத்தையும் இழக்கிறீர்கள்."


தொழுகையை சரிசெய்வதன் மூலம் 

அல்லாஹ்வுடனான உறவை சரிசெய்வோம். 

அல்லாஹ்வுடனான நமது உறவை சரிசெய்வதன் மூலம், 

அனைவருடனும் மற்ற எல்லாவற்றுடனும் 

நமது உறவுகளை மேம்படுத்துவோம்.

.

.

உஸ்தாத் நுஃமான் அலி கான் அவர்களின் 

விரிவுரையிலிருந்து எடுக்கப்பட்ட பகுதி 

டாஹ்லியா சாதிக்கின் கட்டுரை.


மொழிபெயர்ப்பும், மேம்படுத்தலும்.

முஹம்மத்❤️ஸன்ஸீர்.

26.01.2K22, புதன். 

Saturday, January 22, 2022

வார்த்தைகள் ❤️


வார்த்தைகள் 

ஒருவரின் அடையாளம்.


தோல்வியடைந்தவன்

என்பவனின் புன்னகை

தோற்கடித்தவன் 

என்பவனின் மகிழ்ச்சியைத்

தின்று விடுவதைப்போல

மௌனமும் பலமானது தான்.

"புன்னகை"

மௌனத்தின் மலர்.


ஒருவரின் ஆளுமை

அவர் என்ன பேசுகிறார் 

என்பது மட்டுமல்ல.

மௌனத்தை எவ்வாறவர் 

முகாமைத்துவம் செய்கிறார் 

என்பதுவும் தான்.

சிலரது மௌனம்

அவரது பேச்சாகவே ஆகி விடுகிறது.


பேச்சைப் போலவே,

ஒன்று குறைவாக வெளிவருது என்றால்

அங்கே நிறைய இருக்கிறது 

என்றும் ஆகும்.

ஒன்று நிறைய வெளிவருது என்றால்

அது நிற்கப்போகுது என்றும் ஆகும்.


மனிதர்கள் 

அதிகம் பேசுகிறார்கள்.

அதிகம் பேசும்போது 

புறம், அவதூறு 

மனதை ❤️ நோகடித்தல் 

போன்ற பாவங்களும் 

அதிகம் நேர்ந்து விடுகின்றன.


அதிகம் பேசுவதைக் கூட

ஆளுமை என்று நினைக்கும் பிரம்மை

நமக்குள் வேரூன்றி இருக்கிறது.

ஐந்து வயது வரை 

பேசு மகனே ! பேசு மகளே !

என்று கொஞ்சுவதும், கெஞ்சுவதும்

அதன்பின்

வாயை மூடு. வார்த்தை ஜாஸ்தி என்று

வரையறை போடுவதும்

அதே மனிதன் தான்.


--------------------------------------------------

தான் கேட்பதையெல்லாம் நம்புகிறவனுக்கு

மூளை என்பது அவசியமில்லை.

அவனது நாவே 

அவனுக்குப் போதுமானது.

---------------------------------------------------

இதனைக் 👆 கொஞ்சம் 

யோசித்துப் பாருங்க.


வார்த்தைகள் வலிமையானவை தான் 

இல்லையென்றால்,

பச்சைப் பொய்களைக் கூட 

நம்மை நம்ப வைக்குமா?

ஆனாலும்,

உண்மையான வார்த்தைகளில்

உண்மை ஒருநாள் 

சூரியன் போல எழுந்து நிற்குபோது

பொய்கள் எல்லாம்

பொலபொலவென்று உயிரற்றுப் போய்விடும்.


எவ்வளவோ சிரமங்கள் என்றாலும்

என்னோடு தாங்கிக் கொள்கிறேன்.

எவரிடமும் நான் முறையிடுவதில்லை.

என்று சொல்லி விட்டாலே ....

அதுவொரு முறைப்பாடு தான்.

வார்த்தையின் 

வலிமையைப் பார்த்தீர்களா?


மனசு ❤️ இருக்கிறதே

அதுவொரு பெரும் வரம்.

நல்ல வார்த்தைகள் 

நல்ல விதைகள் மாதிரி.

போட்ட உடனேயே முளைக்காது.

பொறுமையாக இருக்கணும்.

மனதில் விழுந்த வார்த்தைகள் 

முளைக்கும்.


உள்ளத்தில் உதிக்கும் வார்த்தை

எந்த வாளை விடவுங் கூர்மையானது.

உச்சரிக்கும் முன்னர்

உள்ளத்தோடு போரிட்டு

பொருத்தமான வார்த்தைகளை மட்டும்

விடுதலை செய்யுங்கள்.

இல்லையேல்,

மௌனம் மிக மேலானது.


"பின்னர் ஒரு கணம்

மனம் வருந்தி

மன்னிப்புக் கோர நேரும் விதத்தில்

இப்போது பேசி விடாதீர்கள்" என்பது

முஹம்மத் நபி (ஸல்) அவர்களின் ஆலோசனை.

.

முஹம்மத்❤️ஸன்ஸீர்.

21.01.2K22, வெள்ளி.

பரக்கத்தின் ❤️ பாதை.

.
பரக்கத்தின் ❤️ பாதை.
.
.
அய்யூபிக்களின் (1250 - 1517) ஆட்சிக் காலத்தில் 
எகிப்து மற்றும் சிரியா தேசங்களை உள்ளடக்கியிருந்தது 
மெம்லுக் இராச்சியம் (Memluk Dynasty).

எகிப்தின்,
இஸ்கந்திரியா (அலெக்ஸாந்திரியா) நகரத்தில் 
இப்போதுள்ள வர்த்தகர் சங்கம் போன்று, 
ஆனால், 
நெசவு, இரும்புத் தொழில், மளிகைக் கடைகள் போன்ற 
தனித்தனித் துறைகளுக்கென்று 
சிறிய சிறிய சங்கங்கள் இருந்தன. 

உதாரணமாக,
கைத்தறி நெசவுத் துறையில் 
முறையாகப் பயின்று, தேர்ச்சிபெற்று 
அதனைத் தமது வியாபாரமாகச் செய்யக்கூடிய 
நெசவாளி வர்த்தகர்கள் குழுவொன்று, 
அவர்களுக்குள் தேர்ச்சியும் முதிர்ச்சியும் பெற்ற 
ஒரு தலைவரின் கீழ் இயங்கியது.

இதிலே கவனிக்க வேண்டிய, 
இன்றைய காலத்தின் தேவையான 
முக்கிய அம்சம் என 
நான் காணுவது என்னவென்றால், 

உற்பத்தியாயினும்,
விற்பனையாயினும்
குறித்த ஒரு தொழில் துறையில் 
முறையாகக் கற்றுத் தேர்ச்சியும், தகமையும் பெற்றவர்களே 
அவர்களுக்குரிய வர்த்தக சங்கத்தில் இணைந்து 
குறிப்பிட்ட அந்தத் தொழில் செய்ய முடியும் 
என்ற கட்டுப்பாடு அங்கே இருந்தது தான். 

எந்தத் துறையாயினும் சரி, 
இறைவனுக்குப் பயந்த, 
சட்டதிட்டங்களை மதிக்கின்ற 
நேர்மையான, தரமான சேவைகள் 
மக்களுக்கு வழங்கப்படுவதை உறுதிசெய்வதே 
அதன் பிரதான நோக்கமாக இருந்தது. 
மாஷா அல்லாஹ்.
.
.
சரி இப்போ
அலெக்ஸாந்திரியாவுக்குப் போவோம்.

தலைவரின் பிரார்த்தனையில் 
தினமும் பின்வருமாறுதான்  
தமது தொழிலை அவர்கள் ஆரம்பித்தார்கள்.

எல்லாம் வல்ல இறைவனின் பெயரால் ஆரம்பிக்கிறோம்.

அல்லாஹ்வின் உதவியைப் பெறவதற்காக
நாம் எப்போதும் 
சரியெது பிழையெது என்று 
உணர்ந்து செயற்படுபவர்களாக இருக்க வேண்டும்.
மக்களுக்குச் சேவை செய்வதே
எமது கடமையாகும்.

ரிஸ்க்கை அளிக்கின்ற எனது அல்லாஹ்வே !

எந்த விதமான திருகுதாளங்களும், 
மோசடிகளும், செய்யாத, 
நேர்மையான வர்த்தகர்களாக 
எம்மை நீ இருக்கச் செய்வாயாக.

நீதியும், நேர்மையும் உள்ள மக்களாக 
எம்மை நீ ஆக்கியருள்வாயாக.

வீண்விரயஞ் செய்பவர்களாயும்,
மனதிலே கபடத்தனம் உள்ளவர்களாயும், 
சோம்பேறிகளாயும், 
சரி பிழை உணராதவர்களாயும், 
தலைக்கணம் நிறைந்தவர்களாயும் 
நாம் இல்லாமலிருக்க 
உன்னிடமே அடைக்கலம் தேடுகிறோம்.  

நஃப்ஸிற்கு அடிமைப்பட்டு 
எமது வர்த்தகத்திலும், வாழ்க்கையிலும்
கெட்ட செயல்களைப் புரிபவர்களாக 
எம்மை நீ ஆக்கிவிடாதே.

எங்கள் இறைவா !
எமது வர்த்தகத்தில் விருத்தியும், வெற்றியும் அளிப்பாயாக.

ஆமின்.  🤲
.
.
அன்றவர்கள் 
தன்னையும், தமது ஊழியர்களையும் 
அதற்கேற்ப வழிப்படுத்தினார்கள்.
மக்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்து, 
சேமித்துக் கொண்டுவரும் பணத்திற்கு
தரமான, ஹலாலான பொருளையே 
விற்பனை செய்ய விரும்பினார்கள்.

துரதிஷ்டவசமாக,
இன்று நம்மிடையே 
இதுபோன்ற மக்கள் நலன் அம்சங்கள் 
இருந்தால் எவ்வளவு நலமாக இருக்கும்.
நான் சங்கங்களைச் சொல்லவில்லை.
நானும் ஒரு நுகர்வாளன் என்பதால்
நோக்கத்தையும், முறைமையையுமே சொல்கிறேன்.
.
.
முஹம்மத்❤️ஸன்ஸீர்.
22.01.2K22, சனிக்கிழமை.

Thursday, January 20, 2022

மனசுக்குத் தான் ❤️
எத்தனை முகங்கள்.


பிறரிடம் பேசிப் பகிரப்படுவதை
ஒருவர் விரும்பாத அவரது குறையைப்
புறமாகப் பேசாதீர்கள்.
அவதூறுங் கூறாதீர்கள்.
என்றார்கள் முஹம்மத் நபி (ஸல்) அவர்கள்.
(ஸஹிஹ் முஸ்லிம் 2589)

ஏனாக இருக்கும் ... ?

சமீப காலமாக என்னையும்,
என்னைச் சார்தவர்களையும் சூழ
நிகழுகின்ற சம்பவங்களையெல்லாம்
ஒட்டுமொத்தமாக சித்தித்துப் பார்க்கும்போது
என் புத்திக்குப் புலப்படுவது இதுதான்.

ஒரு மனிதனின் புன்னகைக்குப் பின்னால்
உள்ளத்தில் என்ன ஓடுகிறது என்பதை
இறைவன் அறியத் தந்தாலேயன்றி
அதனை நம்மால் அறியவே முடியாது.
மனிதனின் உள்ளம்
ஒளிபொருந்திய மென்மையாகவும் இருக்கலாம்.
இருள் நிறைந்த மிருகத்தனமாகவும் மாறலாம்.
என்கிறபோது

நம்மிடம் ஒரு முகமும்
பிறரிடம் இன்னொரு முகமாய்
இருப்பவர்களை
எங்கனம் நாம் இனங்காண்பது?

சொல்பவர் நல்ல நண்பர்தான்
சொல்லப்படுவதும்
நமது நலனுக்காகத்தான் என்றாலும்
இன்னொருவரின்
பிறழ் நடத்தை பற்றிய தகவல்
புறமாக நம்மை வந்து சேருகிறபோது ...

