பெருமையின் இரைப்பை : நரகம்.
அல்ஹம்துலில்லாஹ்
(புகழ் அல்லாஹ்வுக்கே உரியது) என்பதன்
ஆழ அர்த்தம் உணர்ந்து
வாழுகின்ற ஓர் உள்ளத்தில் ..
கடுகளவு தற்பெருமை கொண்ட ஓர் உள்ளம்,
சுவனம் நுழைய முடியாது.
(ஸஹிஹ் முஸ்லிம் 91)
என்ற நபிமொழி
நிலைபெற்றிருக்கும் ஓர் உள்ளத்தில் ....
அடுத்தவர் புகழும் போது ...
ஆனந்தத்தை விட
அதீத அச்சமே உண்டாகும்.
முகஸ்துதி செய்பவர்களைக் கண்டால்
அவர்கள் முகத்தில் மண்ணையள்ளி வீசுங்கள்
(ஸஹிஹ் முஸ்லிம் 7142)
என்பதன் பாதுகாப்பு எச்சரிக்கை
புலப்படுகிறதா?
தவிர்ந்து கொள்ளவும்
தவிர்த்துக் கொள்ளவுமே சொல்கிறது.
பாராட்டுதல் வேறு.
புகழுதல் வேறு.
பெருமை கொண்ட உள்ளத்தின்
புகலிடம் எது தெரியுமா?
சுவனத்தில்
மிக உயர் அந்தஸ்தில் வைக்கப்பட்டிருந்தவன்
அசாஸில் (ஷைத்தான்).
அவன் பூமிக்கு விரட்டியடிக்கப்பட்டதும்
தற்பெருமையும்,
அகம்பாவமும் கொண்டதினால் தான்.
....... அவன் (இப்லீஸு) மறுத்தான்;
ஆணவமும் கொண்டான்;
இன்னும் அவன் காஃபிர்களைச் சார்ந்தவனாகி விட்டான்.
(அல்குர்ஆன் : 2:34)
“நரகத்தின் வாயில்களுள் நுழைந்து விடுங்கள்;
என்றென்றும் அதில் தங்கிவிடுங்கள்”
என்று (அவர்களுக்குக்) கூறப்படும்;
பெருமை அடித்துக் கொண்டிருந்தோருடைய தங்குமிடம்
மிகவுங் கெட்டது.
(அல்குர்ஆன் : 39:72)
ஒரிரைவனுக்கே உரித்தான புகழை
சுயமாக எதையுஞ் செய்ய
சக்தியற்ற மனிதன்
நான் தான் செய்தேன்,
நானே பெரியவன் என்றெல்லாம்
உரிமைகொண்டாடுவதன் பேரிழப்பு
புரிகிறதா?
பெருமையே கொள்ளாத
பணிவான உள்ளம் பேணுதல் என்பது
பெரிய்ய போராட்டம்.
புகழ் எனும் பெருஞ்சுமையை
உரிமையாளனிடம் ஒப்படைத்தலே நலம்.
பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்.
“எங்கள் இறைவனே !
நீ எங்களுக்கு நேர் வழியைக் காட்டியபின்
எங்கள் இதயங்களை (அதிலிருந்து) தவறுமாறு செய்து விடாதே !
இன்னும் நீ உன் புறத்திலிருந்து
எங்களுக்கு (ரஹ்மத் என்னும்) நல்லருளை அளிப்பாயாக !
நிச்சயமாக நீயே பெருங் கொடையாளியாவாய் !”
(அல்குர்ஆன் : 3:8)
ஆமின்.
.
.
முஹம்மத்❤️ஸன்ஸீர்.
26.10.2K21, செவ்வாய்.
No comments:
Post a Comment