Monday, January 18, 2016

இரும்பிலிருந்து விலகு - இலைகளோடு பழகு.

இரும்பிலிருந்து விலகி
இலைகளோடு பழகிய - என்
இதமான இருபது மணிகள்.

ரொம்ப நாளைக்கப்புறம் - ஒரு
ரம்மியமான சூழலில்
சுவாசிக்கும் சுகம் கிடைத்தது.
அதுவொரு அழகான கிராமம்.
அங்கே கழிக்கக் கிடைத்த 20 மணிகளில்
என் மனது  பிரவாகித்த வரிகளை
உங்களோடு பகிர்கிறேன்.

கிராமங்களில்
காலைமுதல் மாலைவரை
காதில் விழும் குயில், குருவிகளின்
காதுக்கினிய சங்கீதம்
ஒரே மாதியே கேட்கிறது
நகர் வீட்டில்
"கோலிங் பெல்."

இலைகள் தாலாட்டி
அள்ளி அள்ளி ஒக்சிஜன் தடவி
அந்தக் காட்டில் கிடைத்த
இதமான உயிர்வளி.
இரும்பில் சூடேற்றி
தாராளமாய்த் தூசு தடவிய
சுமையான சுவாசம்
நகர் வீட்டில்.
"சீலிங் fபேன்."

புற்களுக்குள் கால்கள் ஊடுருவ,
கால்களுக்குள் ஊடுருவுது,
கிராமத்துப் புள் நுனியில்
குடியிருக்கும் பனிக்குளிர்ச்சி.
மூலிகை நடை.
நகர் வீட்டில்,
சுண்ணாம்பு சுடுகிறது.
மல்லாக்கப் படுத்துக்கொண்டு
மேனி குளிர்கிறது என்கிறோம்.
"மார்பல் தரைகள்."

கையால் பறித்து
கண்ணெதிரே நசித்து
தொண்டை குளிர்க்கிறது
காட்டுத் தோடம்பழம்.

கோர்டியல் கரைத்து,
குளிராக்கிக் குடித்து
தொண்டை வருத்தம்.
காரணங் கேட்டால்
"கிளைமேட் சேன்ஞ்".

கிராமத்தில்,
பெட்டி பெட்டிபோல
போதுமென்ற மனசுக்குப்
பெரிய்ய்ய்ய வீடுகள்.
மயானமாய்க் கிடக்கும் மாடிகளைத்
தேடித்தான் பார்க்க வேண்டும்.
எறும்புகள் போலவே 
எக்டிவாகவே இருக்குது
இயற்கை ஏசி -  தென்றல்.
இவ்வளவு காற்று எங்கிருந்து வருகிறது ...?

பாவித்த எண்ணையைக் கொண்டு
பலதையும் பொரிக்காதீங்க ன்னு 
படிச்சவங்க சொல்லுறாங்க.
நகர் வீட்டில்,
எப்போதோ உள்வந்து
எங்குமே போக வழியின்றி
திரும்பத் திரும்ப சூடேற்றி
சிறைப்பட்டு, 
சு(கெ)ட்டுப்போன காற்றைத்தானே
சோபாவில் கிடந்தது சுவாசிக்கிறோம்.
ஒருவழி ஜன்னல் இருந்தும்
ஜன்னலற்ற ஜவுளிக்கடைகள்.
"நகர் வீடுகள்"

காட்டு மர நிழலில்
கிணற்றுத் தண்ணீர்.
மூளை(லை) முடுக்கெல்லாம்
குளிர்க்குது இருவேளைக் குளியல்.
குடித்துக் குடித்தே குளிருது குடல்.
நகர் வீட்டில் 
கொட்டுது கேசம், கெட்டது தேகம்.
நானூறு ரூபா ரோசா
நாலே நாளில் நாசம்.
தேனீரில்கூட மணக்குது
க்ளோரின் க்லோனின் வாசம்.
"க்ளோரின் விடியல் - குளியல் - சமையல் - குடியல்"

பழகப் பழக 
பாதங்கள் பலம்பெறும் 
பழைய பாதைகள்.
பார்க்கும் திசையெல்லாம்
பச்சைப் பசேல் ஆறுதல்கள்.
ஆனால்,
பாதைகள் மெருகேற மெருகேற
பயணம் சுகமாகச் சுகமாக
நம் சிந்தனைகள்
கொன்க்ரீட் காட்டுக்குள் 
பிரச்சினைகளுக்குப் பிரசவம் பார்க்கின்றன.
நாமிருக்கும் நகர் வீடும்,
நாம் நுகரும் நகர்ச் சூழலும்
"ஒன்றில் மயானமாய் இல்லையேல் மெயின்றோடாய்."

இங்கேயே இப்போதே
ஈரஞ்சு பர்சஸ் மண்துண்டு
வாங்கிப்போட விரும்புது நெஞ்சு.
வந்து வந்தாவது கொஞ்ச நாள்
வாழ்ந்துவிட்டுப் போகலாமே.

நகருங்கள்.
நகரங்களை விட்டுக் கொஞ்ச நாள் 
நிம்மதியாக நகருங்கள்.
கிராமங்களில் கொஞ்ச நாளாவது
குடியிருந்து களித்திருங்கள்.
இறைவனை நினைத்திருங்கள்.

முஹம்மத் ஸன்ஸீர்.
19.01.2016, செவ்வாய்க்கிழமை.

நன்றி:
சித்திரம் ஏ.எஸ்.கே.என்

Sunday, January 17, 2016

ஒற்றைச் செருப்பும் இருசக்கர நாற்காலியும்.


நாளாந்த நம் உணவில்
நம்ம உழைப்பிருக்கான்னு
பார்த்தா மட்டும் போதாது.
அடுத்தவர்
உயிர்த்துண்டுகள் ஒட்டியிருக்கான்னும்
உற்றுப் பார்க்கணும்.

என் நெஞ்சை நெருக்கிய நிகழ்வு.

ஒற்றைச் செருப்பு விற்று
இரட்டைச் சக்கர நாட்காலியொன்று.

அண்மையில்
வெல்ல நீரிழிவால் பாதிக்கப்பட்டுத் - தன்
இடதுகாலை முழங்காலுக்கு கீழே
இழந்துபோன உறவுக்காரர் ஒருவரைப்
பார்க்கச் சென்றிருந்தேன்.

