Monday, February 28, 2022

 முதல் விசிட்டிங் கார்ட்.

.


அம்பாறை, பாலமுனையைச் சேர்ந்த

ஒருவரின் பணப்பை (Purse) 

அக்கரைப்பற்றில் ஒருநாள் 

காணாமல் போகிறது. 


அதேநாள் வீடுவரும் வழியில் 

மோட்டார் டிராஃபிக் பொலிஸிடமும் 

மாட்டிக் கொள்கிறார். 

ஆவணங்கள் எதுவும் இல்லாததால்,

மோட்டார் சைக்கிள் பறிமுதலாகி 

பொலிஸ் பாதுகாப்போடு 

ஸ்டேஷனுக்குப் போக, 

பதபதைக்கும் மனசொடு

பஸ்ஸில் வீடு வந்து சேர்கிறார்.


வீடு வந்தவர்,

வேலைக்குஞ் செல்லாமல்.

வெளியேயும் செல்லாமல் முடங்கிக் கிடக்கிறார்.

.

.

ஒரு நாள் எனக்கு

ஒரு தொலைபேசி அழைப்பு வருகிறது.


"அஸ்ஸலாமு அலைக்கும்."


வ'அலைக்குமுஸ்ஸலாம்.


"தம்பி நீ...ங்க ஸன்ஸீர் ஆ ...?"


ஆமா, சொல்லுங்க.


"நான் நிந்தவூர்ல இருந்து சம்சுதீன் பேசுறன் தம்பி.

அக்கரப்பத்துக்கு ஹயர் ஒண்ணு போயிட்டு வரக்குள்ள

ரோட்ல ஒரு பெர்ஸ கண்டன்.

அதுல உரிய ஆள்ற டெலிபோன் நம்பர் இல்லம்பி.

அவர்ட்ட எண்ட நம்பர குடுத்து 

எனக்கு கோல் பண்ணச் சொல்லுங்களன்."


அவர்ட பெயர் என்ன மாமா?


"இர்ஷாத் ன்னு ஐடெண்டி கார்ட் ல இருக்கு."


அவர்ட பெயர்ல வேற ஏதாச்சும் இருக்குதா?


"இன்னொரு ஐடெண்டி கார்ட்டும் இருக்கு.

அதுல என்.ஓ.ஆர்.ஏ.டீ எண்டு மேல போட்டிருக்கு."


ஆஹ் ... அது "NORAD" NGO மாமா.

எனக்கும் ஆள சரியா தெரியல.

எதுக்கும் "நொராட்" ல விசாரிச்சு சொல்றன்.

அது சரி எண்ட நம்பர் உங்களுக்கு எப்படிக் கிடைச்சது?


"இவரு நிறைய கார்ட்ஸ் வெச்சிருக்காரு.

அதுகள்ல இருக்குற ஒரு நம்பரும் வேலை செய்யுதில்ல.

கடைசியா இருந்த ஒரு கார்ட்ல தா

உங்கட நம்பர் இருந்திச்சு."

என்று சொல்லிட்டு வெச்சிட்டார்.


என்னோட கார்ட் .... அவர்கிட்ட எப்படி?

என்ற கேள்வியை ஒருபுறம் வெச்சிட்டு


"நொராட்" ல தெரிஞ்ச ஒரு நண்பரிடம் 

தொலைபேசியில் விசாரித்தபோது

சில ஆண்டுகளுக்கு முதல் அந்த இர்ஷாத்

அங்கே வொலண்டியராக வேலை செய்ததாகவும்,

தற்போது அவர்

ஒலுவில் துறைமுகத்தில்

வேலை செய்வதாக ஒரு ஞாபகம் என்றும் துப்புக் கொடுத்தார்.

ஒலுவில் துறைமுகத்தில் 

தெரிந்த ஒருவரைத் தொடர்புகொண்டு வினவியபோது ...


ஆம் அவர் இங்கேதான் வேலை செய்கிறார். 

ஆனால் கடந்த மூன்று நாட்களாக 

ஆள் வேலைக்கு வரவில்லை என்றுங் கூறப்பட்டது.


