விலையுயர்ந்த அனுபவம் ❤️
எனதருமை மகனே!
அநீதியெனும் நெருப்பை மூட்டி
ஈற்றில் அதிலேயே
கருகி சாம்பலாகி விடாதே!
நீதியில் இருந்து விலகினால்
நேரங் கடந்தபின்
குற்ற உணர்ச்சியிலே வருந்து.
திருந்தி வா!
கரைந்து காணாமல் போய் விடாதே!
"சுயநலம்" என்பது
உன் உள்ளத்தை ஆக்கிரமிக்கும்போது
"பகுத்தறிவு"
அங்கிருந்து வெளியேறி விடும்.
போக விடாதே! அது பேரிழப்பு.
கவனமாயிரு!
நேர்மையென்பது
ஒரு பெருஞ் சுமை.
சுமக்க முடியாதவர்கள் மட்டும்
அதன்கீழ் ஒருநாள்
சுக்குநூறாக
நொறுங்கிப் போவார்கள்.
எனதருமை மகனே!
"நேர்மை" என்ற ஒன்றை
நெஞ்சிலே நிலைப்படுத்து.
நேரான மரங்கள்தான்
முதலிலே வெட்டப்படுவதுபோல
நோகடிக்கப்படுவாய்.
நலிந்து விடாதே!
தோணியாவாய். தொட்டிலாவாய்.
கூரையாவாய். பாலமாவாய்.
வளைந்து நெளிந்த மரங்கள்
விறகாகத்தான் ஆகும்.
ஆதலால், நிமிர்ந்தே நில்!
இன்னொருவருக்குக் குழிபறிக்க
உன்னை மலையில் ஏற்றுவார்கள்.
பின்னாளில் அதே நிகழ்வு
உனக்கும் நடந்தேறும்.
அளவுக்கதிகம் புகழ்பவர்களிடம்
அவதானமாயிரு!
இறைவன் மீது
இசகு பிசகில்லாத நம்பிக்கை வை.
ஆரம்பத்தை விடவும்
இறுதிக் கணத்தில் தான்
உன் நம்பிக்கையை
அதீத அளவில் செறிக்கச் செய்!
இறுதிக் கணத்தில் தான்
இறைவனின் உதவி
வரலாறுகளில் இறங்கியிருக்கிறது.
எனதருமை மகனே!
கண்டபடி வாக்குக் கொடுக்காதே!
கொடுத்த வாக்கை மீறாதே!
கொடுக்காமல் இருப்பதே நல்லது.
வாயில் மார்கத்தையும்
வாழ்கையில் மூர்க்கத்தையும் கொண்டவர்களை
வேறு பிரித்து அறி!
வழிகெடுக்கும் நட்பை
விட்டு விலகு.
வேரோடு பிடுங்கி எறி!
"நீதி" என்பது,
இருபக்கமும் கூர்மையான
வாள் போன்றது மகனே!
நண்பர்கள், உறவுகளுக்கிடையில்
சில சந்தர்ப்பங்களில்
பிடித்திருக்கும் உன் கையைக் கூட
அது வெட்டும். கவலைப்படாதே!
ஆண்டவனின் அன்பில்
ஆறாததென்று எதுவும் இல்லை.
அவனது அன்பை ❤️ விடவும்
அகிலத்தில் பெரிதென்று
நமக்கு எதுவுமே இல்லை மகனே!
ஆயுள் முழுக்க அதனை நீ
மறந்து விடாதே!
.
.
முஹம்மத்❤️ஸன்ஸீர்.
09.12.2K21, வியாழன்.
No comments:
Post a Comment