அதை வைத்து ஷைத்தான்
அவருடனான நமது அணுகுமுறையை,
அவர் பற்றிய நமது மனப்பாங்கை மாற்றி
அவரது விடயத்தில்
நமது நற்பண்புகளை இழக்கச் செய்துவிடுகிறான்.
அதனால் தான்,
புறம் பேசாதீர்கள்.
புறம் பேசப்படும் இடத்திலும் இருக்காதீர்கள்
என்று சொல்லப்படுகிறது.
ஆனாலும்,
நாம் எவ்வளவோ பேசுகிறோம், கேட்கிறோம்.

ஒவ்வொருவருக்கும்
இறைவன் தான் நாடியதைக் கொண்டும்
தத்தமது கரங்களால் மனிதர்கள்
தேடிக்கொண்டதைக் கொண்டும் சோதிக்கிறான்.
அதிலே நாம் பொறாமைப்படுவதற்கு
எதுவுமேயில்லை.
என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும்.

ஒரு தீவிர முயற்சி
அல்லது தீராத ஆசை கொண்டதொரு ஆன்மா
முயன்றது கிட்டவில்லை என்றதும்
அதிலே வெற்றியை
இறைவன் தனக்கு நாடவில்லை என்றோ,
அந்த முயற்சியிலே
தான் கற்றுக்கொள்ள எதையோ
தனக்காக வைத்திருப்பான் என்றோ
எடுத்துக்கொள்வதில்லை.
மாறாக,
ஷைத்தானின் தூண்டுதலினால்
தோல்வியுணர்ச்சியும்,
பொறாமையும், காழ்ப்புணர்ச்சியுங் கொண்டு
பேசியும், சேறு பூசியும் தட்டலைகிறது.

மேன்மக்கள்
பதவிகளை விட்டு விரண்டோடியது
கேள்வி கணக்கிற்குப் பயந்துதான்.
இப்போதெல்லாம்
பயப்படவேண்டி இருக்கிறது.
எண்ணம் தூய்மையாக இருந்தால்
இறைவன் பாதுகாப்பான்.

இப்போதெல்லாம்
எவர் மனதில் என்ன ஓடுகிறது
என்பதை அறிய முடியாமல்
பேசுவதற்குக் கூட பயமாக இருக்கிறது.
வார்த்தைகளை வெகுவாகக் குறைத்தும்
வேண்டாத தகவல்களை
விட்டு வெகுதூரம் விலகியும் இருக்கவே
விரும்புகிறதென் மனசு ❤️

குறையும், புறமும்
பேசித் திரிபவர்களுக்குக் கேடுதான்
என்கிறான் அல்லாஹ்.
(அல்ஹுமஜா 104:1)
.
.
முஹம்மத்❤️ஸன்ஸீர்.

20.01.2K22, வியாழன். 

Monday, January 17, 2022

கடல் 🌊🌊


 நீலமும் வெள்ளையும். 

நீயும் நானுமாய்.

.

.

சந்தம் இல்லாத ஒலியெல்லாம் 

சகிக்க முடியாத சத்தம் என்றும்

சந்தம் இருக்கும் ஒலியெல்லாம் 

சுகிக்க இயலுமான இசை என்றும்

சயன்ஸ் பாடத்தில் கற்பித்த என்னிடம் ...


உன்னைப் பற்றி 

இன்னும் என் மாணவர்கள்

நல்லவேளை கேள்வி எழுப்பவில்லை.


உன் சந்தம் இல்லாத இரைச்சல் 

ஏன் உண்மையில் இரைச்சலாய் இல்லை?

இன்பமாய் இருக்கிறது.


உன் ஓயாத ஓசைக்கும் 

என் உள்ளத்தின் பாஷைக்கும் இடையில்

ஏதோவோரு ஒற்றுமை இருந்தாக வேண்டும்.

ஆச்சரியமாய் இருக்கிறது.


ஒலி, ஓசை, நாதம் 

என்ற வகைகளுக்குள்

குரலோசை, குயிலோசை, அலையோசை என்று நீ

ஓசைக்குள் அடங்கி விடுகிறாய்.

ஏனெனில் நீ இயற்கை.


இயற்கையான எல்லாமே 

இயல்பாக இருக்கும்போது அழகுதான்.

நிலவைப் போலவே

உன்னையும் நேசிக்காதவர்கள் யாருமுண்டா?


நாங்கள் மட்டும் 

விதி விலக்கா என்ன?

நாங்களும் நண்டுகள் தான்.

.

.

முஹம்மத்❤️ஸன்ஸீர்.

காத்தான்குடி கடற்கரை.

Sunday, January 16, 2022

உள்ளத்தைக் ❤️ காயப்படுத்தாதீர்கள்.                     (New ❤️)


தூய ❤️ உள்ளம் என்பது
இறைவன் இருக்கும் இடம் எனப்படுகிறது.
எந்த உள்ளத்தில்
இறைவன் இருக்கிறான் என்பதை
நாமறிய மாட்டோம்.

காயப்பட்ட உள்ளத்திற்கும்
இறைவனுக்கும் இடையில்
திரைகளுங் கிடையாது.
ஆதலால்,
எந்த உள்ளத்தையுங்
காயப்படுத்தாமல் இருப்பதே நல்லது.

 வார்த்தை 
கூர்மை மிகு ஆயுதமும் அதுதான்.
குணப்படுத்தும் மருந்தும் அதுதான்.
வார்த்தை பற்றியா சுவாரஸ்யங்களை
இன் ஷா அல்லாஹ்,
பிறிதொரு பதிவில் பார்க்கலாம்.

குறைந்தபட்சம்
முதல் 15 ஆண்டுகால வாழ்க்கை அனுபவங்களும்,
அவரவர் சமயம் போதிக்கும்
தர்மம், நீதி பற்றிய கல்வியும் சேர்ந்து
ஒரு மனிதனில்
சரியெது பிழையெதுவென்று
பிரித்துணரக்கூடிய அளவிற்காவது
உள்ளத்திற்கும் நஃப்ஸிற்கும் இடையிலான
உண்மைப் போராட்டத்தை உண்டுபண்ணக்கூடிய
 மனச்சாட்சி  என்ற ஒன்றை
உருவாக்கி இருக்கும் என்பது
எனது எடுகோளாகும்.

எனது ஆன்மாவுக்கு
அநியாயம் செய்துகொண்ட நான்
கெஞ்சிக், கண்ணீர் விட்டழுது
தொழுது மன்றாடி
இறைவனின் அன்பை வேண்டி
அவனிடம் மன்னிப்பைப் பெற்றுக்கொள்ளலாம்.
வாய்ப்பிருக்கிறது.
ஏனெனில்,
அவன் அளவற்ற அருளாளன்
நிகரற்ற அன்புடையவன்.
மன்னிக்கக் காத்திருப்பவன்.

ஆனால்,
நானோ நீங்களோ
இன்னொரு ஆன்மாவுக்குச்
செய்யும் அநீதியை, அதர்மத்தை அல்லது
அவரது உள்ளத்தைக் காயப்படுத்திய பாவத்தை
ஆண்டவனிடம் அழுது மன்றாடி மட்டும்
அழித்துவிட முடியுமா என்ன?
முடியாது.
பாதிக்கப்பட்டவரின் மன்னிப்பில் தான்
தனது மன்னிப்பின் கதவை வைத்திருக்கிறான்
இறைவன்.

சுபஹ் தொழுகையொன்றைத்
தவற விட்ட பாவத்தையும்
இன்னொருவர் கறும்பைத்
தெரியாமல் எடுத்துவந்த பாவத்தையும்
ஒரே விதத்தில்
சரி செய்ய முடியாது.

மகிழ்ச்சியான விஷயம் யாதெனில்,
மன்னிப்புக் கோரி மீண்டுகொள்ள
எனக்கும் உங்களுக்கும்
மறுமைநாள் வரை வாய்ப்பிருக்கிறது.
ஆனால்,
மறதி என்று வரும் என்றோ
மரணம் என்று வரும் என்றோ
நானும் நீங்களும் அறிய வாய்ப்பில்லை.

அதிலும்,
பாதிக்கப்பட்டவரின் மரணமோ
எப்பொதென்று தெரியாதே நிலையில்
நாமாக முந்திக்கொள்ள வேண்டும் அல்லவா?

ஒருவேளை,
நமது மரணம் முந்திவிட்டால்
இறைவன் நாடினால்,
நம்மால் பாதிக்கப்பட்டவர்
நமக்காக மனமிளகி
நம்மை மன்னிக்கவும் வாய்ப்புண்டு.
நம்மால் பாதிக்கப்பட்டவரின் மரணம்
நம்மை முந்திக்கொண்டால்
நாம் என்ன செய்வது?

நாளை மறுமை நாளில்
நமது நன்மைகளை நம் கண் முன்னே
கொத்துக் கொத்தாக அள்ளிக் கொடுத்தோ
கணக்கு தீர்க்க அவை போதவில்லை என்றால்,
அவரது தீமைகளை நாம்
அள்ளியள்ளி எடுத்துத் தான்
பாவத்திற்குப் பரிகாரம் செய்ய நேரிடும்.

நபியவங்க சொன்னதுபோல
மறுமை நாளில்
வங்குரோத்துக்காரர்கள் ஆகிவிடுவோம்.
மிகப் பெரிய நஷ்டமாக அது ஆகிவிடும்.
எல்லாம் வல்ல இறைவன்
நம்மைப் பாதுகாப்பானாக.
ஆமின்.

அதிகாரங்களால்,
பெருமையால், பொருளாதாரத்தால்
கல்வியால், காசு பணத்தால்
கௌரவத்தால் என்றெல்லாம் நம்மால்
நேரடியாகவோ, மறைமுகமாகவோ
மனம் நொந்தவர்கள்
எத்தனை பேர் இருக்கக்கூடும்?
மறைமுகமாகப் பாதிக்கப்பட்டவர்களை
எப்படிக் கண்டறிவது?
கஷ்டம்.

இனிமேலாவது
இன்னொரு ❤️ உள்ளத்தையேனும்
காயப்படுத்தாமல் கடந்து செல்வோம்.
.
.
முஹம்மத்❤️ஸன்ஸீர்.
16.01.2K22, ஞாயிறு.

படம்: Google

Saturday, January 15, 2022

"மனசும் நானும்"

பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்.
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாதுஹு.


."செயல்கள் அனைத்தும் எண்ணங்களைப் பொருத்தே அமைகின்றன. 

ஒவ்வொருவருக்கும் அவர் எண்ணியதே கிடைக்கிறது. 
ஒருவரின் ஹிஜ்ரத் (துறத்தல்) உலகத்தைக் குறிக்கோளாகக் கொண்டிருந்தால் 
அதையே அவர் அடைவார். ஒரு பெண்ணை நோக்கமாகக் கொண்டால் அவளை மணப்பார். 

எனவே, ஒருவரின் ஹிஜ்ரத் எதை நோக்கமாகக் கொண்டதோ அதுவாகவே அமையும்" என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: 


என உமர் இப்னு கத்தாப் (ரலி) அவர்கள் மேடையிலிருந்து அறிவித்தார்கள். 

ஸஹீஹ் புகாரி : 1. 
அத்தியாயம் : 1. இறைச்செய்தியின் ஆரம்பம்


பிறப்பும் இறப்பும்
பிரிக்க முடியாத யதார்த்தங்கள் இல்லையா !

இடைப்பட்ட காலத்தில்
இந்த உலகில் நாம்
பிறருக்கு யாதாயினும்
பலனுள்ள ஒன்றை விட்டுச் செல்வது
ஈருலகிலும் பயன்மிக்கதல்லவா.

அதனை மூன்று வழிகளில் செய்யலாம்.