ஒற்றைச் செருப்பு
ஒன்றுக்குமுதவாது என்ற
யாரோ சொன்ன வாசகமும்,
கட்டிலின் கீழே,
தன் துணையிழந்து கிடந்த ஒற்றைச் செருப்பும்
ஒன்றோடொன்று கட்டிப்புரல்வது
என் சிந்தனையை ஒவ்வொரு முறையும்
ஈர்த்துக்கொண்டே இருந்தது.

எப்படியாச்சு?
என்ற ஒரேயொரு கேள்வி
என் ஒட்டுமொத்த சிந்தனையையும்
எல்லாப்பக்கமும் சுட்டெரித்தது.

காலில் எற்பட்ட காயத்திற்கு
களிம்பு போடச் சென்றபோது
வைத்தியர் ஒருவர்
மருந்து வைத்துக் கட்டிவிட்ட பாண்டேஜ்
இரவெல்லாம் தூக்காம் கெடுத்து உறுத்த,
காலையில் கடும்வலி தாங்காது
கட்டவிழ்த்துப் பார்த்தபோது
கீலங்கீலமாக புண்பட்டிருந்ததாம் தன் பாதம்.
வைத்தியரை அணுகி
ஏன் இப்படியாச்சு ன்னு கேட்டால்.....
பொண்டாட்டிய இழந்தவன் போல
தலையில் வைத்த கை நீக்காமல்
விறைத்துப்போய் நின்றாராம்
வைத்தியர் என்ற அந்த வலி தந்தவர்.

வாயில் வந்த வார்த்தைகளையெல்லாம்
வயற்றில் வைத்துப் புதைத்துவிட்டு,
வைத்தியசாலை அனுமதிச் சீட்டைப் பெற்று
புறப்பட்டாராம் என் சொந்தக்காரர்.
வைத்திசாலையில் அனுமதிக்கப்பட்டபின்
வந்தவர் போனவரெல்லாம்
என்னாச்சு யாராலாச்சுன்னு
குடைந்தார்களேயொழிய
வைத்தியம் நடந்தபாடில்லை.

அவரின் கஷ்ட காலமோ,
இல்லை
கல்வி கற்றுக்கொடுத்த கவலையீனமோ தெரியல.
மறுநாள் முதல் அடுத்த ஐந்து நாட்களுக்கு
வேதனம் வேண்டிய வைத்தியர்களின்
பாழாய்ப்போன வேலைநிறுத்தம்.
அதற்குப் போராட்டம் ன்னு ஒரு பெயரு வேற.
படித்தவர்கள் பார்க்கும்
பக்குவமான போராட்டாமா இது?

சம்பளம் வேண்டுமென்றால்
சாப்பாட்டை நிறுத்தி
சகித்திருந்து சண்டித்தனம் காட்டுங்கள்.
நம்பி வருவோர்க்கு
சேவையை நிறுத்தி,
நாளுபேரைச் சாகடித்து,
ஏழுபேரை நோகடித்து
நோட்டுக்களைப் நோண்டிப் பார்ப்பதில்
என்ன நியாயமிருக்கிறது?
என்ன நியாயமிருக்கிறது?

எல்லாம் ஓய்ந்தபின்,
ஐந்து நாள் பராமரிப்பின்றி
கறுத்துப் போன தன் காலைத்
துண்டாடுவதே சரியென்று பரிகாரம் சொன்னார்களாம்.
பாழாய்ப்போன படித்தவர்கள் சிலர்.

யாரோ ஒருவரின்
ஒரு கால் துண்டாடப்பட்டு
ஐநூறோ, ஆயிரமோ,
சம்பள உயர்வுங் கிடைத்தாயிற்று.
மகிழ்ச்சியா ..... கொண்டாடுங்கள்.
அந்த ஆயிரங்களைச் சேர்த்துவைத்து
சம்பந்தப்பட்டவர்கள்
பீட்சாவோ, பர்கரோ வாங்கி
குடும்பத்தோடு உண்ணுங்கள். குதூகலியுங்கள்.
அவரே சொல்கிறார்.
நானும் அதனை ஆமோதிக்கிறேன்.

ஒன்றைமட்டும் மனதில் வைத்துக்கொள்ளுங்கள்.

யாராக  இருந்தாலும் சரியே,
உங்கள் உணவில்
உங்கள் உழைப்பு உள்ளது என
உலகமே கேட்கப் பீத்திக்கொள்ளாதீர்கள்.
அதில் அடுத்தவரின் உயிர்த்துண்டுகள் ஏதும்
ஒட்டியிருக்குதா? ன்னும்
உற்றுப்பாருங்கள்.

நாமிருக்கும் இடத்தில் நடக்காவிடினும்,
நானும் சேர்ந்தெடுத்த முடிவில்
நானூறு மைகளுக்கப்பால் ஒருவர்
நியாயமேயின்றிப் பாதிக்கப்பட்டால்
நாமும் குற்றவாளியே.
நினைவில் வைத்திருங்கள்.

நல்ல சம்பாத்தியம்
நாலு தலைமுறைக்கு வரம்
நேர்மையற்ற உழைப்பு
நமக்கே சாபம்.

இறைவன் நம் அனைவரையும் பாதுகாப்பானாக.

ஸன்ஸீர் இப்னு முஹம்மத்.
18.01.2016, திங்கள்.

Wednesday, January 13, 2016

மறக்க முடியாத மே 27

பத்து வருடங்களுக்கு முன்
உங்க எல்லோருக்கும்
அது ஒரு வெள்ளிக்கிழமை.

எனக்கு ....
வாசிங்களன் புரியும்.

என் மனைவியைப் பெண்கேட்டு
நானே அவ வீட்டுக்குத்
தனியாய்ப் போன
நடுக்கம் கலந்த நல்ல நாள் அது.

காத்தான்குடியில் இன்றோடுநான்
முதலா இல்லை முடிவா என
முடிவெடுக்கும் முதல் காலடி அது.

ஆனால் !

மணந்தாலும் மரித்தாலும்
மனைவி அவள்தான் என்று - என்
மனசு முழுக்கத்
திணிசு திணிசாய்த் தீர்மானங்கள்.

மணிக்கணக்கில் பேசி
மண்ட குழம்பி
மல்லுக்கட்டி மனசுகள மாத்தி
மாப்பிள்ளையாய் மாறி
மனசு நெறஞ்சு ஜும்மா தொழுது
மத்தியான புரியாணியோட
புறப்பட்ட பயணம்.

இன்று மீட்டுப் பார்க்கையில …
"இந்தாங்க நெஸ்கொfபி" ...

