Saturday, January 15, 2022

" ஸலாம் ❤️ "

பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்.
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரக்காத்துஹு.

உலகமெங்கும் உள்ள இஸ்லாமியர்கள் 
தமக்குள் ஒருவரையொருவர் முகமன் கூறி வரவேற்கும்போது ​​
"அஸ்ஸலாமு அலைக்கும்," 
அதாவது "உங்கள் மீது சாந்தி உண்டாகட்டும்" என்று கூறுவது 
முஹம்மத் நபி (ஸல்) அவர்கள் காட்டித் தந்த வழிமுறை (ஸுன்னாஹ்) ஆகும். 
"ஸலாம்" என்ற அரபுச் சொல்லுக்கு 
"அமைதி / சாந்தி" என்று பொருள். 

ஒருவர் இன்னொருவருக்கு ஸலாம் கூறும்போது 
மூன்று முக்கிய அம்சங்கள் அங்கே உறுதிசெய்யப்படுகிறது. 
உண்மையில் அவை மூன்றும்
உள்ளத்தால் உறுதிசெய்யப்பட வேண்டியவை.

1. உறுதியளித்தல்:
"என்னால் உனக்கு எவ்விதத் தீங்கும், கெடுதியும் ஏற்படாது" 
என்ற உறுதி செவிமடுப்பவருக்கு வழங்கப்படுகிறது.

2. பிரார்த்தனை (துஆ):
எல்லாவிதமான ஆபத்துக்களில் இருந்தும் 
அல்லாஹ் உன்னைப் பாதுகாப்பானாக. 
என்ற பிரார்த்தனை ஸலாம் சொல்பவரால் 
செவிமடுப்பவருக்காகச் செய்யப்படுகிறது.

3. இறைவனை நினைவுகூரல்: 
"ஸலாம்" என்பது அல்லாஹ்வின் (SWT) 99 திருப்பெயர்களில் ஒன்று. 
ஸலாம் சொல்லும்போது அல்லாஹ் நினைவுகூரப்படுவதுடன், 
நினைவூட்டப்படுகிறான்.

உண்மையில் இந்த அழகான விடயத்தை 
இன்றுதான் இறைவன் ஜும்ஆ ஊடாகக் கற்றுத் தந்தான்.
இதுபோன்ற அழகிய அடிப்படை விடயங்கள்
சிறு வயதிலேயே பிள்ளைகளுக்குக் கற்பிக்கப்பட வேண்டும்.
எல்லா நற்செயல்களுக்கும்
இதுபோன்ற அடிப்படை அம்சங்கள் இருக்கும்.
அதனை அறிந்து செய்யும்போது
அச்செயல் மீஸானில் எடை கூடுமல்லவா.

ஒருவர் சொன்ன ஸலாத்தை விட 
பதிலில் அழகு சேர்ப்பது சுன்னத்தாகும். 
உதாரணமாக, யாராவது "அஸ்ஸலாமு அலைக்கும்" என்று சொன்னால், 
பதிலுக்கு நாம் "வஅலைக்குமுஸ்ஸலாம் வரஹ்மதுல்லாஹ்"
என்று சொல்ல வேண்டும்.
"உங்களுக்கு ஸலாம் கூறப்படும் பொழுது, 
அதற்குப் பிரதியாக அதைவிட அழகான (வார்த்தைகளைக் கொண்டு) 
ஸலாம் கூறுங்கள்; அல்லது அதையே திருப்பிக் கூறுங்கள்.
நிச்சயமாக அல்லாஹ் 
எல்லாப் பொருட்களின் மீதும் கணக்கெடுப்பவனாக இருக்கிறான்."
(அல்குர்ஆன் : 4:86)

முதலில் சலாம் கூறுவது நபிவழி (ஸுன்னாஹ்) ஆகும். 
அதேவேளை, கூறப்பட்ட ஸலாத்திற்கு 
அழகிய முறையில் பதிலளிப்பது கடமை (வாஜிப்) ஆகிறது. 
நபி (ஸல்) அவர்களின் (ஸஹிஹ் புஹாரியில் வருகின்ற) 
ஹதீஸ் ஒன்றில் கூறப்படுவதுபோல் 
“ஒரு முஸ்லிமுக்கு தனது சக முஸ்லிம் மீது உள்ள உரிமைகளுள் 
அவர் தனது ஸலாத்திற்குப் பதிலளிக்க வேண்டும் 
என்பதுவும் ஒன்றாகும். (ஸஹிஹ் புஹாரி 6235). 

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்
"ஒரு முஸ்லிம் தம் சகோதரரிடம் (மனஸ்தாபம் கொண்டு) 
மூன்று நாள்களுக்கு மேல் பேசாமல் இருப்பது அனுமதிக்கப்பட்டதன்று. 
அவர்கள் இருவரும் சந்தித்து இவரை விட்டும் அவரும், 
அவரைவிட்டு இவரும் முகம் திருப்பிக்கொள்வர். (இவ்விதம் செய்யலாகாது.) 
இவர்கள் இருவரில் ஸலாமை முதலில் சொல்பவரே சிறந்தவராவார். 
என அபூஅய்யூப் அல்அன்சாரி(ரலி) அறிவித்தார். 
ஸஹீஹ் புகாரி : 6237. 
.
.
எனவே, ஸலாம் கூறுவது 
நம் அனைவரினதும் அழகிய பழக்கமாக இருக்கட்டுமே.
ஆனாலது, வெறும் வார்த்தையாக மட்டும் இருந்துவிடாமல்
மேலே குறிப்பிட்டுள்ள மூன்று அம்சங்களையும் கொண்ட 
ஆத்மார்த்தமான ❤️ உயிரோட்டமான 
ஸலாமாக அது இருக்கட்டும்.

ஒரு புதிய பழக்கத்தைச் சில நாட்கள் தொடர்ந்தால்
அதுவே வழக்கமான பழக்கமாக மாறிவிடும்.
ஒவ்வொரு முறையும் வீட்டிற்குள் நுழையும்போதோ 
அல்லது வீட்டை விட்டு வெளியேறும்போதோ, 
குழந்தையோ அல்லது பெரியவர்களோ 
“அஸ்ஸலாமு அலைக்கும்” என்று கூறுவதைப் வழக்கப்படுத்துங்கள்.
குடும்பத்தினர், நண்பர்கள், சகாக்கள், அனைவருக்கும் மத்தியில், 
ஆத்மார்த்தமான ❤️ 
அமைதியின் விதைகளை 🌳 நடுங்கள். 

நானும் அஸ்ஸலாமு அலைக்கும் என்று கூறி விடைபெறுகிறேன். 
எனது ஸலாத்திற்கு உங்கள் பதில் 
எனது உரிமை என்பதை மறவாதீர்கள் 🙂
ஃபீ அமானில்லாஹ்.
.
.
முஹம்மத்❤️ஸன்ஸீர்.
05.11.2K21, வெள்ளிக்கிழமை.
.
.
மாஷா அல்லாஹ் ❤️
இன்றைய ஜும்ஆ உரையில் இருந்தும், 
இணையத்தில் இருந்தும்
உந்தப்பட்ட ஆக்கம் இது.
அல்ஹம்துலில்லாஹ் ❤️

No comments:

Post a Comment