1. சாலிஹான பிள்ளைகள்.
2. சிந்திக்கத் தூண்டும் நூல்கள் (போன்ற சதகதுள் ஜாரியாக்கள்). 
3. சிறப்பான சேவைகள்.

என் வாழ்கையில் இந்த நிய்யத்துக்கள் 
கீழிருந்து மேலாக 
படிப்படியாக நகர்ந்து கொண்டிருக்கின்றன 
என்றே நினைக்கிறேன்.

ஆசிரிய சேவையை அடுத்து,
மூன்று தசாப்த கால 
வாழ்க்கை அனுபவங்களின் அடிப்படையில்
இன் ஷா அல்லாஹ்,
நாலு பேருக்குப் பயனளிக்கக்கூடிய
நூலான்றை வெளியிடலாமே 
என்ற எண்ணம் இருந்து வருகிறது.

அதுவரை, 

இதுவரை காலமும் எழுதிவருகின்ற
ஆக்கங்களையும், பதிவுகளையும்
ஓரிடத்தில் ஒன்று சேர்க்க நினைக்கிறேன்.
இறைவனின் நாட்டமிருந்தால்
விதியும் அவ்வாறு இருந்தால்,
குறைந்தபட்சம் தந்தையின் ஆக்கங்கள் என்று 
மகனாவது படிப்பதற்கேனும்
எதிர் காலத்தில்
அவை உதவலாம் அல்லவா !

"மனசும் நானும்"
http://mohamedsanzeir.blogspot.com/

மாஷா அல்லாஹ்,
இந்த ப்ளொக் இல் அவை 
சேமிக்கப்பட்டு வருகின்றன.

ஆர்வமுள்ள நண்பர்கள்
அவற்றை வாசித்துப் பயன்பெறலாம்.
பின்னூட்டம் அளிக்கலாம்.
பகிரலாம்.
நற்செயல்களில் எனக்கும் 
நிகரான நன்மை தரலாம்.

ஜெஸாக்கல்லாஹு ஹைராஹ்.
நன்றிகள்.
.
.
முஹம்மத்❤️ஸன்ஸீர்.
16.01.2K22, ஞாயிறு.

இருப்பதும் ❤️ இல்லாதிருப்பதும்.


முதலில் எனக்கும்.

அப்பால் உங்களுக்கும் சொல்கிறேன்.

சொல்கிறேன் என்று 

சினம் கொள்ளாதீங்க.


இறைவன்,

ஆயிரக் கணக்கானவர்களுக்கு 

அளிக்காத ஒன்றை 

எனக்கு ஏன் அளித்திருக்கிறான்?

ஆயிரக் கணக்கானவர்களுக்கு 

அளித்த ஒன்றை 

எனக்கு ஏன் அளிக்காமலிருக்கிறான்?


இரண்டுமே 

இறைவனின் அன்பு தான்.

இல்லாமல் இருப்பதன் விதியும்

அவனிடமே இருக்கிறது.


அவன்

அளித்திருக்கும் நிஃமத்துக்களில் 

அவனது அன்பைக் கண்டு கொள்ளுங்க. 

பொதுவெளிகளில் பகிர்ந்து 

பெருமை, பொறாமை, 

கண்ணூறு போன்ற கஷ்டங்களை 

நீங்களே ஏற்படுத்திக் கொள்ளாதீங்க. 


கொடுக்கப்படும் எல்லா நிஃமத்துக்களும்

எடுக்கப்படக் கூடியவையே.

நன்றியுணர்வுடன்

பிரார்த்தனைகள் மூலம் 

பாதுகாத்துக் கொள்ளுங்க. 

.

பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்.


அன்றியும் தீங்கு வந்து உங்களை அடைவதெல்லாம், 

அது உங்கள் கரங்கள் சம்பாதித்த (காரணத்)தால் தாம், 

எனினும், பெரும்பாலானவற்றை 

அவன் மன்னித்தருள்கின்றான்.

(அல்குர்ஆன் : 42:30)

.

"பெருமை" என்பது

பேசுவதால் மட்டும் 

பகிரப்படுவதில்லை.

பதிவுகள் மூலம்

விரல்களும் பேசி விடுகின்றன.

.

.

ஹஸரத் அய்யூப் (அலை) அவர்கள் 

தனக்கு இறைவன் அளித்த நற்பேறுகளைப்

பொதுவெளிகளில் பகிரவில்லை.

பதினான்கு பிள்ளைகளையும் 

ஒன்றன்பின் ஒன்றாக 

ஓரிறைவன் 

சோதிப்பதற்காக எடுத்துக் கொண்டான்.

இழந்ததைத் திருப்பித் தா என்று 

இறைவனிடங் கேட்கவில்லை.

பொறுமையையும், 

பொருந்திக் கொள்ளும் மனதையுமே

பிரார்த்தனை செஞ்சாங்க.


பின்னாளில்

இரு மடங்காக 

இருபத்தி எட்டுப் பிள்ளைகளை

துல் கிஃப்ல் என்ற நபியோடு 

கொடுத்துக் கௌரவித்தான்.

இறைவன் எனும் 

இணையில்லாப் பெருங் கருணையாளன்.

.

முஹம்மத்❤️ஸன்ஸீர்.

முஹர்ரம் 06, 1443. திங்கள்.

(16.08.2K21).

 வேர்களும், கிளைகளும்.


வழி மாறிய வாழ்கையால்

வேர்களில் சிதைவுகள்.

கிளைகளில் 

கலர் கலர் Bபல்புகள்.

இலைகளில் வழியும் வேதனை 

வெளியில் தெரிந்து விடாமல்.

.

உள்ளே முனகல். 

வெளியே மினுங்கல்.

சீர் செய்ய வேண்டியது

இலைகளையல்ல.

வேர்களை.


இரவுத் தூக்கம் 

இதமாக இருக்கணுமாயின் 

பகல் பொழுதுகள்

இரும்பாக இருக்காமல்

இறைவனோடும், 

இரக்க மனசோடுங் கழியணும்.


அல்ஹம்துலில்லாஹ்.

.

முஹம்மத்❤️ஸன்ஸீர்.

முஹர்ரம் 08, புதன்.

(18.08.2K21.)

 பூச்சியம் தசம் பூச்சியம் பூச்சியம்.


(நிஜக் கதை ஒன்று சொல்லட்டுமா?)

.

2K11 ஆம் ஆண்டு.


மேல் மாகாணத்தில் வேலை.

ராஜகிரிய, நாவல வீதியில் 

அலுவலகம் இருந்தது. 

ராஜகிரிய ஒடல் HQ அருகில் 

வாடகை வீடு. 


ஈ.டி.எஃப் (ETF) பணத்திற்கு விண்ணப்பித்து 

சில மாதங்கள் ஆன நிலையில்

நோன்புப் பெருநாள் 

இன்னும் ஒரு சில நாட்களில்

அண்மித்துக்கொண்டிருந்தது. 


முழுக் குடும்பத்திற்கும் 

ஆடைகள் எடுக்க வேண்டும். 

கையில் அவ்வளவாகப் பணமும் இல்லை. 

.

வாடகை வீட்டுக்கும் 

அலுவலகத்திற்கும் இடையில் 

ஒரு  HNB வங்கி இருந்தது. 

அந்த வங்கிக் கணக்கிற்குத் தான் 

ஈ.டி.எஃப் (ETF)  பணம் வர வேண்டும். 

வேலைக்குச் செல்லும் போதும் 

வீடு திரும்பும் போதும் 

தினசரி 4 தடவைகளாச்சும்

கியூவில் நின்று ATM அட்டை செருகி 

நிலுவை பார்க்கும் போதெல்லாம் ...


திரையில் தோன்றியது ......

0.00 மட்டுமே. 

சுமார் ஒரு வார காலம் 

இது மட்டுமே நிகழ்கிறது. 

தினசரி 4 தடவைகளாச்சும்

"0.00 " பார்க்கப்படுகிறது.


உண்மையைச் சொன்னால்

கொழும்பில் இருந்து ஊர் வரக் கூட 

கையில் பணமில்லை.

கடைசிக் கையிருப்பு வெறும் 350/= மட்டுமே. 

அன்றைய நாள் இஃப்தாருக்கும், 

இரவுச் சாப்பாட்டிற்கும் போதும்.

.

தேனிலும் இனிய ஏமாற்றங்களுக்கு 

இறைவன் அவனைப் பழக்கியது 

இப்படியும்தான். 

கூடவே_மனைவியும் இருந்ததால் 

கூடுதல் ஆறுதலாக இருந்தது. 

பிரார்த்தனைகளுக்குக் குறைவில்லை.

.

.

அன்று ஒரு நாள்

அலுவலகத்தில் இருந்து புறப்படுகிறான்.

பள்ளிவாசல் சென்று இரண்டு ரக்கஅத்துக்கள் 

தொழுது பிரார்த்தித்துவிட்டு நடக்கிறான்.


ATM இனுல் நுழைந்து 

ATM அட்டையைச் செருகுகிறான்.

காத்திருக்கச் சொல்கிறது கணனி.

........

........

........

........


0.00

.

பார்த்துப் பார்த்து பதிந்துபோன 

அதே பூச்சியம் தசம் பூச்சியம் பூச்சியம்.

வேகம் தளர்ந்த நடையுடன் 

வெளியேறி நடக்கிறான். 

வெறுமையின் விசாலம் உணர்கிறான். 

விடிந்ததும் என்ன செய்வது ...?

வழி கிடைக்கும் என்ற நம்பிக்கை மட்டும்

வலுவிழக்காமல் இருக்கிறது.

.

.

ஒரு 100 மீட்டர்கள் நடந்திருப்பான். 

கால்கள் நிற்கின்றன. 


இல்லையே ...

இப்போது நான் கடைசியாகப் பார்த்த இலக்கம் 

0.00 இல்லையே. 

வேறொன்று அல்லவா. 


ஆம், வேறொன்றுதான். 

நிச்சயமாக வேறொன்றுதான்.

நிச்சயமாக வேறொன்றுதான்.


மீண்டும் ATM செல்கிறான். 

நீண்ட கியூ நிற்கிறது. 

அவனால் நிற்க முடியவில்லை. 

தனது முறை வந்தபோது ...

ATM இனுல் நுழைந்து ATM அட்டையைச் செருகுகிறான்.

காத்திருக்கச் சொல்கிறது.

........

........

........

........


108,437.50

🦋...🦋...🦋...🦋

.

அல்ஹம்துலில்லாஹ். 

பள்ளிவாசல் சென்று 

இரண்டு ரக்கஅத்துக்கள் அழுது தொழுதுவிட்டு 

Bபலன்ஸ் ரிஷிப்டுடன் 

பறவையாகிக் கூடு விரைகிறான்.


அன்றைய இஃப்தாரும் இரவுச் சாப்பாடும் 

மிக இனிதாக இருந்தது.

மாஷா அல்லாஹ் ❤️

.

.

#பிரார்த்தனையும்_காத்திருத்தலும் 

#பலன்_தராமல்_இல்லை.

பலன் 

பல வகையிலும் இருக்கலாம்.

.

.

முஹம்மத்❤️ஸன்ஸீர்.

முஹர்ரம் 09,  வியாழன்.

(19.08.2K21).

 "கொரோனா"

கடைசிப் பிரார்த்தனையில் என்ன கேட்பது?


கோவிட் 19 எனப்படும் தொற்று நோய் 

SARS CoV-2 என்றழைக்கப்படும் 

ஒரு RNA வைரசுவினால் பரவுகிறது என்று கேள்விப்படுகிறோம். 

ஆரம்பத்தில்,

இதுவெல்லாம் உண்மை தானா என்ற சந்தேகம் 

எனக்குள்ளும் இருந்தது.


RNA வைரஸ்கள் பல்கிப் பெருகுகையில் 

அதன் RNA பிரதியாக்கத்தின்போது ஏற்படும் தவறுகள் 

(நைதரசன் உப்புமூல ஒழுங்கு மாற்றங்கள்) 

சரி பார்க்கப்பட்டுச் சீர் செய்யப்படுவதில்லை. 