அன்று
அழுதுபார்த்த அதே முகம் ….

இன்று
அழகாக ... அன்பாக ... அருகில் ....
ஆவிபறக்கும் நெஸ்கொfபியுடன் !

சபாஷ்டா ஸன்ஸீர்
சாதிச்சிட்டாய்டா ! கொfபிய குடி !

ஓர் ஆத்மார்த்த ஆசிரிய ஆதங்கம் !


கொஞ்சங் கொஞ்சமாய் 
முகங்கள் மறந்துபோகும் ஒரு 
எதேச்சையான தருவாயில் தான்
என் நண்பன் ஒருவனைச் சந்தித்தேன்.
ஒரு ஆதங்கப்பட்ட ஆசிரியனாக.

படாத பாடுபட்டு
பறித்தெடுத்த என்
எட்டு வயதுப் பட்டதாரிப் பட்டம்
பட்டமரம் போல பழசாகிப் போயிருக்கு.
பட்டப்பின் படிப்புவிலை
படியேறிப் போய்விட்டதால் ...
இருப்பினும்
பத்திரமாய் வெச்சிருக்கன் - அதிலே
என் காதல் கதையும் கலந்திருப்பதால்.

கத்திக் கத்தித்தான்
காசு சம்பாதிக்குறன் மச்சான்.
கட்டுபடியாகுதில்ல டா.
மாதா மாதம் மளிகைக்கடையில் இருந்து
முதல்மாத நிலுவை நோட்டு வரும்.
கடன் தீர்த்துக் கடன் வாங்கி
காலம் செல்லுது மச்சான்.

நின்றாலும் நகர்ந்தாலும்
வாகனச் சுமையை சில்லுகள் சுமப்பதுபோல
வாழ்க்கைச் செலவின் சுமை
என் உறங்காத சிந்தனைகளில்
வலுக்கட்டாயமாய்.

வீட்டுக்கும் வகுப்புக்குமிடையில்
விரிந்திருக்கும் 40 கி.மீ. - என்
வருமானத்தில் 4000 ஐ
வட்டிக்காரனைப் போல
மாதாந்தம் எடுத்துக் கொல்கிறது.

உலகில்
செலவானதில் சிறந்ததை தேடுது பல கண்கள்.
மலிவானதில் சிறந்ததை நாடுது என் போன்ற நெஞ்சம்.

எல்லாமே இப்போ
காசு
பணம்
துட்டு
மணி மச்சான்.

பாதிப்பேர் இங்க
பென்சன நம்பித்தான்
பார்ட் டைமா படிப்பிக்க வர்றாங்க - தன்
ஆணி வேரை
ஆங்காங்கே வளர்த்துவிட்டு
கிளைகளைத்தான் கிலாஸ் ரூமுல
காட்டுறாங்க.
என்னால அப்படியும்
இருக்க முடியல.

கவனம் முழுதையும்
கற்றுக்கொடுப்பதில் கொட்டிக்கொடுக்க
எங்களுக்கும் ஆசைதான் - என்னசெய்வது?
இத்தனை
சிந்தனைச் சிதறல்களுக்கு மத்தியிலும்
சீக்கிரம் ஓடிமுடியும் 40 நிமிடங்களுக்குள்
ஆளுமையில் வேறுபட்ட
தீப்பெட்டி வகுப்பிற்குள்
5 E சிஸ்டம் வேறு !

உதிரும் வெங்கட்டித் துகல்களுக்கிடையில்
உயிருக்கான ஒக்சிஜனைத் தேடி
தினந்தினம் போராடுது - நான்
திரும்பி வரும்வரை
திண்ணையில் காத்திருக்கும்
என்னிரு குழந்தைகளின் முகங்கள்.

மனசுகள் பேசத் துவங்கிய போது
மேசைக்கு வந்த தேனீர்
தேன் நீராக ஆறியிருந்தது.
அங்கே தொலைந்த அந்த வெப்பம் - என்
உணர்வுகளுக்குள் ஊடுருவி - உங்கள்
உதடுகளில் உயிர்பெற்று - என்னைப் போலவே
உங்க உள்ளத்திலும்
உஷ்ணத்தை உருவாக்கியிருக்கும் - என்
உள்மனசு சொல்லுது.

இந்த வெப்பத்தை
இன்னொரு மனசுக்குள்
இடம்மற்றுங்கள்
எல்லாமாய்ச் சேர்ந்து
என்றாவது ஒரு நாள்
ஏதாவது பண்ணும்.

~ முகம்மது ஸன்ஸீர் ~

சோறுபோடும் ஒரு சோடி வளையல் !

இன்னும் எனக்கு 
ஞாபகம் இருக்கு.
1985 ஆம் ஆண்டு;

என் கல்வி உரிமையை
உயிர்ப்பிக்க
என் கண்முன்னாலேயே
தங்கக் கடையில்
தன்னைத் தியாகம் செய்தது
என் அம்மாவின் கையில் கிடந்த
ஒரேயொரு சோடித் தங்க வளையல்.
வெறும் 3000 ரூபாவுக்கு.

இருபது வருஷம்
இரவு பகலாய் - என்
மனசு முழுக்கத்
திணிசு திணிசாய்
முளைத்துக் கிடந்தது - அந்த
மூவாயிரம் ரூபா நெருஞ்சி.

என்
முதல் இருமாத சம்பளத்தில்
அதே கடையில் - அதே டிசைனில்
ஒரு சோடி வளையல் - அம்மாவின் கையில்.
அளப்பரிய ஆனந்தம்.

அல்லாஹ்வின் நாட்டத்தால்
அந்த ஒருசோடி வளையல் - அன்று
ஆரம்பித்து வைத்த கல்விதான்
இன்றெனக்கு
மூன்றுவேளை சோறுபோடுது.
அல்ஹம்துலில்லாஹ்.

என் அம்மாவும்
அவள் துவக்கிய வைத்த
ஆரம்பக் கல்வியுந்தான் - என்
அடிப்படை ஆணிவேர்
முன்னேற்றத்தின் மூலதனம்
எல்லாமே.

ஆரம்பக் கல்விய
அழகா ஆரம்பிச்சு வைங்க !

Sanzeir

புரியாத பிரியம் … பிரியும்போது புரியும்.















வார இறுதி நாட்கள்.

