Friday, January 14, 2022

ஒபரேஷன் தியேட்டர்.
சொல்ல வேண்டிய சொந்தக் கதை.

பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்.


நான் சொல்வதெல்லாம் உண்மை. 
உண்மையைத் தவிர வேறில்லை.

இறைவன், 
அவனது சிறப்புமிக்க மனிதப் படைப்பை  
இவ்வுலகில் பிரவேசிக்கச் செய்யும் 
ஒரு மகத்தான வழி தான் 
ஒரு தாயின் பிரசவ வலி.
பெண்களுக்கு மட்டுமே 
அந்தப் பாக்கியம் உண்டு. 

என்றும்போல் இறைவன் 
எம்மீது அன்பு செய்கிறான்.
பொறுமைக்கும், காத்திருப்புக்கும், 
பிரார்தனைகளுக்கும் பரிசாக
திருமணமாகிப் 
பன்னிரெண்டு ஆண்டுகளின் பின் 
முதலாவது குழந்தையை அவன் நாடுகிறான். 

அல்ஹம்துலில்லாஹ். ❤
அர் ரஹ்மானிர் ரஹீம் ❤

19.09.2019, வியாழன், 
காலை 07:00 மணி.
காத்திருப்பின் கடைசித் தருணம். 
தனியார் மருத்துவமனை.
சிசேரியன்.
ஒபரேஷன் தியேட்டர். 
பயத்துடன் உள்ளே மனைவி. 
பிரார்த்தனைகளுடன் 🤲 வெளியே நான். 

மகப்பேற்று வைத்தியரிடம் சென்று 
மனைவியுடன் கூடவே இருக்க 
அனுமதி கேட்கிறேன். 
மாஷாஅல்லாஹ் #அனுமதிக்கிறார்.
உரிய உடைகளை மாற்றிக்கொண்டு 
உள்ளே நுழைகிறேன். 
மனைவியின் கண்களில் ஆனந்தம். 
கைகளைப் பற்றியவாறு அருகில் நிற்கிறேன்.
ஒரு நாட்காலி தருகிறார் வைத்தியர்.
"ரொம்ப தேங்க்ஸ் சேர்."

அனஸ்தீசிஸ்ட்
முதுகுத்தண்டில் மயக்க மருந்து கொடுக்கிறார். 
நோவுணர்வு மறைவதாக இல்லை.
மேலும் ஒரு டோஸ் மயக்க மருந்து ஏற்றப்படுது.
நோவுணர்வு மறைவதாக இல்லை. 
மூளையில் ஆரம்பத்திலேயே 
பதக்களிப்பில் பதிவான நோவுணர்வு 
அப்படியே இருந்துகொண்டே இருக்கிறது.

தாயை, மயக்காமல் 
ஆழ்ந்த தூக்கத்தில் வைக்கலாம் என்று 
ஈற்றில் முடிவாகி அனுமதி கேட்கிறார்கள். 
சரி என்பதா இல்லையென்பதா 
என்ற லொஜிக்கே தெரியாமல் 
சரி என்கிறேன். 
நோர்மல் டிலிவரியில் 
இந்த நித்திரையாக்கம் சாத்தியமில்லை.
தாய்தான் அங்கு பிரதான வைத்தியர்.

என் கைகளைப் பற்றிய நிலையில் 
கொஞ்சங் கொஞ்சமாய் 
கண்களை மூடிக்கொள்கிறாள் மனைவி. 
எனக்கு இருளாகிறது.
ஒரு பெரு நீர்வீழ்ச்சியின் 
பின்னால் நிற்பதுபோல 
காட்சிகள் மாறுது. 
கண்ணீர் ஆறாகுது.

வயிற்றைக் கிழித்து 
வாரிசு வழங்கத் தயாராகிறாள் மனைவி.
இயந்திரத்தில்
டிஜிட்டல் இலக்கங்கள் காட்டும் 
இதயத் துடிப்பும், சுவாசமும்
மூச்சுவிடும் ரப்பர் பலூனும்  
இறுகப் பற்றிய நிலையில்  
இடையிடையே அசையுங் கையும் தான் 
மனைவியின் மூச்சின் இருப்பைக் காட்டும் 
என் பிரார்த்தனைக்கான இறைவனின் ஆறுதல்கள்.
இருக்கிறேன் என்று சொல்கிறாள்.

வைத்தியரின் கைகளில் 
புடைக்கும் நாடி, நரம்புகள். 
எனக்கென்னவோ ...
இரும்புப் பெட்டகமொன்றை 
இருவர் உடைத்து முத்து எடுப்பதுபோல  
அந்த சிசேரியன் ஒபரேஷன் இருந்தது.
முழுமையாகப் பார்க்கும் தெம்பும்
என் மனசுக்கு இல்லை. 