அதனாலேயே புதிய வகைகள் உருவாகின்றன.

என்கிறது விஞ்ஞானம். 


இதன்படி, 

உலக சுகாதார நிறுவனத்தினால் 

உலகின் பல்வேறு நாடுகளில் 

2020 - 2021 ஆண்டுகளுக்கிடையில் இனங் காணப்பட்ட 

அல்பா, பீட்டா, காமா, டெல்டா என்ற தொடரில் 

SARS CoV -2 வைரஸ் வகைகள் சுமார் 11 உள்ளன.

(பயப்படாமல் படம் பார்க்க - படத்துல லம்டா இல்லை). 


கொஞ்சம் யதார்த்தமாகப் பேசுவமா ...?

.

இதுவரை காலமும் 

யாதாயினும் 

ஒரு நோயினால் பாதிக்கப்பட்ட நிலையில் 

மரணித்தவர்களில் 

பெரும்பாலானவர்கள்  

இறைவனின் உதவியால் 

மீண்டும் 

மீண்டு வந்து விடுவோம் 

என்று மனதார நம்பியவர்கள் தான்.


இதயத்தின் 

வலது சோணையறைச் சுவரினுள்  

இதய இயக்கி என்றழைக்கப்படும்

SinoAtrial / Sinus Node (SA கணு) இருக்கு.

1907 ஆம் ஆண்டுதான் 

கண்டறிந்து விபரிக்கிறாங்க மருத்துவர்கள்.


இதய இயக்கத்தின் பிரதான கட்டுப்பாடு 

இதனிடமே இருக்குது என்கிறது விஞ்ஞானம். 

ஆனால், 

SA கணுவினுடைய இயக்கக் கட்டுப்பாடு, 

ஏனைய அங்கங்கங்களைப் போல 

நரம்பு மற்றும் அகஞ்சுரக்குந் தொகுதியிடம் இல்லை

என்றும் சொல்கிறது அதே விஞ்ஞானம்.

சோ, சுயாதீனமாக இயக்குகிறது.


நான் மேலே சொன்ன 

இதய இயக்கியின் இயக்கம் நிறுத்தப்படும்போது 

அந்த மனிதனின் ஆயுளும் நிறைவடைந்திருக்கும்.

ஆனால் மனிதனோ, 

ஒவ்வொரு மரணத்திற்குப் பின்னாலும் 

ஒவ்வொரு காரணம் தேடிக்கொண்டிருக்கிறான். 


மரணத்திற்குக் காரணம் தேவையா?


சிந்தித்துப் பாருங்கள்.

ஏதோ ஒரு நோய் ஏற்பட்டுவிட்டால் 

பொதுவாக நாமெல்லாம் 

"என் இறைவா 

எனக்கு ஏற்பட்டுள்ள நோயைக் குணப்படுத்தி 

எனக்கு நிவாரணம் அளிப்பாயாக." 

என்றுதானே பிரார்த்தனை செய்கிறோம்.

இல்லையா?


அந்த நிவாரணத்திற்கு 

இன்னொரு பக்கமும் இருக்கிறது.

எந்த நோயுற்ற நிலைமையிலும் 

மரணித்துவிட நிகழ்தகவுண்டு. 

அந்நிலைமையில் 

உலகம் சார்ந்த ஈர்ப்பைத் தானே 

உள்ளத்தில் மிகைக்கச் செய்கிறான் ஷைத்தான். 

இறைவனிடம் பாவ மன்னிப்பையும்,

ஒருவேளை மரணித்தால்,

மன்னிப்பையும்,

மறுமையில் மேலான நிலையையும்

நிவாரணமாகக் கேட்கிறோமா?


நீடித்த நோயுடன் 

நெடுங்காலம் வாழ்பவர்களும் உண்டு.

சில நாள் நோயுடன் சென்றவர்களும் உண்டு.

நோயே இல்லாமலும் 

நின்ற நிலையிலும், நித்திரையிலும் 

கல்லறைக் கதவால் 

நிலையான உலகிற்குச் நுழைந்தவர்களும் உண்டு.

எனவேதான்,

நோயால் தான் மரணம் நேருகிறது என்பதை 

என்னால் ஏற்க முடியவில்லை.


பாதுகாப்பாக இருப்பது முதல் பொறுப்பு.

மருத்துவம் செய்வது அடுத்த பொறுப்பு.

பாவமன்னிப்புத் தேடுவது 

அனைத்திற்கும் அடிப்படைச் சிறப்பு.


😔 சுனாமி,

😔 தீவிரவாதிகளின் தாக்குதல்கள்,

😔 வெள்ளப் பெருக்குகள்,

😔 சில தீவிரவாதிகளால் தொடரும் 

     தீராத சோதனைகள்,

😔 தொற்றா நோய்கள் (நீரிழிவு, புற்றுநோய், etc.)

😔 தொற்று நோய்கள் (டெங்கு, கொரோனா, etc.) என்றெல்லாம் 


தொடரும் தொடர் சோதனைகள்

எம்மில் 

என்ன சிந்தனையைத் தூண்டியிருக்கு?

எவ்வகை சீர்திருத்தத்தை உண்டாக்கியிருக்கு?

.

எல்லாம் வல்ல இறைவா

எம் அனைவருக்கும்

உனது கருணையால் பாவ மன்னிப்பையும், 

வாழ்வில் நல்ல மாற்றங்களையும்,

இம்மையில் உன் பாதுகாப்பையும்

மறுமையில் மேலான நிலைமையையும்,

தந்தருள்வாயாக.

எங்கள் முடிவை சிறப்பானதாக ஆக்குவாயாக.

(ஆமின்)

.

முஹம்மத்❤️ஸன்ஸீர் 

முஹர்ரம் 09, வியாழன்.

(19.08.2K21).

Believe Yourself / Believe in You. 


போன்ற பதங்கள்.

தன்னம்பிக்கையையும் வளர்க்கும்.

தற்பெருமையையும் வளர்க்கும்.

தோல்வியின்போது 

துண்டு துண்டாகவும் உடைக்கும்.


இறை நம்பிக்கையில் எழுப்பப்படும் 

தன்னம்பிக்கையே 

இரண்டு முடிவுக்கும் தயாராக இருக்கும்.

தடம் மாறாமலும் 

தூள் ஆ (க்)காமலும் இயங்கும் - இயக்கும்.

.

முஹம்மத்❤️ஸன்ஸீர்.

 "மண்ணும் மனசும்" 


மண்ணின்

தன்மை யாதெனில் ...

அதனை ஒரு 

பூந்தோட்டமாய் மாற்ற  

#முயற்சியும்_பராமரிப்பும் அவசியம். 

.

அதனை ஒரு காடாய்,

முட்புதர் நிலமாய் மாற்ற 

முயற்சி அவசியமில்லை.

.

மனசுள்ள மனிதன் 

மண்ணால 

படைக்கப்பட்டவன். 

மீதியை 

நான் சொல்லத் தேவையில்லை.


அழகு.

அந்தஸ்து.

தொழில்.

செல்வம்.

குடும்பம்.

அதிகாரம்.

இவை அனைத்தும் இருந்தும் 

ஈற்றில் 

இறைவனால்

உலகிலேயே கேவலப்படுத்தப்பட்டவன் அபூலஹப்.


இவை எதுவுமே 

இல்லாமல் இருந்தும் 

ஈருலகிலும்  

இறைவனால் கௌரவப்படுத்தப்பட்டவர் 

#ஹஸரத்_பிலால்_(ரழி) 


இருவருக்கும் இடையில் 

இருந்த வேறுபாடு 

தக்வா.

தக்வா என்பது 

வெறும் வார்த்தையல்ல.

வாழ்க்கை.

.

மன்றாடி மீளவே முடியாத 

முடிவிடத்திற்கு வருவதற்கு முன்

இன்றே 

நின்று 

செல்லும் பாதை 

சரிதானா என்று காண்.

.

முஹம்மத்❤️ஸன்ஸீர்

முஹர்ரம் 10, வெள்ளி.

(20.08.2K21).

"செக்கண்ட் ஹேன்ட்"


ஒரே கடை - பல நிஜக் கதைகள்.

.

பாவித்த மோட்டார் சைக்கிள் ஒன்று 

வாங்கிக் கொடுக்கிறதுக்காக 

தனது சகலனைத் தனது நண்பரின் கடையொன்றுக்கு 

அழைத்து வருகிறார் ஒருத்தர். 

62,000 ரூபாவுக்கு மோட்டார் சைக்கிள் கைமாறுது. 

ஒருநாள் ஒடிப் பார்த்துட்டு 

பிடிக்காட்டி வருவன் என்ற இணக்கத்துடன்

இருவரும் போயிடுறாங்க. 

சிறிது நேரத்தில்,

அழைத்து வந்தவர் மீண்டும் கடைக்கு வந்து 

தனக்குரிய கொமிஷன் என்று 2,000 ரூபாவை 

கடை உரிமையாளரிடம் பெற்றுச் செல்றார்.

.

மோட்டார் சைக்கிளை வாங்கிச் சென்றவர் 

மறுநாள் மறுபடியும் வந்து 

"எனக்கு இந்த சைக்கிள் பிடிக்கல. 

பணத்தை மீளக் கொடுங்க" ன்னு கேட்க, 

60,000 ரூபாவை அவரிடம் நீட்டி 

"மீதி 2,000 கொமிஷனை ஐ 

உங்கள் சகலனிடம் பெற்றுக் கொள்ளுங்க". 

என்று கடைக்காரர் கூறிடுறார்.

.

வந்தவர் அதிர்ச்சியில், 

கெட்ட வார்த்தைகளால் 

தன் சகலனைத் திட்டிக்கொண்டே செல்கிறார். 

சொந்த சகலன்ட்டயே 

கொமிஷன் கறந்த சகலன்.

--------------------------------------------------------------------------------------------------------------------

அதே கடை

 

மோட்டார் சைக்கிள் ஒன்று வாங்க வருகிறார் 

இன்னொரு நண்பர். 

ஒரு மோட்டார் சைக்கிள் 67,000 ரூபாவுக்கு கைமாறுது. 

50,000 ரூபாவைக் கொடுத்துட்டு, 

மீதி 17,000 ரூபாவை ஒரு மாத கடன் என்று 

அன்றைய திகதியுடன் தன் கைப்பட பில்லில் எழுதி 

ஒப்பமிடுறார் வாங்கியவர். 


மூன்று மாதங்களாகியும் கடன் வரல. 

தொலைபேசி அழைப்பிற்கும் பதிலில்ல. 

கடை உரிமையாளர் 

கடன்காரரின் வீட்டுக்குச் செல்கிறார். 

அவரது மனைவி வெளியில் வந்து 

"கணவர் வீட்டில் இல்லை". என்கிறாங்க. 


"உங்க கணவர் 17,000 ரூபா கடன் தரவேண்டியிருக்கு. 

மூன்று மாதங்களாகிட்டு. 

தொலைபேசி அழைப்பிற்கும் பதிலில்ல." என்றதும் ... 

.

17,000 ரூபா வா...? 

இல்லையே 13,000 தானே தரணும். 

54,000 ரூபா கொண்டு வந்தாரே". 

என்கிறா அந்தப் பெண்.

.

இதோ உங்க கணவர் கைப்பட எழுதிய 

கடன் தகவல் என்று பில்லைக் காட்ட, 


"இஞ்சங்க நீங்க மோட்டார் சைக்கிள் கடன் 17,000 குடுக்கணுமாமே.

என்கிட்ட 54 குடுத்த, 13 தான் கொடுக்கணும்னு தானே சொன்னீங்க. 

கொஞ்சம் வீட்டுக்கு வாங்க ...." ன்னு 

போன்ல சம்மன் அனுப்புறா மனைவி. 