விடுமுறை நாளிலாவது
வீட்டு வேலைகளில்
வீட்டுக்காரிக்கு உதவலாம் என்று
வீராப்பாய் இறங்கிய மறுநாள்தான் விளங்கியது
வியர்வை விற்று வாங்கிய வலிகள்.

இத்தனை காலமாய்
எத்தனை வலிகளுடன்
அத்தனை வேலைகளையும் இந்தப்
பித்தனை நோகாமல் செய்திருப்பாள்.

மறுநாளும் வேலைசெய்தால்
மூலைமுடுக்கில் வலி குறையும் என்று
மருத்துவம் சொன்னாள் மனைவி.

ஓரிரு வருஷங்களாய்
ஒரு ஓரமாய்க் கிடந்த
ஒரிஜினல் இரும்பு அலுமாரியை
ஒத்தையாய் தள்ளியபோதுதான்

ஒருநூறு இடங்களில்
ஒத்தடங்கேட்ட வலிகளுக்கிடையில்
ஓடிவந்து கண்ணில் பட்டது
ஒட்டப்பட்டிருந்த ஒரு பழைய காகிதம்.

ஒரு பிரயாணியின் பாதுகாப்பு வேண்டி
ஓதப்படும் பிரார்த்தனை அது.

எழுதி வைத்து தினமும்
எனக்காக ஒதியிருக்கிறாளே என்பது
என்மீது அவள் கொண்ட
எல்லையற்ற காதலை - ஒருபுறம்
எடுத்துக் காட்டினாலும்

எழுதி வைத்து ஓதுமளவு - நான்
அவளுடன் இருந்ததில்லை என்பது
என் கவலையைக் கூட்டியது.

புரிந்துணர்வு
பிரிந்த உணர்வை
பெரிதாக்காமல்.
பொருந்திக்கொள்கிறது.

புரியாத பிரியம் … பிரியும்போது புரியும்.

- முஹம்மத் ஸன்ஸீர் (SunZR !)

கான் சேர் !

இன்று 

நான் பேசும், எழுதும் தமிழ் மொழிக்கு
அடிப்படை ஆர்வம் நீங்கள் தான் சேர்.
என் இன்றைய தொழிலில் உங்களை
நான் அடிக்கடி நினைக்கின்றேன் சேர்.

உங்களுக்கு ஞாபகம் இருக்கா ...
சாஜித்து எழுதுறானே என்று
சும்மா நான் கிறுக்கிய ("பாடசாலை முதல் நாள்") என்ற
என் முதல் வரிகளைக் கவிதையாக்கி
கவிஞன் கேதே எனப்
பாடத்தில் வந்த பெயர்சூட்டி
கைதட்டல் வாங்கித்தந்த அந்த நாள் (1992).
இன்னும் எனக்குள் ஈரமாகவே இருக்குது.

அதே 92 இல் ...
என்னைப் பலவந்தமாய் மேடையேற்றி
பலநூறு கைதட்டல்கள்
எனக்காக கடன் வாங்கி –
"கண்ணுக்கு மையழகு" பாடவைத்து
என்னை ஒரு
பாடகனாய்ப் பிரபலப்படுத்தி - நீங்கள்
உடன் கடன் தீர்த்ததும்.
இறந்தாலும் நான் அதை மறந்தாலும் பாவம்.

சீத மதிக்குடைகீழ் செம்மை அறங்கிடப்ப ....
"நளவெண்பா" எங்கள்
நாடி நரம்பெல்லாம்
நிரம்பிக் கிடக்குதென்றால்
நீங்களேதான் சேர் நோ டௌட்.

பல பள்ளிக்கூடங்களுக்குப் போயிருக்கன்.
பாடநேரம் போவதுகூடத் தெரியாமல்
பாடம் நடத்திய பக்குவமான வாத்தியாரை
இதுவரை நான் பார்த்ததில்லை.
அப்படியொரு பொடியும், பொடி லங்குவேஜும் .
வராது ... வரவே வராது. வந்தா சொல்லுங்க.

வல்ல அழ்ழாஹ் உங்களுக்கு மேலான சுவனத்தை அளிப்பானாக.

முஹம்மத் ஸன்ஸீர்

அவசரம் - ஒரு அனாவசிய அவஸ்தை.

அலுவலகம் - மாலை 05:30 மணி 


வீடு செல்வதற்காய் வரவேற்பறையில்
வரவேண்டிய நண்பனுக்காய் காத்திருந்தேன்.

அலுவலகத்தில் வேலை செய்யும் - ஒரு
அயல்நாட்டவர் - வருகிறார்.

"ஹாய் .... ஆர் யூ வெயிட்டிங் போர் த டெக்சி?"

நோ ..... வெயிட்டிங் போ எ ப்ரெண்ட் .. ரு கோ ஹோம்.

"ஒஹ் ஐ சி .....
ஹேய் ... இஸ் தி கான்டீன் க்ளோஸ்ட்? ஒஹ் மை கோட்"

(இனி இங்கிருந்து தமிழாக்கம்)

ஆமா அஞ்சு மணியானதும்
அவங்க போயிடுவாங்க. என்னாச்சு?

"காலையில 1000 ரூபா கொடுத்து
காலைச் சாப்பாடு சாப்பிட்டன்.
சில்லறை இல்லேன்னாங்க.
ஸ்ரீ லங்கா காசு - வேற அப்போ கையில இல்ல.
ரூமுக்கு கொண்டு வந்து கண்டிப்பா தர்ரேன்னாங்க.
இப்போ ஆளையே காணோம்.
இது கொஞ்சம் கூட சரியில்ல.
இவங்க இப்பிடித்தான். "

"அவங்க அப்பிடி பண்ண மாட்டங்களே.
உங்க மேசையில பார்த்தீங்களா? அல்லது
ஏதும் அவசர நிலமையால போனாங்களோ தெரியாது.

ம்ஹும், அதெப்படி போறது.
மேசையில எதுவும் இல்ல. என்ன பண்றது.
பொறுப்பே இல்லாதவங்க. பேட் காய்ஸ்.
நான் வர்றன்.

காச்சு மூச்சுன்னு கத்திட்டு போரவர
கண்ணாடி வழியா பார்க்கிறன்.

