Friday, January 14, 2022

குழந்தையின் ❤️ கோபம்.

.

காலைப் பனியை நிகர்த்த 

குழந்தைகளின் கோபத்தைப் போல 

தனித்துவ அழகொன்றை 

நான் வேறெங்கும் அனுபவித்ததில்லை.


சொற்ப நிமிடங்களிலேயே

சொல்லாமல் கொள்ளாமல்

மொத்தக் கோபமும் 

அவர்களின் உள்ளத்திலிருந்து

காணாமல் போகிறதே !!

அது எப்படி?

எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது. 


நள்ளிரவு 3:00 மணியளவில் 

அடம்பிடித்த மகனை, 

அணைத்துப் பிடித்து வைத்து

பெனடோல் சிரப் புகட்ட 

அம்மாவுக்கு உதவியதற்காக

தூக்கக் கலக்கத்திலே எழுந்து நின்று 

"போடா" என்று ஏசியதும்,

"அபீ (எனது அப்பா) வேணாம்" என்று பேசியதும். 

குபீரென்று சிரிக்க வைத்துவிட்டது.


அவனது காய்ச்சலின் வெப்பம்

அடை மழைக்கு இதமாக இருந்தாலும்,

இன்னும் ஓரிரு நாட்களில்

பரீட்சையொன்று இருப்பினும்,

அவனது காய்ச்சல் 

எனக்குள் உடல் மாறிவிடக் கூடாதா 

என்பது போலவும் இருக்கிறது.


மறுகணமே,

அனைத்தையும் மறந்துவிட்டு

அபீயை அணைத்துக்கொண்டு 

உறங்கி விடுகிற மனசு

ஏதோவொன்றைச் சொல்லித் தருகிறது.

ஆத்திரத்தை விட

அன்புதான் அவர்களின் மனதில்

வியாபித்திருக்குமாக்கும்.


அப்பாவோடு கோபித்தால்

அம்மாவோடு ஒட்டிக்கொள்வதும்

அம்மாவோடு கோபித்தால்

அப்பாவோடு ஒட்டிக்கொள்வதும்

அழகு ❤️ இல்லையா?

தோளுக்கு வேறு எங்கு செல்வார்கள்.


மனிதன் வளர வளர,

மனதை நோகடிக்கும்

மாற்று மனித செயல்களை

மறக்க முடியாவிட்டாலும்,

மன்னிக்கும் மனநிலையை

இழந்து விடுகிறான்.

மகிழ்ச்சியைத் தொலைத்து விடுகிறான். 

மன்னித்தலென்பது

முதலில் நமக்குத்தான் நலன் என்பதை 

மறந்து விடுகிறான்.


மனதில் எழும் கோபத்தை

மூளையில் பதிவு செய்து வைத்திருந்து

முணுமுணுக்கும் மனநிலை

வெகு சீக்கிரம் குழந்தைகளுக்குள் 

முளைவிடுவதில்லை என்று நினைக்கிறேன்.

அதனால் தானோ என்னவோ

அதுவரை அவர்கள் 

மகிழ்ச்சியான உலகில் இருக்கிறார்கள்.

அவ்வுலகம் ஆன்மீகமயமானது.

❤️

.

முஹம்மத்❤️ஸன்ஸீர்.

05.01.2K22, புதன்.

No comments:

Post a Comment