.

ஆத்தலா 4,000 க்கு ஆட்டைய போட்டுட்டு 

ஆத்துக்காரிக்கே அல்வா குடுத்த கணவன். 

-------------------------------------------------------------------------------------------------------------

இனி என்னெய்ர 

இப்பிடியும் வாரான்.

இப்படித்தான் இருக்கிறது சில உறவுகள்.

இப்படித்தான் 

இமைப்பொழுதில் குலைகிறது நம்பிக்கைகள்.

.

முஹம்மத்❤️ஸன்ஸீர்.

முஹர்ரம் 12, ஞாயிறு.

(22.08.2K21).

சிறை வைக்கப்பட்ட சுதந்திரம்.


பொழுதுபோக்கு என்று 

கூண்டுகளில் வளர்க்கப்படும் 

பறவைகளைக் காணும் போதெல்லாம் ...


எனக்கொரு கூடும்

சிறையில் அகப்பட்ட  

சுதந்திரமும் தான் 

தென்படுவதுண்டு.

 

பறவைகளைக் கூண்டிலடைத்துப்                   

பொழுது போக்கென்று வளர்ப்பதற்கு 

இரக்கம் என்ற வடிவில் கொஞ்சம்                                                 

அரக்க குணமும் என்னிடம்

இருக்க வேண்டும்.


ஆனால்,

ஒரு ஜன்னலும்

கவிதையுமாய் ...

விடுதலை பற்றிப் பேசுகிறோம்.

நமக்குத்தான் லொக்ட் டௌன்

புதிதாகவும் இருக்குது.


சிறகு விரித்துப் 

பறக்க விரும்பும் ஆன்மாவும் 

இப்படித்தான்

சிந்தனைச் சகதிக்குள்

சிறை வைக்கப்பட்டிருக்கும்.

.

முஹம்மத்❤️ஸன்ஸீர்.

முஹர்ரம் 13, திங்கள்.

(23.08.2K21).

"நான் பாதுகாப்பான ❤️ ஒருவனா?

"இறைத் தூதர் அவர்களே! 

இஸ்லாத்தில் சிறந்தது எது?" 

என்று நபித் தோழர்கள் கேட்டதற்கு ...


"எவருடைய நாவிலிருந்தும் கரத்திலிருந்தும் 

பிற முஸ்லிம்கள் பாதுகாப்புப் பெற்றிருக்கிறாரோ 

அவரின் செயலே சிறந்தது" என்று 

இறைத் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: 

என அபூ மூஸா (ரலி) அறிவித்தார்.


ஸஹீஹ் புகாரி : 11. 

அத்தியாயம் : 2. ஈமான் எனும் இறை நம்பிக்கை.

.

இன்றைய வியாபாரத்திலே 

வாடிக்கையாளர்களுக்கு விற்பனை செய்கின்ற ...

அல்லது

நாம் மற்றவருக்கு வழங்குகின்ற ...


1. உணவுகள் / மருந்துகள் - ஆரோக்கியமானதாக இருக்குதா?

2. பொருட்கள் - (பணத்திற்குரிய) பெறுமதிக்குரியதாக இருக்குதா?

3. பணம் - ஹலாலானதாக இருக்கிறதா?

4. வழிகாட்டல்கள் - நேர்வழிக்குரியதாக இருக்குதா?

5. உதவிகள் - தூய (உள்)நோக்கம் உள்ளதாக இருக்குதா?

.

"நான்" 

இன்னொரு மனிதனுக்குப் 

பாதுகாப்பான ❤️ ஒருவனாக இருக்கிறேனா ... ?

யோசித்துப் பார்க்கிறேன்.

.

முஹம்மத்❤️ஸன்ஸீர்.

முஹர்ரம் 17, வெள்ளிக்கிழமை.

(27.08.2K21).

 சோதனையிலும் அருள் ❤️அருளிலும் சோதனை.


முஹம்மது நபி (ஸல்) அவர்கள் தொழும்போது, 

நபியின் பேத்தியான, 

சிறு குழந்தையாக இருந்த *உமாமா (ரழி) அவர்களை 

தொழுகையின் நிலையில் 

தன்னோடு தூக்கி வைத்துக் கொள்வாங்கலாம் நபி. 

ஸுஜுதிற்குச் செல்லும்போது 

உமாமா (ரழி) அவர்களை கீழே வைப்பாங்கலாம். 

பின்னர் மீண்டும் நிலைக்குச் செல்லும்போது 

குழந்தையைத் தூக்கிக் கொள்வாங்கலாம்.


*உமாமா (ரழி) அவர்கள்  

நபியின் + கதீஜா (ரழி) அவர்களின் மகளான ஸைனப் (ரழி) அவர்களின் புதல்வியாவாங்க.

.

தொழும்போது, 

ரஸூல் (ஸல்) அவர்களின் கழுத்தில் 

நபியின் பேரக் குழந்தைகள் 

ஏறி விளையாடியதையும், 

நபியவர்கள் ஸுஜுதை நீட்டித் தொழுததையும் 

காலையில் ஒரு பயானில் கேட்கிறேன்.


மாலையில், 

மஹ்ரிப் தொழும்போது 

முதுகில் ஏறி விளையாடுகிறான் 

மகன். 


மகனாலும்

நபியவங்க ஞாபகத்திற்கு வாராங்க. 

மனதில் மகிழ்ச்சியும், 

முகத்தில் புன்னகையும் பூக்கிறது.


மாஷா அல்லாஹ்.

சோதனையிலும் அருள் ❤️ இருக்கு.

அருளிலும் சோதனை இருக்கு.

.

முஹம்மத்❤️ஸன்ஸீர்.

முஹர்ரம் 17, வெள்ளிக்கிழமை.

(27.08.2K21).

நல்லுணர்வு பெறுவோமாக !


மேலும் அல்லாஹ்தான் காற்றுகளை அனுப்புகிறான்; 

அவை மேகங்களை செலுத்துகின்றன.


பின்னர் அவற்றை (வரண்டு) இறந்து கிடக்கும் 

நிலத்தின் மீது இழுத்துச் செல்கிறோம். 

(மழை பெய்யச் செய்து) அதைக் கொண்டு 

நிலத்தை அது (வரண்டு) இறந்து போனபின் 

உயிர்ப்பிக்கின்றோம். 


(இறந்து போனவர் மறுமையில்) உயிர்பெற்று எழுவதும் 

இவ்வாறே இருக்கிறது.

(அல்குர்ஆன் : 35:9)

.

அவன் தான், 

தன்னுடைய அருள் (மாரிக்)கு முன், நற்செய்தியாக 

(குளிர்ந்த) காற்றுகளை அனுப்பிவைக்கிறான்; 

அவை கனத்த மேகங்களைச் சுமக்கலானதும் 

நாம் அவற்றை இறந்து கிடக்கும் (வரண்ட) பூமியின் பக்கம் 

ஓட்டிச் சென்று, அதிலிருந்து மழையைப் பொழியச் செய்கின்றோம்; 

பின்னர் அதைக் கொண்டு 

எல்லாவிதமான கனிவகை (விளைச்சல்)களையும் 

வெளிப்படுத்துகின்றோம்.


இவ்வாறே நாம் இறந்தவர்களையும் எழுப்புவோம். 

(எனவே இவற்றை யெல்லாம் சிந்தித்து) 

நீங்கள் நல்லுணர்வு பெறுவீர்களாக.

(அல்குர்ஆன் : 7:57)

.

.

சுபஹானல்லாஹ் ❤️

(படம்: போர்த்துக்கல்)

நேர்மை - பேராசை - நீதி.


முஃமின்களே ! 

நீங்கள் நீதியின்மீது நிலைத்திருப்பவர்களாகவும், 

உங்களுக்கோ அல்லது (உங்கள்) பெற்றோருக்கோ 

அல்லது நெருங்கிய உறவினருக்கோ 

விரோதமாக இருப்பினும் 

அல்லாஹ்வுக்காகவே 

சாட்சி கூறுபவர்களாகவும் இருங்கள்.


எனவே நியாயம் வழங்குவதில் 

மன இச்சையைப் பின்பற்றி விடாதீர்கள்; 


மேலும் நீங்கள் மாற்றிக் கூறினாலும் 

அல்லது (சாட்சி கூறுவதைப்) புறக்கணித்தாலும், 

நிச்சயமாக அல்லாஹ் 

நீங்கள் செய்வதையெல்லாம் 

நன்கு அறிந்தவனாகவே இருக்கின்றான்.

(அல்குர்ஆன் : 4:135).

.

"நேர்மை" 

நிச்சயமாக ஒரு பெருஞ் சுமையே.

அதனைச் சுமக்க முடியாதவர்கள் 

அதன் கீழ் ஒரு நாள் ...

சுக்குநூறாக 

நொருங்கிப் போவார்கள்.


ஏனெனில்,

"பேராசை" 

ஒருவனின் மூளையை (உள்ளத்தை) 

ஆக்கிரமித்து விட்டால், 

பகுத்தறிவு 

அங்கிருந்து வெளியேறி விடும்.


நெருங்கிய உறவுகளுக்கு இடையில் 

நீதி செலுத்தும்போது

நமது நெஞ்சமுங் காயப்படத்தான் செய்யும்.


ஏனெனில்,

"நீதி" என்பது

இரு பக்கமும் கூரான வாள் போன்றது.

சில சந்தர்ப்பங்களில்,

பிடித்திருக்குங் கையையும் 

அது காயப்படுத்தும்.


அதனால தான்,

அதன் நற்கூலி மிகப் பெரியது.

.

முஹம்மத்❤️ஸன்ஸீர்.

முஹர்ரம் 19, ஞாயிற்றுக்கிழமை.

(29.08.2K21).

"காகம்"


ஒரு நிஜக் கதை சொல்லட்டுமா?

.

இன்று முஹர்ரம் 21 (31.08.2K21) காலையில் 

நெகிழ்ச்சியான ஒரு சம்பவம் நிகழ்ந்தது.


நேரம் காலை 11:30 இருக்கும்.

முத்த வாப்பாவின் 

மோட்டார் சைக்கிளில் ஏறி 

மகன் விளையாடிக்கொண்டிருந்தது

எனது அறை ஜன்னலின் ஊடாகத் தெரிந்தது. 

மோட்டார் சைக்கிளில் இருந்த ஹெல்மட் கீழே விழுகிறது. 

அதை எடுக்க முயலுகிறான் மகன். 

விழுந்து விடுவானோ என்ற அச்சத்தில் 

வெளியே சென்று அவரோடு நானும் விளையாடுகிறேன்.  


"தம்பி வாப்பா !! 

காகம் ஒண்டு பிளேட்டுல வலையில சிக்கிக் கிடக்கு. 

பாவம் எடுத்துடுங்க." என்று 

அயல் வீட்டு மாடி பல்கனியில் இருந்து 

ஆகிலா வின் குரல் பலமுறை வருகிறது. 

ஆகிலா (04) என் சகலன் Muhammed Muhammed இன் மகள். 

சுட்டியான, சுறுசுறுப்பானவள்.

என்ன தான் சொல்கிறாள் 

என்று பார்க்கலாம் என்று 

ஏணியை எடுத்துபோட்டு எறிப் பார்த்தால் ...


ஹஸரத் பிலால் (ரழி) அவர்களின் ஞாபகத்தில் 

இதயம் நெகிழ்ந்து போகிறது. 

காகம் ஒன்று மீன்வலையில் சிக்கி, 

பிளேட் இன் வெயிலில் சோர்ந்து கிடக்கிறது. 

"கத்தரிக்கோல் ஒன்று எடுத்து வாங்க." 

என்று சொல்லி முடிப்பதற்கு முன்னரே 

காலடியில் வந்து நிற்கிறாள்

கத்தரிக்கோலோடு ஆகிலா. 


பிளேட் இன் மேலேறி 

காகத்தை மெதுவாகத் தூக்கிப் பார்க்கிறேன்.