அலுவலக காவலாளி:

"மேடம் ... மத்தியானம்
உங்ககிட்ட கொடுக்க சொல்லி
கண்டீன் காரங்க காசு கொடுத்தாங்க.
உங்கள பார்க்க மூணு நாலு தடவ
மேல் மாடிக்கு வந்தாங்களாம்.
நீங்க சீட்ல இல்லியாம் - அதுதான்
எங்கிட்ட கொடுத்து உங்ககிட்ட கொடுக்க சொன்னாங்க. சரியான்னு பாருங்க"

சில செக்கன்கள் சிலையாக நின்றவர் - என்னை
ஸ்லோ மோசனில் திரும்பிப் பார்த்தது
மழை கழுவிய கண்ணாடியூடே
முழுமையாய்த் தெரிந்தது.

அவசரம்
உண்மை நிலையை உணரப் - போதிய
அவகாசம் எடுத்துக்கொள்வதில்லை.
காலம்
கண்டீன் குடும்பத்தின் கண்ணியத்தைக்
கச்சிதமாய்க் கற்றுக் கொடுத்தது - அந்தக்
கடல் கடந்து வந்த கருமக்காரிக்கு.

ஏன் இவன் இவ்வளவு லேட்டு - என்ற
இறுதிக்கட்ட கடுப்பிலிருந்த எனக்கு
இந்தக் காட்சியைக் காண்பிக்கத்தானோ
இறைவன் - என்
நண்பனின் கைத்தொலைபேசியை
இடம்மாற்றி வைத்தானோ ...

தேடி எடுத்து வருவதற்குள்
கோடி பெறுமதியான பாடமொன்று.

அவசரம் - ஒரு அனாவசிய அவஸ்தை.

முஹம்மத் சன்ஸீர்.

கொண்டைக்கடலை கொண்டு வரும் இரு முகங்கள்.

கொண்டைக்கடலை கொண்டு வரும் 
இரு முகங்கள்.
இண்டைக்கும் கதைசொல்லும். 

சுனாமிக்குப் பின்னரான சிறுவர் விளையாட்டு நிலையம்.
பெரியநீலாவணை.

வாரநாட்களில் சுமார் 100 - 120 சிறுவர்கள்
விளையாட்டு கல்வி செயற்பாடுகளில் ஈடுபடுவர். போஷாக்கு உதவியாக கொண்டைக்கடலை, டீ-பிஸ்கட், பாசிப்பயறு என்று மாறி மாறி வழங்கினோம்.

ஒரு 12 வயது சிறுமியும், 8 வயதுச் சிறுவனும் (சகோதரங்கள்) நாள் தவறாது நிலையத்திற்கு வருவார்கள்.
வரவுப் பதிவு சொல்லியது.
டீ-பிஸ்கட் வழங்கப்படும் இரு நாட்களில் மட்டும் அவற்றை சாப்பிடுவர். ஏனைய 3 நாட்களிலும் எதையுமே சாப்பிடாமல் வைத்துக் கொள்வார்கள்.

தொண்டர்கள் இதைப்பற்றிக் கூற, நானும் அவதானித்தபோது 100% உண்மையாக இருந்தது.

ஒருநாள் அவ்விருவரும் என்னை வந்து சந்தித்தார்கள்.

"சேர் .... எல்லா நாளும் எங்களுக்கு கடலை தாங்க .. டீ-பிஸ்கட் வேணாம் சேர்."

ஏன்?

"இல்ல … வேணாம் ... சேர்."

இதோ பாருங்க ….
அஞ்சு நாளும் கடலை சாப்பிட்டீங்கேன்னா
அது உங்களுக்கே சலித்துப் போகும். அதனாலதான் உங்க பெற்றோர்ட ஆலோசானையுடன் இத நாங்க பண்றோம். பெரும்பாலான பிள்ளைகளுக்குப் பிடிக்கலேன்னா நாங்க மாத்தலாம். பேசுவோம்.

எல்லாப் பிள்ளைகளுடனும் பேசியபோது
கிட்டத்தட்ட அனைவருக்கும் டீ-பிஸ்கட் பிடித்திருந்தது. அவர்கள் இருவர் மட்டும் உடன்படவேயில்லை.

ஒருநாள் காலையில் அவர்களின் வீடு சென்றேன்.

பிள்ளைகள் பாடசாலையில்.
அப்பா வீட்டில் இருந்தார் - அறிமுகமான ஒரு முகம்தான்.
அம்மா இருக்கவில்லை. சாதாரணமாகப் பேசத் துவங்கி நான் காணாமல் போனேன். ஆச்சர்யமாக இருந்தது.

"சேர் என் பிள்ளைகள் தங்கம் சேர்.
விளையாட்டு நிலையத்தில் இருந்து நேராக வீடு வந்திடுவாங்க.
வீட்டில் வைத்துத்தான் கடலை சாப்பிடுவாங்க.
வழியில் எங்குமே ஒரு கடலை கூட சாப்பிடமாட்டாங்க.
ரொம்ப நல்ல பிள்ளைகள்.
நாங்க ரொம்ப கொடுத்து வெச்சவங்க...." என்று புகழ்ந்து பேசினார்.

அவங்களுக்கு கடலேன்னா ரொம்ப பிடிக்குமா ...? ன்னு கேட்டேன்.

ஏன் அப்பிடிக் கேட்கிறீங்க?

இல்ல ...
அஞ்சு நாளும் கடல தரச் சொல்லுங்க சேர் ன்னு எங்கிட்ட எங்கிட்ட வந்து கேட்டாங்க அதுதான் ….

அழத் துவங்கினார். எனக்கு சங்கடமாக இருந்தது.

"நாங்க நல்ல வசதியா இருந்தம், எங்க பிள்ளைங்கள நல்லாவே பார்துக்கிட்டம். எது கெடெச்சாலும் வீட்டுக்கு கொண்டுவந்து எல்லோரும் சேர்ந்து தான் சேர் சாப்பிடுவம்.
ஒரு எக்சிடெண்டால என்னால இப்போ சரியா நடக்க முடியல ... என் மனைவி சில வீடுகளுக்குப் போய் வீட்டு வேலைகள் செய்யிறா .. அதுதான் அவ வீட்ல இல்ல. உங்களுக்கு ஒரு காப்பி தண்ணி தரக்கூட என்னால முடியல. மன்னிச்சுக்கோங்க.

இல்ல பரவால்ல ...

