Monday, February 28, 2022

இயற்கையோடு ❤️ இணைந்த இல்லறம்.


ஒரு பாரம்பரிய துருக்கிய கூடாரத்தில் 

மூன்று பிரதான பகுதிகள் இருக்கும்.


1. கூரை

2. தரை

3. சுவர்


கூரை.

அரைக்கோள (Dome) வடிவத்தில் இருக்கும்.

அந்த அறைக்கோளக் கூரை

விரிந்து பரந்த 

வானத்தைக் குறித்து நிற்கும்.


28 உறுதியான, வளைந்த பலகைகள்

உச்சியில் ஒரு வலையத்துடன் இணைக்கப்பட்டு

கூரை ஆக்கப்பட்டிருக்கும்.

இந்த 28 வளைந்த பலகைகளும்

ஒரு மாதத்தின் 

28 சந்திர நாட்களைக் குறித்து நிற்கும்.


கோளத்தின் உச்சியில் 

வானம் தெரியக்கூடிய

வட்ட வடிவிலான 

ஒளிபுகக் கூடிய (Transparent) பொருளால் ஆன 

ஒரு பகுதி இருக்கும்.

(சிலவேளை மறைக்கப்பட்டிருக்கலாம்).

அதனூடாக மழை, வெயில், 

நிலவு, நட்சத்திரம் என்று 

அனைத்தையும் உள்ளிருந்து காண முடியும்.


தரை.

தடித்த கம்பளங்களால் ஆக்கப்பட்டிருக்கும்.

அது பூமியைக் குறித்து நிற்கும்.


சுவர்.

கூரைக்கும் தரைக்கும் 

இடையில் இருக்கும் சுவர்

மழை, மரம்,

ஆறு, அருவி

ஒளி, காற்று, வெயில், பனி போன்ற 

ஒன்றோடன்று பின்னிப் பிணைந்த

இயற்கை அம்சங்களையும்,

இரண்டறக் கலந்த 

இன்பம் துன்பம் என்ற 

வாழ்கையின் ஏற்ற இறக்கங்களையும்

பிரதிபலிக்கும் வகையில் 

பின்னப்பட்ட சிலாகைகளால் ஆக்கப்பட்டு

வானத்தையும் பூமியையும், 

இணைப்பது போல

ஒன்றோடொன்று பிணைக்கப்பட்டிருக்கும்.

அதுதான் வாழ்க்கை.


குளிர் மற்றும் விலங்குகள் போன்றன

உள்ளே வராத வகையில்

வெளிப்பக்கமாக சுவர் 

தடித்த, கம்பளங்களால் மூடப்பட்டிருக்கும்.

அதிலே ஒரு கதவும் இருக்கும்.

.

.

இன்டர்ஸ்டிங்காக இல்லையா?


உள்ளே இருக்கும்போதெல்லாம்

இயற்கையின், 

இறைவனின் நினைவு

இருந்துகொண்டே இருக்குமல்லவா?

தமது கூடாரத்தைக் கூட 

இறைவனை நினைவூட்டும் வகையில் 

இவ்வாறு அமைத்துக்கொள்வது

எவ்வளவு சிறப்பானது அல்லவா?


நமது வீடுகளில்

இவ்வாறான என்ன இருக்கிறது?

மேலே அஸ்பெஸ்டஸ் ஷீட் 

இல்லையேல் காங்கிரீட் ஸ்லப்.

திரைச் சீலைகளால் 

திரையிடப்பட்ட ஜன்னல்கள்.


எமது பெரியம்மாவின் களிமண் வீடும்

மண்முட்டித் தண்ணீரும்,

ஓலைக் கிடுகினால் பின்னப்பட்ட கூரையும்

அவற்றுக்குள் குடியிருந்த குளிர்ச்சியும் 

இன்னும் என் நினைவில் இருக்கிறது.


இன்று நமது வீடுகளில்,

ஷைத்தான் குடியிருக்கும் 

கிருமிகளைப் பரப்பக்கூடிய கழிவறைகள்

குடியிருக்கும் (Bedroom) அறைகளுக்கு 

மிக அருகிலேயே வந்துவிட்டதில்

பெருமை கொள்கிறது மனசு.

அடிக்கடி ஏற்படும் 

ஆரோக்கிய சீர்கேடுகளுக்கு 

அதுவும் ஒரு பிரதான காரணம்.


தேவைக்கு அதிகமாகக்

கட்டப்படும் அறைகளெல்லாம்

ஷைத்தானுக்குரியவை என்ற ஹதீஸை

சென்றவார ஜூம்ஆ குத்பாவில் 

சொல்லக் கேட்கிறேன்.

எதற்குமே உபயோகிக்காமல்

எத்தனை மாடிகள், எத்தனை அறைகள்.

யார் வாழ்கிறார் அதில்?


எவ்வளவோ பெரிய 

எடுப்பான வீட்டைத்தான் கட்டினாலும்,

தொழுவதற்கென்று, வாசிப்பதற்கென்று

தனியறை கூட கிடையாது.


இயற்கையான சூழலில் 

இருந்து செய்யப்படும் திக்ர்களுக்கு

இறைவன் பால் 

ஈர்க்கும் சக்தி அதிகம்.

.

.

முஹம்மத்❤️ஸன்ஸீர்.

25.02.2K22, வெள்ளி.

No comments:

Post a Comment