ஒரு கட்டத்தில், 
பிள்ளை இல்லாவிட்டாலும் பரவாயில்லை. 
என் மனைவியை மறுபடியும்  
மீட்டுக் கொடு இறைவா என்று 
இறைவனிடங் கெஞ்சலாம் போல இருந்தது.
அவன் கொடுப்பதை - நானெப்படி வேண்டாம் என்பது. 
அவன் தடுப்பதை - நானெப்படி வேண்டும் என்பது.

காலை 08:00 மணி.
நீண்ட நேர முயற்சியின் பின்
நீளமான அழுகையுடன் வெளிவருகிறார் மகன்.
மாஷா அல்லாஹ் ❤️
வைத்தியர் காட்டினார்.
நான் மனைவியைப் பார்த்தேன்.
ஆழ்ந்த தூக்கத்தில்  
அழகாக இருந்தாள்.
காத்திருந்தவளுக்கு 
காணக் கிடைக்கவில்லையே என்பது தான் 
கவலையாக இருந்தது.
"மாஷா அழ்ழாஹ் 
மகன் பிறந்துவிட்டார்" என்று 
காதருகில் சொன்னேன். 
கையில் ஒரு அசைவுகூட இல்லை.
எனக்கு அழுகை வந்தது.

என் தாயின், மனைவியின் பெறுமதியை  
நான் முழுமையாக உணர்ந்துகொண்டது
அன்று தான். 

19.09.2019, வியாழன் அன்று 
சத்திர சிகிச்சை நடந்தது 
என் மனைவிக்கு மட்டுமல்ல. 
என் மனதுக்கும் தான்.

மனிதன் தன் பெற்றோருக்கு நன்மை செய்யும்படி உபதேசம் செய்தோம்; 
அவனுடைய தாய், வெகு சிரமத்துடனேயே அவனைச் சுமந்து 
வெகு சிரமத்துடனேயே அவனைப் பெற்றெடுக்கிறாள்.
(அல்குர்ஆன் : சூரா அஹ்காஃப் 46:15)

ஐ நா உலக சுகாதார நிறுவனத்தின் ஒரு ஆய்வின் படி (2017) 
https://www.who.int/news-room/fact-sheets/detail/maternal-mortality

தெற்காசிய நாடுகளில், 
#நாளொன்றுக்கு சுமார் 800 இற்கும் அதிகமான கற்பிணிப் பெண்கள் 
கர்ப்ப காலத்திலும், பிரசவ நேரத்திலும் உயிரிழக்கின்றனர். 
(அதற்குப் பல காரணங்கள் இருக்கலாம்.)

எனவே, 
ஒவ்வொரு தாயான பெண்ணும் 
மரணத்தைத் துணியும் மனசு கொண்டு தான் 
தன் மகவைப் பெற்றுக்கொடுக்கிறாள்.

அழ்ழாஹ்வின் அன்பெனும் நாட்டத்தில்,
தன் வயிற்றைக் கிழித்தும், 
மரணம் நேரலாம் என்று தெரிந்தும் 
நமக்கு வாழ்க்கை தருகிறவள் தாய்.
வாரிசு தருபவள் மனைவி. 

பிரசவ நேரத்தில் 
ஒவ்வொரு கணவனும் 
கூடவே இருக்கணும். 
இதைக் கட்டாயமாக்கணும்.

பிரசவத்தை நேரில் பார்த்தவன் 
தன் தாயையும் மதிப்பான். 
தன் தாரத்தையும் மதிப்பான்.

பெண்களைப் பற்றிப் பேசுவதென்றால் 
பேசிக்கொண்டே போகலாம். 
விடை பெறுகிறேன்.
அல்ஹம்துலில்லாஹ்.

இக் கதையை 
மகனுக்காகவும் 
பத்திரப்படுத்திப் பதிவு செய்கிறேன். 
இன் ஷா அழ்ழாஹ் 
அவர் இதை வாசிக்க வேண்டும்.
.
.
முஹம்மத்❤ ஸன்ஸீர்.
06.01.2K22, TUE.

படம்: 
மகன் முஹம்மத்❤️ஸுதைக்.
பிறந்து ஒருசில மணித்தியாலங்கள்.

ஆஹ் ... இன்னொறு விஷயம்.
மகப்பேற்று மருத்துவராக 
ஆண்கள் இருப்பதும் பொருத்தம் தான் என்பது 
எங்கள் மருத்துவரின் நாடி நரம்பில் தெரிந்தது.  
சிசேரியன் செய்ய 
தைரியமும், பலமும் வேண்டும்.

No comments:

Post a Comment