எவ்வளவோ சொல்லியும் என் பிள்ளைங்க
கிடைக்கிற கடலை எல்லாத்தையும் வீட்டுக்கே கொண்டு வந்திர்ராங்க.
முழுசா சாப்பிடாதவங்க கிட்ட மிச்சத்தையும் வங்கிக்குவாங்கலாம்.
தொண்டர்களும் கொஞ்சம் கொடுப்பாங்களாம்.
அந்தக் கடலை தான் சேர் அன்னிக்கு எங்களுக்கு இரவுச் சாப்பாட்ல பெரும் பகுதி.
அதனால தான் அவங்க அஞ்சு நாளும்
அதையே கேட்டிருக்காங்க ன்னு நினைக்கிறன்.
சீக்கிரம் குணமாகி நான் வேலைக்கு போகணும் சேர்”

விடைபெற்று வரும் வழியெல்லாம்
அந்த இரு பிஞ்சு முகங்களே ....

சுயநலத்தைப் பற்றி சிந்திப்பது தானே இந்த வயதில் சாதாரணம்.
எப்படி இந்த வயதில் இப்படியொரு மனோநிலை … ?
காரணம் அந்தப் பெற்றோர் கவனித்த விதம்.

கையில் பிள்ளை கிடைத்தவுடன்
கொடுத்த வாக்குறுதிகளை எல்லாம்
பிள்ளையின் 3 வயதிலேயே மறந்து போகும்
பெரும்பான்மைப் பெற்றொருக்குள் - இவர்கள்
பொலபொலவென்று ஜொலித்துக் கொண்டிருந்தார்கள்.
பெருமையா இருக்கு.

இது நடந்து இன்றோடு
மூவிரண்டு ஆண்டுகளாயிற்று,
மீண்டும் ஒரு முறை சென்று சந்திக்க வேண்டும்.
இன்ஷா அழ்ழாஹ்.

பெத்தவங்கள பிள்ளைங்க பார்த்துக்கணும் னா
பெத்ததுல இருந்து
பிள்ளைங்கள நல்லபடியா பார்த்துக்கங்க.
பாத்துக்கிற விதம் சரியான்னும் - புருஷன் பொஞ்சாதி பேசிக்கங்க.

இண்டைக்கும் கதைசொல்லும் ...
கொண்டைக்கடலை கொண்டு வரும் அந்த இரு முகங்கள்.

முஹம்மத் ஸன்ஸீர் (08.12.2014)

உதவிகளில் உன்னத உதவி.

ஒருவருக்கு உதவி செய்ய வாய்ப்புக் கிடைத்தால் அவரின் தேவைகளைக் கண்டறிந்தோ / கேட்டறிந்தோ அவற்றுள் மிகவும் முக்கியமான ஒன்றிற்குச் சத்தமின்றி, விளம்பரமின்றி உதவி செய்யலாம். 

அது இப்படி இருந்தால் இன்னும் மிகவும் சிறப்பாக இருக்கும் என்று சொல்லுது என் சிறுபராய வாழ்க்கை.

1. ஏதாவது ஒன்றைத் துவங்கும் முயற்சிக்கு உதவி
(தொழில்/ கல்வி/ சத்திரசிகிச்சை/ வீடுகட்டல்/ திருமணம்/ பிள்ளைப்பேறு என்பன).
2. பெறுபவரால் திருப்பிக் கொடுக்க முடியாத உதவி.

ஏன் சொல்கிறேன் என்றால் ...

வெயிலும் மழையும் விசாவின்றி வந்துபோகும் - எங்கள்
வயதான கிடுகுக் கூரைக்குள் இருந்து
பூசவேணும், நிலை வைக்கோணும்கிற நெலமையிலும்
கூரையேதான் போடவேண்டும் என்ற
கண்டிசனோடு காசுதந்து - எம்மை
ஓட்டுக்கூரைக்குள் குடிபுகுத்திய
அந்தவொரு உன்னத மனிதரை ....

சோவெனப்பெய்யும் மழையும்
சிகப்பு ஓட்டுக்கூரைகளும்
எப்போதும் எங்கேயும் - எனக்கு
ஞாபகப்படுத்தத் தவறுவதேயில்லை.

ரொம்ப .... ரொம்ப நன்றி சேர்.
உங்களை மறக்க முடியாது.

எஸ்எம்முஹம்மதுஎஸ்.

Why U Happy Always?

வழமையாக வார இறுதி நாட்களில் என்னைச் சந்திக்க வரும் நெருங்கிய உறவினர் ஒருவர் வீட்டுக்கு வந்திருந்தார். பேசிக்கொண்டிருந்தோம். 

வீட்ல சீவல், பக்கோடா இருக்கு நீங்க என்ன சாப்பிட விரும்புறீங்க பிரதர்? 

“ம்ம்ம்ம்... பக்கோடாவ தாங்க.”

பகிர்ந்தோம் சாப்பிட்டார். திடீரென ஒரு கேள்வி கேட்டார்.

"எப்பிடி மச்சான் எப்ப பார்த்தாலும் ஹப்பியாவே இருக்கீங்க?

அவருடன் என் சம்பாஷனை இதோ.

நீங்க ஏன் பக்கோடா சாப்பிர்றீங்க?
“நீங்க தந்தீங்க, புடிச்சிருக்கு சாப்புர்ரன்.”
ஓகே. அப்போ... ஏன் நீங்க டெயிலி சோறு சாப்புர்றீங்க?
“ம்ம்ம்ம் ... சக்திக்காக “

• நீங்க தூங்குறது..? ரெஸ்ட் க்காக,
• அப்போ படிக்கிறது..? எக்சாமுக்காக.
• பாத்ரூம் போறது? ம்ம்ம் ... இது தெரியாதா ....???
அதுக்குத்தான்.

• டிவி பார்க்கிறது? பொழுது போறதுக்காக.
• பிரெண்ட்ஸ்ங்க கூட இருக்கிறது? ஜாலிக்காக.
• விளையாடுறது ...? பிட்னஸ் க்கு.
• தொழுறது? அழ்ழாஹ்வுக்காக.
• குர்ஆன் ஓதுறது? நன்மைக்காக.

ஓகே ...... மை டியர், க்ரேட்.
உங்களைப்போல இதே விஷயங்கள தான் நானும் பண்ணுறன். ஆனா நமக்குள்ள வித்தியாசம் என்னான்னா ... நீங்க ஒவ்வொன்றையும் வெவ்வேறு நோக்கத்திற்காக பண்ணுறீங்க. நான் எல்லாத்தையும் ஒரேயொரு நோக்கத்திற்காக பண்ணுறன். அதனால தான் என்னால எப்பவுமே ஹப்பியா இருக்க முடியுதுன்னு நான் நம்புறன்.

“அது என்ன பொதுவான நோக்கம் மச்சான்?