எங்கே ... கொத்திவிடுமோ, 

காலால் கீறிவிடுமோ என்று 

எனக்குள்ளும் சிறிது அச்சம் இருந்தது.

என் தலைக்குமேலே

நூற்றுக் கணக்கான காக வட்டங்கள் வேறு.


தாகத்தோடு இருந்திருக்க வேண்டும்.

நாய்க்குத் தண்ணீர் புகட்டி 

சுவனம் சென்ற பெண்தான் நினைவுக்கு வந்தாள்.

"தண்ணீர்" என்றதுமே 

தான் படிக்கும்போது குடிப்பதற்காக 

தனக்கென எடுத்து வைத்திருந்த தண்ணீரைக் 

கொண்டுவந்து தருகிறார் இமாஸ் (10 - ஆகிலாவின் சகோதரன்). 

தண்ணீர் புகட்டியதும் 

கொஞ்சமாகக் குடித்தது என்று நினைக்கிறேன்.

அதன் கண்களில் பயம் இருந்தது. 

உடலில் எவ்வித திமிறல்களும் இல்லாமல் 

அந்த ஆன்மா பலவீனமாக இருந்தது.

உடல் முழுக்க வலை சிக்கியிருந்தது.

கால்கள், கழுத்து, இறக்கைகளில் 

கன்னாபின்னாவென்று சிக்கிக்கிடந்த வலையை 

கொஞ்சங் கொஞ்சமாகக் கத்தரித்து நீக்கியாச்சு.


இவை எல்லாவற்றையும் 

இமைக்காமல் பார்த்துக்கொண்டிருந்தார் 

பால்கனியில் நின்ற மகன் ஸுதைக் (02). 


மெதுவாகக் கையை விரித்ததும் 

பறப்பதற்கு திராணியற்று 

பாதையில் போய் இறங்கியது காகம்.

இறக்கைகளை உதறி உதறி சுதாகரித்துக் கொண்டது.

ஒரு நிழலான இடத்தில் சென்று நின்றுகொண்டது.

ஒரு பாத்திரத்தில் தண்ணீர் வைத்தோம்.

சிறிது நேரத்தின் பின்னர் 

எங்கள் கவலைகளையும் தூக்கிக்கொண்டு 

பறந்து போனது.


ஆகிலாவின் முகம் முழுக்க 

அவ்வளவு மகிழ்ச்சி இருந்தது.

உரிய நேரத்தில் தகவல் கொடுத்து 

ஒரு உயிரைக் காப்பாற்றிய பெருமிதம் 

அவளிடம் மிகத் தெளிவாகத் தெரிந்தது.

அவளைப் பாராட்டினோம். 

மகனும் மழலை மொழியில் 

கண்டதை விவரித்துக்கொண்டே இருந்தான்.

.

.

சிறிது நேரத்தின் பின், 

வீட்டில் ஒரு பரிசளிப்பு விழா நடந்தது.

ஒரு உயிரைக் காப்பாற்ற எடுத்த முயற்சிகளைப் பாராட்டி 

ஆகிலாவிற்கு 

அவளுக்குப் பிடித்த சொக்கலேட் 

அனைவரது கைதட்டலுடன் பரிசளிக்கப்பட்டது.

உன்னதமான செயல்களை

உடனே பாராட்டிவிட வேண்டும்.

தண்ணீர் கொடுத்து உதவியமைக்காக 

இமாஸ் இற்கும் சொக்கலேட்டும் கைதட்டலுங் 

சேர்ப்ரைஸ்ஸாக் கிடைத்தன. 

மகனின் கண்கள் எதையோ தேடியது. 

அவருக்கும் கைதட்டலுடன் 

அதே சொக்கலேட் கிடைத்து.

அது நமக்கும் தான்.

இதையெல்லாம் அவர்கள் எதிர் பார்க்கவில்லை.


காகத்தை நீங்க கவனிச்சிருக்கீங்களா?

பகலெல்லாம் திரியுங் காகம்

இரவு பரவும் நேரம் ...

கூடு சென்று சேர்ந்து விடும்.

குவியலாய் பிரியாணி கொட்டினாலும்

ஒரு காகங் கூட கரையாது.

அவ்வளவு வாழ்வொழுக்கம் உள்ளவை.

மனிதன் தான் 

இரவைப் பகலாக்கி

இ(ப)றந்துகொண்டிருக்கிறான்.


அந்தக் காகத்தின் மரணம் 

அந்த வலைச் சிக்கலில் இருக்கவில்லை.

அதன் விதி வேறு ஒன்றாக இருந்தது.

ஆனாலும்,

இந்த சம்பவம் ஏன் நிகழ்ந்தது? என்பது

எனக்குப் புதிராகவும் இல்லை.


அளவற்ற அன்புடைய இறைவன்

அந்த உயிரைப் பாதுகாக்க நிகழ்த்திய சம்பவத்தில் 

நிறையவே ஞாபகமூட்டல்கள் வைத்திருந்தான்.

என்னுடைய உயிரையுமவன் 

இதுபோல பாதுகாத்த 

பல தருணங்கள் உண்டு.


நம்மை மரணத்தில் இருந்து பாதுகாப்பது 

நமது மரணம் தான்.

நேரம் வரணும்.

ஆனால், 

மரண பயம் தரும் நிகழ்வுகளில்,

மரணங்களில்

மகத்தான படிப்பினைகள் உண்டு.

.

.

முஹம்மத்❤️ஸன்ஸீர்.

முஹர்ரம் 21, செவ்வாய்.

(31.08.2K21).

 பாதுகாப்பு.

.

நாம் 

மிக மிக அருகில் இருந்துங் கூட                                

நம் அன்புக்குரியவர்களுக்கு                      

ஆபத்துக்கள் நேர்ந்து தான் விடுகிறது.  

கிட்ட இருந்தும் 

கையும் ஓடல காலும் ஓடல என்கிறோம்.

இல்லையா?

        

பலநூறு மைல்களுக்கு அப்பால் 

பிரிந்து இருந்தபோதிலுங் கூட           

ஒரு பலமான பிரார்த்தனை மூலம்           

அவர்களைப் 

பாதுகாக்கவும் முடிகிறது என்றால், 


அந்தப் "பாதுகாப்பு"                                                           

எங்கே இருந்து கிடைக்கிறது ...?

.

26 வருடங்களில்,

சுறா மீன்களின் வாய்களில்

சிக்கி உறுத்திய 

முன்னூறு (300) தூண்டில்களை

ஆழ்கடலில் வைத்தே 

அருகில் சென்று 

தன் கைகளாலேயே அகற்றி 

உதவியிருக்கிறார் Cristina Zanato என்ற பெண்.


ஒரு பெண்ணைக் கொண்டு சுறாக்களுக்கும்,

சுறாக்களிடம் இருந்து பெண்ணிற்கும்

கிடைத்த பாதுகாப்பை என்னவென்பது?

.

ஓரிறைவனே - ஒப்பற்ற பாதுகாவலன்.

அவன் அல்முஹைமின்.

.

முஹம்மத்❤️ஸன்ஸீர்.

முஹர்ரம் 23, 1443, வியாழன்.

(02.09.2K21).

குறையும், நிறையும்.


இங்கே மனிதரைக்                                                          குறை கூறுவதற்கென்று                                              நிறைய விஷயங்கள் இருக்கிறது.                அவன் குறையுள்ளவன்.      

                    அதிலேயே,                                                                          அதிக நேரங் கழிவதால்,                                         

நிறைவான இறைவனுக்கு                                          நன்றி கூற வேண்டிய 

நிஃமத்துக்களை                                                நினைக்க மறந்து போகிறது.

காற்று, அறிவு,                                                            கண்ணீர், தண்ணீர்,                                                        புலன், பேச்சு, மூச்சு, Etc.


இறைவனை நினைவூட்டாத                                                                                             எந்தவொரு நிஃமத்தும் முஸீபத்தே.

(துர்ருள் மன்தூர்)

.

முஹம்மத்❤️ஸன்ஸீர்.

(படம்: ஸ்விட்சர்லாந்து)

முரண்பாடும் மாளிகையும்.

இந்த வாழ்கையில்
முரண்பாடுகள்
தவிர்க்க முடியாதவை.

எந்தவொரு 
முரண்பாட்டு முறுகல் நிலைமையையும் 
அதன் பாதி நிலைக்குப் போவதற்கு முன்னரே 
சம்பந்தப்பட்டவர்கள், 
விட்டுக் கொடுப்புகளோடு 
ஓர் இணக்கமான முறையில் 
ஒரு தீர்வுக்கு வர முயலவேண்டும். 

ஏனென்றால், 
எந்தவொரு முரண்பாட்டு முறுகல் நிலையும் 
அதன் பாதி நிலையைக் கடந்துவிட்டால் 
அதன் பாதிப்பே இருபக்கமும் 
மிகைத்து நிற்கும். 

ஒருவேளை, 
பிந்திய பாதியில் 
ஓர் இணக்கம் காணப்பட்டாலுங் கூட   
"இவ்வளவு போராடியும் 
நினைத்ததை நீ அடையவில்லையே 
என்ற தோல்வி உணர்வையும்,
நீடித்த பகைமையுணர்வையும்  
இருசாராருக்குள்ளும்
ஊதி நெருப்பாக்க 
முனைந்துகொண்டே இருப்பான்
ஷைத்தான்.

இங்கே ஒரு கேள்வி எழும். 
முறுகல் நிலைக்கு 
முடிவு எப்போது வரும் என்று தெரியாமல் 
பாதிநிலையை எவ்வாறு அறிவது?

அது ஒருபோதும் சாத்தியமில்லை.
அதனால் தான் ....
அதன் ஆரம்ப நிலையிலேயே
எவ்வளவு சீக்கிரம் முடியுமோ 
அவ்வளவு விரைவாக 
ஓர் இணக்கமான முடிவிற்கு 
அதனைக் கொண்டுவருவது 
நல்லது என்கிறேன்.

ஒரு முரண்பாட்டு முறுகல் நிலையின்போது
நியாயம் தன் பக்கம் தான் இருக்கிறதென்று  
தெளிவாகத் தெரிந்துங் கூட 
ஒருவர் இறைவனுக்காக 
அதிலிருந்து விலகி முடித்துக்கொண்டால்,
இறைவன், 
அவருக்காக சுவனத்தில் 
ஒரு மாளிகையைக் கட்டுகிறான். 
(ஸுனன் அபீ தாவூத்)
.
.
முஹம்மத்❤️ஸன்ஸீர்.
08.10.2K21, வெள்ளி.

"நிலவு"


மரமும், 

மறைமுகமான அதன் வேரும் போல 

எனக்கு மிகப் பிடித்த 

புலன் படங்களில் இதுவும் ஒன்று.


பாதி நிலவைத்தான் 

பௌர்ணமி (முழு) நிலவென்று

பரவசமடைகிறோம். 

இல்லையா?


நிலவு அழகுதான்.

நீண்டுவரும் அதன் இரவல் ஒளியை 

நீங்கிடாமல் இருக்கும் வரை.


அமாவாசையிலும் 

முழு நிலவு இருக்கத்தான் செய்கிறது.

ஆனாலதில், ஒளி இல்லை.

அதனால் யாருமதைக் கொண்டாடுவதில்லை.


ஒளியில்லாத ஒன்று

ஒருவருக்கும் தென்படுவதில்லை.


நிலவைக் கொண்டாடும் மனது

அதன் மூல ஒளியையும் 

நினைக்க மறந்திடலாகாது.

அது இல்லாது 

பாதி நிலவை ரசித்தலென்பது 

முழுமை பெறாது.

.

முஹம்மத்❤️ஸன்ஸீர்.

04 ரபியுல் அவ்வல் 1443 

11.10.2K21, திங்கள்.

ஒவ்வொருவரும்

ஒரேயொரு முறைதான்.