அவரிடம் இருந்து

இர்ஷாத்தின் தொலைபேசி இலக்கம் பெற்று 

அவருக்கு அழைத்தபோது

மனுஷன் மகா சோகத்தில் உடைந்துபோயிருந்தார்.


காரணம்,

ஒரு தொகைப் பணமும்

வாகனம் சார்ந்த எல்லா ஆவணங்களும்,

தே.அ.அட்டையும்

பணம் இருந்த மூன்று வங்கி அட்டைகளும் 

அதிலேதான் இருந்திருக்கிறது.

அதனை விட 

அவரோட பெரிய கவலை என்னன்னா ...

ஒவ்வொரு வங்கி (Debit) அட்டைக்குமான 

ரகசிய PIN இலக்கத்தையும்

மறந்து போகாம இருக்கட்டும் ன்னு

அந்தந்த அட்டைப் பக்கட்டுக்குள்ளேயே

எழுதி வேறு வைத்திருக்கிறார்.


சரி 

உங்க பர்ஸ் பத்திரமா இருக்கு பிரதர்.

இந்த நம்பருக்கு கோல் பண்ணி 

பேசி வாங்கிக்கங்க என்றதும்

ரொம்ப சந்தோஷப்பட்டார்.


உங்க பெயர் என்ன ன்னு கேட்டார்


நான் "ஸன்ஸீர்" ன்னு சொன்னதும்.


சேர் நீங்களா?

நீங்க TDH (Terre des hommes) ல வெல செஞ்சீங்க தானே?

(எனது பெயர் புழக்கத்தில் மிகக் குறைவு

அதனால், கண்டுபிடிப்பது மிக இலகு).


ஆமா.


அப்றம் சம்சுதீன் நானவின் நம்பர் கொடுத்து

அவர் நிந்தவூர் போயி பர்ஸ வாங்கிட்டு வந்து

மறுபடியும் கோல் பண்ணி விபரம் சொன்னார்.

மகிழ்ச்சி ❤️

.

.

இந்த சம்பவத்தில் இருந்து

நான் ஆனந்தப்பட்டவைகள் இவைகள்தான்.


1. பர்ஸைக் கண்டெடுத்த சம்சுதீன் நாநா

தினசரி கொபெட்டா ஓட்டும் ஒரு கூலித் தொழிலாளி.

அரிதான நேர்மை 

அவரிடம் மிக மிக அதிகமாகவே இருந்தது.


2. ஆரோக்கியமான 

மனித - மனித இடைத் தொடர்புகள்

ஏதோவோரு வகையில் வாழ்வில்

எப்போதாவது உதவுகிறது.


3. யாரையும், எதையும் நாம்

நம்ம வாழ்க்கையில

காரணமே இல்லாமல் கடந்து வருவதில்லை.

தேவையில்லாதவர் என்று இங்கு யாருமேயில்லை.

.

.

ஒரு கேள்விய சொல்ல மறந்துட்டன்.


"ஆமா ....!

என்னோட விசிட்டிங் கார்ட் உங்ககிட்ட எப்படி வந்தது? 

என்று இர்ஷாத்திடங் கேட்டபோது ...


"நாலஞ்சு வருஷத்துக்கு முதல் 

நீங்க பாலமுனையில 

ஒரு பெற்றார் கூட்டத்துக்கு வந்து 

அருமையா பேசினீங்க சேர்.

அப்போ உங்ககிட்ட வாங்கினதுதான் சேர் அது.

பர்ஸ அப்பப்ப மாத்தும்போதெல்லாம்

மறக்காம அதையும் எடுத்து வெச்சிக்குவன்" என்றார். 


அல்ஹம்துலில்லாஹ்.

எனக்கது சத்தியமாக ஞாபகத்தில் இல்லை.

ஆனாலும், 

முதலாவது விசிட்டிங் கார்ட்

ஒருவரின் பர்ஸை மீட்டுக் கொடுத்து

மகிழ்ச்சி அளித்திருக்குது என்பது

மனசுக்கு ❤️ மகிழ்ச்சியாக இருந்தது.


சுக்றன் யா அல்லாஹ்.

.

.

முஹம்மத்❤️ஸன்ஸீர்.

26.02.2K22, சனிக்கிழமை.

No comments:

Post a Comment