அது என்னோட ஹலாலான சந்தோசம்.

பிரதர் நம்ம மனசிருக்கே .... அத நாம ஹப்பியா வெச்சுகிட்டா.... அது நம்ம மூளைய சுறுசுறுப்பா பாத்துக்கும். ஒவ்வொன்றையும் ஹலாலான ஹப்பினஸ் க்காக பண்ணும்போது பண்ணுற விஷயத்துல இஷ்டமும், இண்டரஸ்ட்டும், கூடுதல் நன்மையுங் கிடைக்குது.

“சோ யூ ஆர் ஹப்பி … வெரி சிம்பிள்.”

முஹம்மது ஸன்ஸீர்.
10.05.2015

புரியாத பிரியம் பிரியும்போது புரியும்.


மேகங்கள் லேசாகத் தூறல் போடத் துவங்கியிருந்தன .....

அப்பா ... நீங்களும் அம்மாவும் எங்ககூடவே வந்திடுங்கப்பா. நடந்தது எதையும் மனசுல வெச்சுக்காதீங்கப்பா .... வாங்கப்பா.

இதப்பாருப்பா ... உன்னையும் எங்களையும் புரிஞ்சிக்கிட்ட ஒரு பொண்ணா பார்த்து ஒனக்கு கட்டி வைக்க நாங்க தவறிட்டம் ன்னு நினைக்கிறன். ஒன்னோட விருப்பு வெறுப்புகளக் கூட கேட்காம, உன்னோட வாழ்க்கை நல்லாரிக்குமேன்னு தான் நாங்க நெனச்சம். ஆனா ... நாங்களே ஒங்களோட நிம்மதிக்கு இடைஞ்சலா இருப்போம்னு சத்தியமா நினைக்கலப்பா. நீ எங்க பையன் ... ஒன்னப் பத்தி எங்களைவிட நல்லா புரிஞ்சிக்கிட்டவங்க இந்த உலகத்துல யாருமே இருக்க முடியாது. ஒன்மேல எங்களுக்கு எந்த வருத்தமும் இல்லப்பா. என்ன உன்னோட கல்யாண விஷயத்துல நாங்கதான் தப்பு பண்ணிட்டோமோ ன்னு ஒரே உறுத்தலா இருக்கு. மன்னிச்சிடுப்பா.

என்னப்பா நீங்க .... என்கிட்ட மன்னிப்பெல்லாம் கேட்டுக்கிட்டு ..... அதெல்லாம் ஒன்னுமில்லப்பா. எல்லாம் சரியாகிடும். நான் பொறந்ததில இருந்து என்னோட நல்லதுக்குத் தானே நீங்க எல்லாமே பண்ணீங்க. இதுவும் அப்படித்தான் .... இப்பிடித்தான் நடக்கனும்னு ஆண்டவன் விதிச்சிருந்தா அத யாரால மாத்தமுடியும் .. சொல்லுங்க ..? அதையெல்லாம் விட்டுட்டு இப்போ நீங்க ரெண்டு பேருமே என்கூட வீட்டுக்கு வர்றீங்க. சரியா ..?

நான் சொல்லுறத ஒருவாட்டி கேளு... நான் இப்பிடியே ஓடியாடி வெளி உலகத்துல கிடந்து பழகிப்போன ஆளு. எனக்கு இங்க தங்குறது ஒன்னும் பிரச்சினையில்ல. எல்லாப் பெத்தவங்களும் ஓடியார்ற வயசில மேல போய்ச் சேர்ந்திடனும்ன்னு சொல்லுறது ... பிள்ளைங்க நம்மளப் பார்த்துக்க மாட்டாங்க ன்னு நெனெச்சி இல்லப்பா. கடைசிக் காலத்துல நம்மளால நம்ம பிள்ளைங்களுக்கு எந்தத் தொந்தரவும் வந்திடப்படாது என்கிறதாலதான். வெளியே சொல்லாட்டாலும் சாகும்வரை தன் பிள்ளைங்க கூடவே இருக்கணும்னு தான் எல்லாப் பெத்தவங்களும் ஆசைப்படுவாங்க. ஆனா வெளியே சொல்லிகிறதில்ல. அதால அது தெரியிறதில்ல அவ்வளவுதான்.

உனக்கு நல்லாவே தெரியும் ... உங்க அம்மாக்கு உன்னையும், என்னையும், அவளோட சமையலறையையும் விட்டா வேறெதுவுமே தெரியாது. அவ உலகமே நாமதான்னு வாழ்க்க பூரா இருந்திட்டா. இப்போ இதையெல்லாம் விட்டுட்டு வேறவொரு இடத்துல தனிமைப்பட்டுக் கிடக்கிறது அவளுக்கு ரொம்ப கஷ்டமாயிருக்கும். ஒரு நாளைக்கு ஒன்னோட முகம் பார்த்துப் பேசலேன்னா ..... அவ தலையே வெடிச்சிடும். நீ வெளிநாடு போயிருந்த காலத்துல அவ பட்ட பாடு எனக்குத்தான் தெரியும். அதால அம்மாவ மட்டும் உன்கூடக் கூட்டிக்கிட்டுப் போ. எங்களுக்குப் பென்சனும் வர்றதால பணப் பிரச்சினை ஒன்னும் இருக்காது. நான் அப்பிடியே அப்பப்போ வந்து உங்க எல்லாரையும் பார்த்துக்குவன். இப்போ இருக்கிற நெலமையில ரெண்டுபேருமே உன்கூட அங்க வர்றது அவ்வளவு சரியாயிருக்காது. சொன்னாப் புரிஞ்சிக்கோ.

அப்பாவை ஒருபோதும் எதிலும் வற்புறுத்த முடியாது. அவர் யோசிச்சு ஒருவாட்டி முடிவு பண்ணிட்டார்ன்னா அவர் பேச்ச அவரே கேட்க மாட்டாரு.

ஆழ்ந்த சிந்தனைக்குப் பின் ......
சரிப்பா ...... இன்னிக்கு நான் அம்மாவ என்கூட கூட்டிட்டுப் போறன் .... ஆனா சீக்கிரம் நீங்களும் எங்ககூட வந்திடனும். ஓகேவா?

சரி ரொம்ப சந்தோசம். அம்மாவ நல்லபடியாப் பார்த்துக்க.