ஞானம்,

பொறுமையின் குழந்தையென்று

ஞானியொருவர் சொன்னது

எவ்வளவு எதார்த்தமானது.


இந்த உலக உறவுகள் 

நிரந்தரமற்றவை என்பதை 

காலம், 

கனத்த வலியோடுதான் உணர்த்துகிறது.


ஒரு மனிதனின் 

மரணத்தின் பின்னர் தான் 

அவரின் கண்ணியத்தை, அவசியத்தை, 

இருப்பின் மென்மையை, 

இடைவெளியின் கணத்தை

உணர்வுகளைப் புரிந்து கொள்வீர்களாயின் ...


அதனால், 

ஓவென்ற அழுகையைத் தவிர

வேறென்ன பலன் இருக்கப் போகிறது?

.

முஹம்மத்❤️ஸன்ஸீர்.

படகினுள் தண்ணீர் புகுவது

கவிழ ஏதுவாக்கும்.

படகின் அடியில் தண்ணீர் இருப்பது,

(அது மிதந்து செல்வதற்கு உதவியான) 

ஆதாரமாகும்.


அளவிலாச் செல்வம் படைத்திருந்த

நபி சுலைமான் (அலை) அவர்கள் 

தங்கள் இதயத்திலிருந்து 

பொன், பொருள் பற்றிய ஆசைகளையெல்லாம் 

துறந்தவர்களாக இருந்தமையால் 

அவர்கள் தங்களை 

ஏழை (மிஸ்கீன்) என்ற பதத்தாலேயே 

அழைத்துக் கொண்டார்கள்.


காற்று நிரம்பிய,

மூடப்பட்ட ஜாடி

எந்தக் கொந்தளிப்பான தண்ணீரிலும் 

மிதக்கவே செய்யும்.


தம் அகத்தே 

ஏழ்மை என்ற காற்றை அடைத்துக்கொண்டவன்

இம்மையெனும் தண்ணீரின் மேற்பரப்பில் 

சாந்தி படைத்த உள்ளத்துடன் 

மிதந்துகொண்டிருப்பான்.


இம்மை முழுவதுமே 

அவன் வசமாய் இருப்பினும்,

அவன் இதயக்கண்முன் 

அந்தச் சம்பத்து முழுமையுமே 

பூச்சியமாகத்தான் தோன்றும்.

.

.

மௌலானா ❤️

ஜலாலுத்தீன் ரூமி (ரஹ்).

இரகசியம் எனும் ஞானம்.


நீ தூரப் பயணம் செல்வாயாயின்,

(1) அதற்கான உன் ஆயத்தத்தையும், 

(2) நீ எடுத்துச் செல்லும் செல்வத்தையும், 

(3) உன் கோட்பாடுகளையும் பற்றி 

யாரிடமும் உன் நாவை உசுப்பி 

எதுவும் தெரிவித்து விடாதே!


இந்த மூன்றின் விஷயத்திலும் 

பகைவர்கள் பலருண்டு. 

இவற்றை அவர்கள் அறிவாராயின்

(உன்னிடமுள்ளதை அடித்துச் செல்ல) 

உனக்காக அவர்கள் 

வழியில் காத்துக்கொண்டு நிற்பார்கள்.


உன் இரகசிய ஏற்பாடுகளை

ஒருவர் இருவரிடம் சொன்னாலே போதும்.

அது (ரகசியமாய் இல்லாமல்) பரகசியமாகிவிடும்.


இரண்டு மூன்று பறவைகளைக் கட்டி

ஒரு கூண்டினுள் போட்டு அடைத்து வைத்தால்

அவை துயரத்துடன் 

தலையைத் தரையில் போட்டவையாகத்தான் படுத்திருக்கும்.

ஆனால், உண்மையில் அவை

(தாம் தப்புவதற்கான வழிவகைகளைப் பற்றித்) 

தமக்குள் மிகவும் சாதுரியமாக 

யோசனை கலந்துகொண்டிருக்கும்.


மேலாழ்ந்த வாரியாகப் பார்ப்பவர்களுக்கு

அவை சும்மா இருப்பது போன்ற 

தப்பபிப்பிராயம்தான் உண்டாகும்.


பெருமானார் (ஸல்) அவர்கள்

தமது அபிப்பிராயங்களைப்

பெரும்பாலும் சமிக்ஞையான கதைகள்,

உதாரணங்கள் மூலம் வெளியிடுவார்கள்.

அதனால், எதிரிகளுக்கு 

அவற்றின் தலைகால் புரியாமல் போய்விடும்.


பெருமானார் (ஸல்) அவர்கள் 

எதிரியிடமிருந்து

தாங்கள் நாடும் பதிலை வரவழைக்கத்தக்க

கேள்விகளைக் கேட்டுப் 

பதிலைப் பெற்றுக்கொள்வார்கள்;

ஆனால், அந்த எதிரியால்

அவர்கள் ஏன் அந்தக் கேள்வியைக் கேட்டார்கள் என்று 

அதன் குறிக்கோளை 

உணர்ந்து கொள்ள முடிவதில்லை.

.

மௌலானா ❤️

ஜலாலுத்தீன் ரூமி (ரஹ்).

.

"நான் என்ன நினைக்கிறேன் என்பதை 

எனது தாடியின் ஒரு முடி அறியுமாயின் 

அதனை நான் பிடுங்கி எறிந்துவிடுவேன்." என்று


துருக்கியின் தற்போதைய தலைநகர் 

இஸ்தான்புல் (கொன்ஸ்தாந்தினோபில்) ஐ 

மே 29, 1453 இல் 

24 வது படையாகச் சென்று 

இரு மாதங்கள் போராடி

தனது 21 வது வயதில் கைப்பற்றிய இளைஞன்

சுல்தான். 

பாத்திஹ் மெஹ்மத் II அடிக்கடி கூறுவாராம்.


இரகசியம் பேணுதல் என்பது

உதடுகளிடம் இருந்து 

உள்ளத்தை மறைப்பதாகும்.

.

முஹம்மத்❤️ஸன்ஸீர்.

08 ரபிய்யுல் அவ்வல், 1443. 

15.10.2K21. வெள்ளிக்கிழமை.

தன்னிடம் இருக்கும் 
கனிப்பொருட்களையும், 
போஷணைகளையும் 
#இளம் இலைகளுக்கு 
வழங்கி விட்டுத்தான் உதிர்கிறதாம் 
#முதிர்ந்த இலைகள். 
.
#உயிரியல்
க.பொ.த உ/த பரீட்சை 1987, MCQ 26.
.
மரம் எனும் முன்மாதிரி.













.
முஹம்மத்❤️ஸன்ஸீர்.
16.10.2K21, SAT.
தீமை தோண்டுங் கிணறு.
.

தீமை புரிபவர்களின் 
அநீதியான காரியங்கள் 
கிணற்றின் இருள் போன்றவை என்பதே 
அறிஞர்களின் முடிவாகும்.

ஒருவனுடைய 
அநீதி அதிகரிக்கின்ற அளவிற்கு  
அவனுடைய (வேதனை, தண்டனை) என்ற கிணறும் 
அதிகப் பயங்கரமானதாகவே இருக்கும்.
அதிகமான பாவத்திற்கு
அதிகமான தண்டனையுண்டு 
என்பது தானே (தெய்வத்) தீர்ப்புமாகும்!

உன் பலம் மிகுதி காரணமாக
அநீதியால் (மற்றோரைத் தள்ளுவதற்காக) 
கிணறு தோண்டுபவனே,
நீ விழுவதற்காகவே தோண்டும்
படுகுழி அது என்பதை அறிந்துகொள்.

(மூடனே,) 
பட்டுப் புழுவைப்போல் 
நீ உன்மீதே இழைகளைச் சுற்றிக் கொள்ளாதே!
நீ தோண்டுவதோ,
நீயே விழப்போகும் கிணறு தான்.
எனவே, 
அதனை அதிக ஆழமாகத் தோண்டாமல்
ஓர் அளவுடன் நிறுத்திக்கொள்!

பலஹீனர்களுக்குப் பாதுகாப்பளிக்க
யாருமில்லை என்று எண்ணாதே!
திருக்குர்ஆனிலுள்ள 
"இறைவனுடைய நல்லருள் வந்தது"
(இதாஜா அ நஸ்ருல்லாஹி) என்ற அத்தியாயத்தை
படித்துப் பார்!

நீயொரு யானையாய் இருந்து,
உன்னைக்கண்டு உன் எதிரி ஓடுவானாயினும்,
உனக்காக தண்டனை
பறவைகளின் கூட்டத்தால் (தைரன் அபாபீல்) 
உன் தலை மீது இறங்கும் என்பதை 
அறிந்துகொள்!

ஏழை ஒருவன் 
கருணை நாடிப் பிரார்த்திப்பானாயின்,
(அவனைப் பாதுகாக்க) 
வானுலகப் படைகளிடையே (அமரர்களிடையே) 
ஆரவாரமே உண்டாகியுள்ளது.
.
.
மௌலானா❤️
ஜலாலுத்தீன் ரூமி (ரஹி).
புரியாத பிரியம்.
.

நம்மில் எவரும் 
அவருடைய நேரம் வருவதற்கு முன்னர் 
மரணிப்பதில்லை.
மரணித்த ஒருவர் 
திரும்பி வரப்போவதுமில்லை.

நேசத்திற்குரிய ஒருவர் 
நிரந்தரமாகப் பிரிந்த பின்னர் தான் 
முழுமையான பெறுமதியை 
மனசு எப்போதும் உணர்கிறது.

இன்னும் அதிக நேரம் 
அவர்களுக்காகவும், 
அவர்களுடனும் 
செலவழித்திருக்கலாம் என்றும் 
ஆதங்கப்படுகிறது.
அவர் இருந்தபோதே
அவரது ஆசைகளில் ஒன்றையேனும்
நிறைவேற்றியிருக்கலாம்
என்றும் ஆசைப்படுது.

மீண்டும் ஒருமுறையாவது 
அவர்களது கண்களைக் காண்பதற்கோ,
அவர்களின் குரலைக் கேட்பதற்கோ 
இந்த உலகையே கொடுக்கவும் 
தயாராக இருக்கிறது.
ஆனாலும், 
இயலாத இயற்கை அது.

அற்ப உலக விடயங்களிலும்,
பேராசை துரத்தும் மரதன் ஓட்டத்திலும்,
பெயர், புகழ் என்ற மாயையிலும்
பிரிந்தும்,
கூடவே பெயரளவில் இருந்தும் 
வாழ்ந்துகொண்டுதான் இருக்கிறோம்.

குறிப்பாக,
நபியின் பொன் மொழிக்கமைய,
நேசத்திற்குறிய 
கணவன் மனைவி என்பவர்கள்
ஒருவரையொருவர் முழுமை செய்பவர்கள்.
இருவரில் ஒருவர் மரணிக்கும்போது 
தனது பாதி இதயத்தையும் சேர்த்துத்தான் 
மண்ணறையில் புதைக்கிறார் 
மற்றவர்.

எல்லாப் பிரிவுகளும்
மீள ஒருநாள் இணையும்.
ஒன்றில் இங்கே. 
இல்லையேல் அங்கே.

புரியாத பிரியம்.
பிரியும்போது புரியும்.
.
.
முஹம்மத்❤️ஸன்ஸீர்.
ரபிய்யுல் அவ்வல் 10, 1443, ஞாயிறு.

வியப்பின் வேறு பக்கம்.


பூமியில், 

மனிதனின் இதுபோன்ற 

பிரம்மாண்ட உருவாக்கங்களைக் கண்டு 

வியந்து மூக்கிலே விரல் வைக்கும் 

அதே மனிதனின் சிந்தனை,


அந்த வியப்பைத் தந்த 

பிரம்மாண்ட சக்தியின் ஆதியை

பின்னோக்கிச் சிந்திக்கத் 

தவறி விடுவதுதான் 

அதனை விடவும் வியப்பானது.

