Saturday, January 15, 2022

நூலும் பட்டமும்.


பல ஆண்டுகளாகப் 

பக்கத்திலேயே இருந்தும்

நேரம் வரும்போது தான் 

சில நூல்களுடனான

நம் சந்திப்பு நாடப்படுகிறது.

எதனை நாம் தேடிக்கொண்டிருக்கிறோமோ

அதுவும் நம்மைத் தேடிக்கொண்டிருக்கிறது என்பது 

எவ்வளவு பெரிய உண்மை.


இதுவரை நாம் ஓடியோடிச் 

சேகரித்த, வாசித்த நூல்களில் சில

நம்மை மாயைப் பாதையில் கூட

அழைத்துச் சென்றிருக்கலாம்.

அது இன்னும் புரியாமலும் இருக்கலாம்.


நல்ல நூலோடு நட்புறவாடும்போதெல்லாம்

நமது உள்ளம் 

நெடுங்காலமாக நம்பிக்கொண்டிருந்த ஒன்றை

தலைகீழாகப் புரட்டிப் போடுகிறது.

ஆழ் கடலின் அடியிருட்டில் 

ஆனந்த வெளிச்சமும் தருகிறது.

அங்கிருந்து ஆகாய உச்சிக்கே

ஆன்மாவைக் கொண்டும் செல்கிறது.

நூல் நூலாகவும்

ஆன்மாவைப் பட்டமாகவும் ஆக்கிடுது.

ஆழம் புரிகையில் 

நூல்: வலிமையும், நீளமும் பெறுகிறது.


பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் 

பதியப்பட்ட ஒற்றை வசனம் 

உள்ளத்தைக் கழுவிச் சுத்தம் செய்யும் அளவிற்கு 

சக்தி படைத்த ஒன்றாக இருக்கிறதே, 

எப்படி?

ஸஹிஹ் புஹாரியைப் போல.

மௌலானா ரூமி (ராஹ்) இன் "கிதாபுல் மஸ்னவீ" போல ...

அதன் பிறப்பிடமும் புனிதமானது.


நல்ல ஹலாலான உணவொன்று 

நம்முள் நுழைந்து

நாடி, நரம்பு, தசை, சிந்தனையென்று

நாலாபக்கமுங் கரைந்து 

நல்ல பலனைத் தருகிறதே!

அதுபோலதான்

நாம் வாசிக்கும் நல்ல நூல்களும் 

நம்ம மொழியை, ஞானத்தை மேம்படுத்தி 

வாழ்வு முறையைச் 

சிறுகச் சிறுக சீர்படுத்தியிருக்கும்.

.

.

முஹம்மத்❤️ஸன்ஸீர்.

03.11.2K21, புதன்.


குறிப்பு: 

படத்தைக் கீழிருந்து மேல்நோக்கிப் படியுங்கள்.

ஒரு கோணத்தில் ஒரு விடயம் புரியவில்லை என்றால்,

இன்னொரு கோணத்தில் அதன் தெளிவும் ஆனந்தமும் இருக்கும்.

No comments:

Post a Comment