குழுங்கிக் குழுங்கி அழத்துவங்கினான் ஆரொன்.
அன்னிக்கி அம்மாவோடப் பேசி சமாதானப்படுத்தி அவவ என்கூட அனுப்பி வெச்சீங்கலேப்பா ..... ஆனா கடைசி வரைக்கும் நீங்க மட்டும் வராமலேயே போயிட்டீங்களேப்பா .... உங்க கல்லறைய பார்க்க வர்ற ஒவ்வொரு முறையும் .. நீங்க பேசின கடைசி வார்த்தைகள் தான்ப்பா எனக்கு ஞாபகம் வருது.

பெத்தவங்கள கடசிக்காலத்துல சந்தோசமா வெச்சிருக்க வேண்டியது பிள்ளைங்க பொறுப்பு. பெத்தவங்க தன் பிள்ளைங்கள பார்த்துப் பார்த்து வளர்க்குறது .. பின்னால அவங்களையும் தன்னோட பிள்ளைங்க போல பாத்துக்கிறதுக்குத் தான்பா. நான் வெளிநாடு போயிருந்த நேரத்துல என்னென்னமோ நடந்து போயிருச்சு ..... எனக்கு எதுவுமே தெரியலேப்பா. உங்கள மீறி அம்மா என்னிக்கு ஒரு வார்த்த பேசியிருக்கா...? அம்மாவும் என்கிட்ட எதுவுமே சொல்லல. இருக்கிறப்போ விட்டிட்டு நீங்க இல்லாதப்போ அழுது என்னப்பா பிரயோசனம்....?
சாரிப்பா .... என்ன மன்னிச்சிடுங்கப்பா .....

அவனைப் போலவே .....
அந்த மயானத்தில் மழையும் சோவென்று பெய்துகொண்டிருந்தது.

நம்மோடு இருக்கும்போதே - எல்லா
உறவுகளையும் நேசிக்கணும்.
நேசத்தின் நேர்த்தி நலிவடைந்து,
நேரமுங் கடந்து போனால்
நெஞ்சடைக்கும் நோவுகளும்
நெருஞ்சி நிகர்த்த நெருடல்களுமே
நம்மிடம் மிஞ்சும்.

அப்போது அழுவதைத் தவிர
வேறு ஒரு மண்ணுமே பண்ண முடியாது.

ஸன்ஸீர் இப்னு முஹம்மத்.
21.10.2015, புதன்.
 — feeling thankful.

காதல்.


ஆகாயமாய் ஆண் மனது 
ஆயிரமாயிரம் தூதனுப்பும்.
பூமிபோலப் பெண் மனது 
பொத்திவைத்துப் பாதுகாக்கும்.

கருவான காதலால்
உருவான சாட்சிகள்

இதோ ....

மண்ணிலே மலர்கள்.
விண்ணிலே வாசனை.

போட்டிக்குப் போய் வந்த - என்
பத்து வயதுப்
போஸ்ட்கார்ட் கவிதை.
பழசாயினும் யதார்த்தமாக.

எஸ்எம்எம்எஸ்.

கடற்கரை.

கடற்கரை.

காகங் கரையும் அதிகாலை
காலைத் தீண்டும் அலை
நிழல் நனைக்கும் நுரை
நீளமான மணல் தரை
கடற்கரை.

உப்புக் காற்றும்
வெப்பக் கீற்றும் சேர்ந்து
ஏற்றிய சூட்டில் - என்
கைத்தொலைபேசியில் கர்ப்பமாகுது
ஒரு கவிதை.
பெயர் "புகைப்படம்".
எப்பேர்ப்பட்டவன் என் இறைவன்?
அவன்
ஒப்பற்ற கலைஞன்
ஒரிஜினல் படைப்பாளி.

தொடுவானில் மணிக்கணக்கில்
தன்னையே துவைக்கிறதோ மேகம் !
தொட்டுச் செல்கிறது
புதுப்புது நுரை.

அலைவிரித்த மண் பாயில்
விரித்துப்போடுகிறேன் என்னை.
"நகரு .... நகரு ....
நாங்க அலையோடு விளையாடுறோம் " ன்னு
நோண்டிச் சொல்கின்றன
நண்டுகள்.

நிமிர்ந்து பார்க்கிறேன்.
நெடுநாள் பிரிந்திருந்து
தந்தை காணும் பிள்ளைகள் போல
ஒன்றன்பின் ஒன்றாகவும்,
ஒன்றாகவும் அலைகள்.
அழகு.

அலைகொண்ட கடலும்,
நனைகின்ற விழியும்,
உலைகின்ற மனசுக்கு மருந்தென்பார்கள்.
இரண்டிலும்
உப்பு இருப்பதாலா...?

பொதுவாக
இரைச்சல் ஒரு எரிச்சல்.
இந்த இரைச்சல் ஒரு இறைச் செயல்.
தனிமை சுவைக்கும் இனிமை.
என்பதாலா..?

மனசு நேசிப்பதால்
இரைச்சல்கூட இன்பமாகிறது இங்கே.
இது
கடல் கூறும்
கட்டணமில்லா உளவியல்.
ரோஜாவை நேசித்தால் 
முள்ளும் அழகுதான்.
கற்றுக் கொள்க.

குழந்தைகள் விளையாடுமிடத்தில்
காண்போருக்கும்
குதூகலம் கிடைக்கும்.
"அலைகள்" கடலின் குழந்தைகள்.
"கரை" அவை விளையாடுமிடம்.
அதனால் தானோ
இத்தனை ஆனந்தம்.

இந்த
அதிகாலை அழகையும்,
அலைகளின் ஸ்பரிசத்தையும்
ஆண்டவனின் அற்புதங்களையும்
இழந்துவிட்டா
போர்வைச் சிறைக்குள்
பூட்டிய உறக்கம்..?

அலைகளோடு அலைகளாகி
அங்கேயே தொலைந்து போகிறேன்.
சிறிய அலையில் வெளிவந்து
பேரலையில் அள்ளுண்டு போகிறேன்.
ஐந்து நிமிஷம் என்றுதான் போனேன்.
ஐம்பது நிமிஷங்களாகியும்
மனதோடு மல்லுக்கட்டுது
மணிக்கூடும்,.மார்கட்டு வேலையும்.

மனதைப் பொறுக்கிக்கொண்டு
மனமின்றிப் பிரிகிறேன்.
இன்ஷா அழ்ழாஹ்
மீண்டும் வருவேன்.

ஸன்ஸீர் இப்னு முஹம்மத்.
30.12.2015, புதன்.