எழுதுவது பேனா என்று காண்பவன்

கையைக் காண மறந்துவிடுவதுபோல ...


அப்படியென்றால்,

தினமும் மேலிருந்து பூமி பார்க்கும் 

ஒரு பறவையின் வியப்பு 

எப்படியிருக்கும்?

சுபஹானல்லாஹ் ❤️


சொற்களுக்கு 

சக்தி அதிகமில்லை.


ஒரே சொல்லுக்கு 

ஒவ்வொருவரின் புரிதலும்

ஒரே மாதிரி இருப்பதில்லை.

அவரவர் புரிதலின் ஆழம்தான்

அதற்கு வெவ்வேறு சக்தியளிக்கிறது. 


உதாரணங்கள்: 

"அம்மா"

"அன்பு"

"இம்மை"

"இறைவன்"

"சுவர்க்கம்"

.

முஹம்மத்❤️ஸன்ஸீர்.

கண்ணீரில் சமைத்த உணவும் 

ஹலாலான கவளத்தின் குணமும்.


(புரிதல் என்பது, 

மொட்டொன்று மலர்வது போல மெதுவானது.

சுகப் பிரசவம் போல ஆனந்தமானது.

ஆதலால், கொஞ்சங் கவனமாக வாசியுங்கள்.)

.

(உன் பாவங்களை நினைத்து)

இதயத்தின் (தகிக்கும் துயரத்தின்) நெருப்பாலும்,

கண்ணின் நீராலும் 

(ஆன்மாவிற்கான) 

நல்லுணவைச் சமைத்துக்கொள்!

மேகத்தாலும், சூரியனாலும் தான் 

தோட்டம் திறந்ததாக (மலர்கள் மலர்வதாக) ஆகும். 


கண்களின் தண்ணீரின் ருசியை 

நீ எங்கே அறிவாய்!

நீதான் குருட்டு (பிச்சைக்கார) மனிதர்களைப்போல 

ரொட்டிப் பிரியனாக அலைகிறாயே!

(உன் உள்ளம் எனும்)

ஜோல்னாப் பையிலுள்ள ரொட்டியை 

நீ காலியாக்கினால், 

அதனைப் புகழ்மிக்க ரத்தினங்களால் 

நிறைத்துக்கொள்ள முடியும்.


உன் ஆத்மாவெனும் சிசுவை 

ஷைத்தானின் முலைப்பாலில் இருந்து அப்பாலாக்கு; 

பின்னர் அதனை 

அமரரோடு உரையாட விடு!

நீ முகங் கறுத்துக் குழம்பியவனாக இருந்தால் 

ஷைத்தான் குடிக்கும் முலைப்பாலையே 

நீயுங் குடிக்கிறாய் என்பதையுணர்!


அதிக ஒளியும், 

பூரணத்துவமும் தரும் (உணவுக்) கவளம், 

ஆகுமான சம்பாத்தியம் மூலம் கிடைத்ததாகும்.

ஆகுமான கவளம் உணவால் 

அறிவும், ஞானமும் உண்டாகின்றன; 

ஆகுமான கவளத்தால் 

அன்பும், மெல்லிதயமும் உண்டாகின்றன.


ஒரு கவளம் சோற்றில் 

நீ பொறாமையையும், பித்தலாட்டத்தையுங் காண்பாயாயின் 

அதுகொண்டு, 

அறியாமையையும், மௌட்டீகமும் உருவாகக் காண்பாயாயின் 

அது விலக்கப்பட்டது (ஹராமானது) என்று அறிந்துகொள்.


நீ கோதுமை விதைத்தால் 

அதிலே பார்லியா விளையும்?

குதிரையானது 

கழுதைக் குட்டியை ஈனக் கண்டதுண்டா?


(ஆகுமான) கவள உணவு வித்தாகும்;

சிந்தனைகள் அதன் கனிகளாகும்.

(ஆகுமான) கவள உணவு கடலாகும்;

சிந்தனைகள் அதிலே கிடக்கும் முத்துக்களாகும்.


ஆகுமான கவளத்தால் 

(இறைவனுக்குச்) சேவை செய்ய வேண்டும்,

நல்ல வணக்கம் புரிய வேண்டும் என்ற எண்ணமும்,

மறு உலகம் (சுவர்க்கம்) புக வேண்டும் 

என்ற உறுதியும் உண்டாகும்.

.

.

மௌலானா ❤️

ஜலாலுத்தீன் ரூமி (ரஹி).


11 ரபிய்யுல் அவ்வல் 1443, திங்கள்.

உயிருள்ள ❤️ பிரார்த்தனை.


"பிரார்த்தனை ❤️"

தொழுகையில் வரும் சூரா ஃபாத்திஹா போல ..

இறைவனுக்கும் ஆன்மாவுக்கும் இடையிலான 

மிக அழகான சம்பாஷனை அது.

சர்வ வல்லமை பொருந்திய ஒரு சக்தியின் முன்னால் 

ஒன்றுமேயில்லாதவனாக நிற்கும் தருணம் அது.


உயிருள்ள பிரார்த்தனை செய்யும் உள்ளம் ❤️

அமைதியான இடமொன்றில் 

அமைதிதேடி அமரும்.

பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம் எனும் 

அல்லாஹ்வின் 99 திருநாமங்களின் நினைவுடன் ஆரம்பிக்கும்.

அவனது வல்லமைகளைக் கொண்டு 

அவனை அதிகமதிகம் புகழும். 

நபிகள் நாயகம் 

முஹம்மத் ஸல்லல்லாஹூ அலைஹி வஸ்ஸல்லம் மீதும் 

அவர்களின் குடும்பத்தின் மீதும் 

சலவாத்துச் சொல்லும்.


உயிருள்ள பிரார்த்தனை செய்யும் உள்ளம் ❤️

அவனைப் புகழும். 

முகஸ்துதிக்காகவன்றி மனதாரப் புகழும்.

பிற மொழியில் புகழ்வதாயின் பொருள் உணர்ந்து புகழும்.

அடியான் புகழுவதை இறைவன் விரும்புகிறான். 

ஆனாலவன் எந்தத் தேவையுமற்றவன்.

அதன்மூலம் அவனது அடியான், 

கடுகளவுந் தற்பெருமை அற்ற 

உள்ளங்கொண்ட ❤️ ஒருவனாக மாறுவதையும், 

அவனது சுவனத்திற்குத் தகுதி பெறுவதையுமே 

அவன் விரும்புகிறான்.

அவன் அளித்திருக்கும் ஆயுள், ஆரோக்கியம் போன்ற கொடைகளுக்காக 

மனதார நன்றி கூறும். கண்ணீர் மல்க நன்றி கூறும். 

மனதார நன்றி கூறும் உள்ளத்தில் இருந்து 

இயல்பாகவே கண்ணீர் ஊற்றெடுத்துப் பெருகி ஓடுமல்லவா?


அல்லாஹ்வின் 

அழகிய திருநாமங்களைக் கொண்டு அழைக்கும்.

அதையே அவன் தனது திருமறையிலுங் கூறியிருக்கிறான் (17:110).

அடியானின் உள்ளத்திலுள்ள அனைத்தையும்

அவன் நன்கறிவான்.

அவன் பஷீர் (பார்ப்பவன்), சமீஃ (செவிமடுப்பவன்.)

இருப்பினும் அவனிடம் ஒவ்வொன்றாக ❤️ எத்தி வைக்கும்.

தந்தையிடம், தாயிடம் கேட்பதை விடவும் 

பலமடங்கு சுதந்திரமாக அவனுடன் பேசும்.

அவன் நிகரற்ற அன்புடையவன். 

அவன் அளவற்ற அருளாளன்.

கேட்காமலேயே அள்ளியள்ளித் தந்துகொண்டிருபவன் 

கேட்கப்படுவதில் நலவிருந்தால்,

கேட்கப்படுவதை அவன் நாடியிருந்தால் தராமல் இருப்பானா? 

கேட்க வேண்டும் என்பது தான்

அவன் வகுத்த வாழ்வின் விதியாக இருக்கிறது.


உயிருள்ள பிரார்த்தனை செய்யும் உள்ளம் ❤️

அவன் அருள் புரிந்த வரலாறுகளை, நபிமார்களை, 

ஸஹாபாக்களை, நல்லடியார்களை நினைவுகூரும்.

அவன் தண்டித்த சமூகங்களையும், 

அற்ப மனிதர்களையும் அவனிடம் நினைவுகூரும்.

அதுபோலத் தன்னையும் சோதித்து விடாதிருக்க 

இறைவனிடம் இறைஞ்சும்.

அற்ப உலகில் கிடைத்திருக்கும் சொற்ப கால வாழ்கையில் 

செய்த தவறுகளை மனதார உணர்ந்து 

அவனிடம் மன்னிப்புக் கேட்கும்.

மன்னிப்பதில் இறைவன் மகா கருணையாளன். 

தெரிந்து செய்த தவறுகளைக் குறிப்பிட்டு மன்னிப்புக் கேட்கும்.

தெரியாமல் செய்த பாவங்களுக்காகவும் 

அவனிடம் மன்னிப்புக் கேட்கும்.


தனக்காக 

எதையுமே சுயமாகச் செய்துகொள்ள இயலாத 

பலவீனத்திலேயே மனிதன் இருக்கிறான்.

இறைவனின் நினைவும், நன்றியுணர்வும் 

நிறைந்த உள்ளத்தின் மூலமே 

மனிதனின் ஆன்மா மகத்தான பலம் பெறுகிறது.

ஷைத்தானின் கட்டுப்பாட்டில் இருக்கும் ஒருவன் 

பேரழிவைக் கொண்டுதரும் 

போலியான பலத்தையே பெறுகிறான். 

அதுவும் இறைவனின் நாட்டப்படிதான் நிகழ்கிறது.

ஷைத்தானின் தீங்கை விட்டும் ❤️ அவனிடமே பாதுகாவல் தேடட்டும்.


உயிருள்ள பிரார்த்தனை செய்யும் உள்ளம் ❤️

செய்த பாவங்களின் முழுப்பொறுப்பையும் 

மனதார ஏற்று அவனிடம் பாவமன்னிப்புக் கேட்கட்டும் (7:23)

அவனுக்கு முற்றிலும் வழிப்பட்ட நிலையிலேயே 

தனது ஆன்மாவைக் கைப்பற்றுமாறுங் கேட்கட்டும் (7:126)

எதை பற்றித் தனக்கு ஞானம் இல்லையோ 

அதை அவனிடங் கேட்பதை விட்டும் அவனிடம் பாதுகாவல் தேடட்டும் (11:47).

உலகம் சார்ந்த 

அத்தியவசியத் தேவைகளோடு மட்டும் நிறுத்தி விடாமல் 

மறுமை சார்ந்த உயர் நிலையையும் வேண்டி நிற்கட்டும். (2:201)

பரிசுத்தமான சந்ததிகளையே அவனிடங் கேட்கட்டும் (3:38)

சுவனத்தை விடவும் 

நரக நெருப்பிலிருந்து முழுமையான பாதுகாப்பையே அதிகம் வேண்டட்டும். (3:16) 

நேர்வழியையும், 

நெறி தவறாத உள்ளத்தையுங் கேட்கட்டும் (3:08)


நபி முஹம்மத் ஸல்லல்லாஹூ அலைஹி வஸ்ஸல்லம் மீது 

சலவாத்துச் சொல்லி நிறைவை நெருங்கும்.

அல்லாஹ்வை மனதாரப் புகழ்ந்து, 

நன்றிகூறி நிறைவுசெய்யும்.


ஈற்றில் அந்த மனசு 

மகத்தான அமைதி பெற்றிருக்கும்.

அல்ஹம்துலில்லாஹ் ❤️

.

முஹம்மத்❤️ஸன்ஸீர்.

05.11.2K21, வெள்ளிக்கிழமை.